தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம்...இந்தியாவுக்கு சாதகமா? | Steyn won't bowl further in first Test

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (07/01/2018)

கடைசி தொடர்பு:08:00 (07/01/2018)

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம்...இந்தியாவுக்கு சாதகமா?

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. 

ஸ்டெயின்


முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 93 ரன்கள் எடுத்தார். அடுத்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கி தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இதுவரை 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இப்போதைய நிலையில் இந்த டெஸ்டில் தென்னாப்பிரிக்காவின் கையே ஓங்கியுள்ளது எனலாம். தென்னாப்பிரிக்க அணி 350 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயித்தால் அது இந்திய அணிக்கு சிக்கலாகலாம்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயமடைந்த செய்தி கிடைத்துள்ளது. அவருடைய இடது குதிக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் டெஸ்டில் அவர்  இனி பந்துவீச மாட்டார். அத்துடன் காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு உடல் தகுதி பெற அவருக்கு 4 முதல் 6 வாரங்கள் தேவைப்படும் என்று தெரிகிறது. ஆகவே, அவர் இந்தத் தொடரில் இருந்து அவர் விலகக்கூடும்.

இது இந்திய அணிக்கு சாதகமாகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. ஸ்டெயின் முதல் இன்னிங்ஸில் 17.3 ஓவர்கள் பந்து வீசி 6 மெய்டன்களுடன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஷிகர் தவான், சாஹா ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு தான்.