வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (08/01/2018)

கடைசி தொடர்பு:14:20 (08/01/2018)

பாண்டியா... ஹிட்டர்... ஆல் ரவுண்டர்... ஆபத்பாந்தவன்... அடுத்த கபில்?!

சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், கும்ப்ளே போன்ற வீரர்களுக்குக் கூட, அவர்களுக்கு நிகரான வீரர்களைத் தேர்வு செய்துவிடுவார்கள் போல... ஆனால், கபில் தேவ்  விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப இன்னமும் எவ்வளவு ஆண்டுகள் தேவைப்படுமெனத் தெரியவில்லை. அவர் இடத்தை நிரப்ப, இந்திய அணியும், கிரிக்கெட் போர்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறது. மனோஜ் பிரபாகர் தொடங்கி ராபின் சிங், இர்ஃபான் பதான், ஸ்டூவர்ட் பின்னி வரை யாரெல்லாம் உள்ளூர் போட்டிகளில் மிதவேகமாக பந்துவீசி கொஞ்சம் ரன்களும் அடித்துவிட்டால், அவருக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து, கபில் தேவ் இடத்தை கொஞ்சமேனும் பூர்த்தி செய்துவிட மாட்டார்களா என்கிற ஏக்கத்திலேயே பல வருடங்கள் கடந்துவிட்டது.

ஹர்திக் பாண்டியா


ஒவ்வோர் அணிக்கும் நல்ல பௌலிங் ஆல்ரவுண்டர் அவசியம். டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளுக்கு 15 முதல் 20 ஓவர்கள் வீசுவதோடு, அணி தள்ளாடும் நேரத்தில் தடாலடியாக 40 ரன்களை அடிக்கக்கூடிய வீரர் ஒருவர் மட்டும் இருந்துவிட்டால், அந்த அணி உலகில் யாரையும் எதிர்த்து சவால் விடக்கூடிய அணியாக உருவாகிவிடும்.

விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்ற நாளிலிருந்து, ஹர்திக் பாண்டியா மீது அளவற்ற நம்பிக்கையை விதைத்து வருகிறார். கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், பழைய வீரர்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா போன்றவர்களை அணியில் சேர்த்துக்கொண்டார். அதற்கு முன்பே, நியஸிலாந்துக்கு எதிராக, தோனியின் தலைமையில் தரம்சாலா மைதானத்தில் இரண்டாவது வீரராக பாண்டியா பந்துவீச துணிந்தபோதே, கோலி அவரை நோட் செய்திருக்கக்கூடும்.

ஐந்தாவது பெளலர் என்ற இந்திய அணியின் மிகப்பெரிய பிரச்னையை பாண்டியா தன் தோளில் தாங்கிக்கொள்கிறார் என்றால் அது மிகையில்லை. துல்லியமாக 130+ கி.மீ வேகத்தில் வீசுவதுடன், அவ்வப்போது சடாரென்று ஒரு பௌன்சரை வீசி, “என்னை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்துவிட முடியாது” என, கண்களின் மூலமாகவே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வீரனாக பாண்டியா உருவாகியிருப்பதே பெரிய ஆறுதல்.

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 92-7 என தள்ளாடிக்கொண்டிருந்தபோது, “டெக்னிக் எல்லாம் வைத்துக்கொண்டு அடித்தால் நம்மை அவுட் செய்துவிடுவார்கள். அடிப்பதுதாண்டா டெக்னிக்...” என்று இறங்கி அடித்த ஐந்து ஓவர்களில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதுவரை வீசி வந்த லைனை மாற்றிவேறு விதமாக யோசிக்கத் தொடங்கினர். அப்படி அவர்கள் யோசித்து வேறொரு லைனை பிடிப்பதற்குள், பாண்டியா 50 ரன்களைக் கடந்திருந்தார்.

பாண்டியா

பௌன்சர் வீசினால் கீப்பரின் தலைக்கு மேல் Upper cut, ஃபுல் லென்த்தில் வீசினால் டிரைவ், ஷார்ட்டாக வீசினால் புல் ஷாட் என தனக்கெதிராக அமைத்த அத்தனை வியூகங்களையும் அடித்து நொறுக்கினார்.  ரஞ்சிப் போட்டிகளில் 20-க்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஒருவரின் மீது எப்படி நிர்வாகமும் அணியின் தலைவரும் நம்பிக்கை வைக்கிறார்கள் என்று கேள்வி கேட்காத ஆளே இல்லை. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் கிளப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய வீரர். அவர் ஆஸ்திரேலியாவின் முதல்தர போட்டிகளில் கூட பெரிதும் சோபிக்காத நிலையில், தென்னாப்பிரிக்காவுடனான இருபது ஓவர் போட்டியில் களமிறக்கப்பட்டார். அன்று ஸ்டெய்ன் போட்ட பந்துகளைப் பறக்கவிட்டார். பாண்டியா, வார்னர் போன்றவர்கள் எப்போதோ ஒருமுறை வான்வெளியில் நிகழும் அற்புதங்கள்!

ஒரு விவாதத்திற்காக... பாண்டியா அடித்தபோது பந்து கிட்டத்தட்ட 50 ஓவர்கள் பழையதாகிவிட்டது. ஆட்டம் இரண்டாவது நாளில் இரண்டாவது செஷனை அடைந்து பேட்டிங்குக்கு சாதகமானது. ஸ்டெய்ன் இல்லை... இப்படி வரிசையாக அது இல்லை, இது இல்லை என்று அடுக்கினாலும், பாண்டியாவைத்தவிர யார் அடித்தார்கள்? யாரும் இல்லை.

ஸ்கோர் 92/7 என இருந்தபோது தனியாளாக 93 அடித்து, அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்லாமல், இந்த டெஸ்ட் போட்டியின் மீதமுள்ள இரு நாள்களுக்கும், அடுத்து நடக்கவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் இந்திய வீரர்களுக்குப் பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் பாண்டியா. எதிரணியின் பந்துவீச்சு ஒன்றும் பாகுபலியின் படை இல்லை. அடித்து ஆடினால் எதுவும் சாத்தியமே என நம்பிக்கையளித்த பாண்டியா, மற்றொரு கபில் தேவாக உருவாகத் தேவையில்லை. வெறும் பேட்டிங் அல்லது பௌலிங் மட்டுமே போடும் பத்து வயது சிறுவர்கள் ஷூ லேஸைக் கட்டும்போது, “நானும் பாண்டியாவைப்போல ஆல்ரவுண்டராக மாறுவேன்” என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டோலே போதும், அதுவே பாண்டியாவின் வெற்றிதான்!