வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (08/01/2018)

கடைசி தொடர்பு:09:45 (08/01/2018)

மீண்டும் கேப்டனாகக் களமிறங்கப்போகும் மேத்யூஸ்... தோல்வியின் பிடியிலிருந்து மீளுமா இலங்கை!

Angelo Mathews

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த ஓர் ஆண்டாகவே தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மெட்களிலும் தோல்வி மேல் தோல்வி. விளைவு, தொடர்ச்சியாக கேப்டனை மாற்றி, புதுப்புது உத்திகளைக் கையாண்டுவருகிறது அணி நிர்வாகம். ஆனால், எந்த உத்திக்கும் பழைய ரிசல்ட் மட்டும்தான் கிடைக்கிறது. இந்நிலையில், எல்லாம் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை அணி,  ஒருநாள் தொடரில் மண்ணைக் கவ்வியவுடன், அணியின் கேப்டனாக இருந்த மேத்யூஸ் பதவி விலகினார். அதன் பின்னர், உபுல் தரங்கா அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, பெரேரா கேப்டனாக உள்ளார். ஆனால் இலங்கை, வெற்றியை மட்டும் எட்டியபாடில்லை. 

 இக்கட்டான  இந்தச் சூழ்நிலையில்தான், புதிய பயிற்சியாளராக சந்திரிகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, அணியின் கேப்டனாக ஒருவர் நியமிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பையில் அவரே அந்தப் பதவியில் தொடர வேண்டுமென்ற எண்ணம் இருக்கிறது. அது, மேத்யூஸாக இருக்க வேண்டுமென்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேத்யூஸும், தான் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்கத் தயார் என்று கூறியுள்ளதாகத் தகவல். எனவே, சீக்கிரமே இலங்கை அணியை மேத்யூஸ் லீட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.