வெளியிடப்பட்ட நேரம்: 03:58 (09/01/2018)

கடைசி தொடர்பு:08:21 (09/01/2018)

`தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கில சொதப்பினாங்கதான...' - தில் விராட் கோலி

கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டி முடிந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட்குறித்து தனது கருத்துகளைக் கூறினார்.

விராட் கோலி

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் சோபிக்காததால், இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள்கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது.

முதல் டெஸ்ட்டுக்குப் பின்னர் செய்தியாளர்கள் முன் கோலி, `தென்னாப்பிரிக்காவிடம் இருக்கும் பௌலிங் மூலம் கேப் டவுன் போன்ற ஆடுகளத்தில் அதிக பௌன்ஸ் கிடைக்கிறது. அதனால், ஒரு பந்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே முடியாது. இந்த வெற்றிக்கு அவர்களின் பௌலர்களைத்தான் பாராட்ட வேண்டும். அனைத்து ஓவர்களிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே விக்கெட்டை இழக்காமல் ஆட முடியும்' என்று கூறியவர், `இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நாங்கள் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கில் சொதப்பவே செய்தார்கள். அவர்களின் முதல் இன்னிங்ஸைப் பொறுத்தவரை, டிவில்லியர்ஸ் மற்றும் டூப்ளிசிஸ் ஆகியோரின் ஆட்டத்தைத் தவிர அவர்களின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்தப் போட்டி முழுவதும் வெற்றி பெற எங்களுக்கு சம வாய்ப்பு இருந்ததாகவே கருதினோம். மீண்டும் இந்தப் போட்டிக்குக் கிடைத்ததுபோலவே ஒரு பிட்ச் கிடைத்தால், அதை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோம். இன்னும் பொறுப்புடன் விளையாடினால், அடுத்த போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமையும்' என்றார் உறுதியாக.