வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (09/01/2018)

கடைசி தொடர்பு:15:27 (09/01/2018)

கோலிக்கு வீசிய அந்த 13 பந்தில் பிலாண்டர் செய்த மேஜிக்! #SAvsIND

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் (#SAvsIND). நான்காம் நாள். இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா பேட்டிங். முகமது ஷமி வீசிய பெளன்ஸரை அலட்டாமல் தேர்டு மேன் ஏரியாவில் சிக்ஸர் அடித்தார் டி வில்லியர்ஸ். இதை எதிர்முனையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் டு பிளெஸ்ஸி. இந்த ஷாட்டைப் பார்த்து, ஒரு பெளலர் தவறு செய்யும்போது, எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை டி வில்லியர்ஸிடமிருந்து டு பிளெஸ்ஸி பாடம் கற்றிருக்கலாம். ஆனால், டு பிளெஸ்ஸி வேடிக்கை மட்டுமே பார்த்தார். அதன் வினையை அடுத்த ஓவரில் அனுபவித்தார். பும்ரா 141 கி.மீ வேகத்தில் குட் லெந்தில் வீசிய பந்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பெளன்ஸ். திக்குமுக்காடிப்போனார் டு பிளெஸ்ஸி. பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. டு பிளெஸ்ஸி அவுட். டக் அவுட். 

டு பிளெஸ்ஸி - டி வில்லியர்ஸ் ஜோடி முதல் இன்னிங்ஸில் குவித்த 100+ ரன் பார்ட்னர்ஷிப், கேப்டவுன் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற முக்கியக் காரணங்களில் ஒன்று. இத்தனைக்கும் முதல் இன்னிங்ஸில் முதல் அரை மணி நேரத்துக்குள் டாப் ஆர்டரை பெவிலியனுக்கு அனுப்பிவைத்திருந்தார் புவனேஷ்வர் குமார். இக்கட்டான நேரத்திலும் டி வில்லியர்ஸ் இயல்பாக இருந்தது ஒருபுறம் இருந்தாலும், டு பிளெஸ்ஸி ரொம்பவே நிதானமாக தனக்கான தருணத்துக்காகக் காத்திருந்தார்.

#SAvsIND Philander


டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மாதிரி நேரத்தில், களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் அடித்து எடுக்கும் ஒவ்வொரு ரன்னும், அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். எட்ஜாகி அது பவுண்டரிக்கே சென்றாலும், பேட்ஸ்மேனுக்கு ஒரு குற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். முதல் இன்னிங்ஸில் டு பிளெஸ்ஸி, டி வில்லியர்ஸ் எடுத்த பெரும்பாலான ரன்கள் அடித்து எடுக்கப்பட்டவை. எட்ஜ் மூலம் வந்தவை அல்ல. இது ஒருபுறம் இருக்கட்டும். இந்திய பேட்ஸ்மேன்களுக்குத் தென்னாப்பிரிக்க பெளலர்கள் இரு இன்னிங்ஸிலும் இப்படியொரு வாய்ப்பு தரவில்லை. பாண்டியா சதத்தை நெருங்குகிறார் என்றதும், ரபாடா, மோர்கல் இருவருமே around the stick-ல் இருந்து பெளன்ஸர்களை ஏவினர். பாண்டியா திக்குமுக்காடினார். சதத்தையும் இழந்தார்... ஒரு சின்ன ட்ரிக்தான்... விளைவு பெரிது. இப்படி சின்னச்சின்ன யுக்திகளை இந்த டெஸ்ட் முழுவதும் தென்னாப்பிரிக்க அணியினர் பிரயோகிக்கத் தவறவில்லை.

இரண்டாவது இன்னிங்ஸ். மோர்னே மோர்கல் வீசிய முந்தைய பந்தைத் தொடாமல் விட்டார் புஜாரா. அதற்கு கோலி தம்ஸ் அப் காட்டினார். அடுத்த பந்து. கிட்டத்தட்ட அதே வேகம். அதே லைன். லைன் அண்ட் லெந்த் பக்கா. ஸ்ட்ரெய்ட் பேட் போட்டார் புஜாரா. எட்ஜ். காட் பிகைண்ட். சிவனேன்னு அதையும் தொடாமல் விட்டிருக்கலாம். அல்லது ஃபேக் ஃபுட் எடுத்து கிராஸ் பேட் போட்டிருக்கலாம். ஸ்ட்ரெய்ட் பேட் போட்டதால் விக்கெட்டை இழந்தார் புஜாரா. முரளி விஜயும் இதே மாதிரி கிராஸ் பேட் போட வேண்டிய இடத்தில் ஸ்ட்ரெய்ட் பேட் போட்டு விக்கெட்டை இழந்திருந்தார். கோலிக்கும் இதே அச்சுறுத்தல்தான். ஆனால், அவர் நேக்காக கிராஸ் பேட் போட்டு ஆடியதால் தப்பித்தார். கிராஸ் பேட் என்பதும் சின்ன ட்ரிக்தான். இங்கேயும் பலன் பெரிது. ஆனால், கோலிக்கு பிலாண்டர் வேறு பிளான் வைத்திருந்தது தனிக்கதை. 

20 சதவிகித ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா 30 சதவிகித விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்தியாவின் முதல் 50 ரன்களில் ஒரு பவுண்டரி கூட பிரம்மாதமான ஷாட் மூலம் வந்தவை அல்ல. விராட் கோலியின் பவுண்டரிகளிலும் கூட திருப்தி இல்லை. பந்து அப்படி. மோர்கல் போட்டது ஷார்ட் பால்தான். ஆனால், கொஞ்சம் பெளன்ஸர். இதுவே இந்திய பிட்ச்சாக இருந்தால் ரோஹித் இழுத்த இழுப்புக்கு பந்து டீப் மிட் விக்கெட் திசை நோக்கி பறந்திருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் அப்படியில்லை. ரோஹித்தின் புல் ஷாட்டுக்குப் பந்து சிக்கவில்லை. அடக்கி வாசித்தார் ரோஹித்... அல்ல, அல்ல அடக்கி வைத்திருந்தனர் தென்னாப்பிரிக்க பெளலர்கள். ரோஹித்தை மட்டுமா?!

#SAvsIND Philander


இரண்டாவது இன்னிங்ஸில் கோலிக்கு பிலாண்டர் வீசியது 13 பந்து. அதில் 11 பந்துகள் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்டவை. வெளியே என்றால் ரொம்ப வெளியே இல்லை. அதேநேரத்தில் டிரைவ் செய்வதற்கு ஏதுவான இடத்திலும் பந்தை பிட்ச் செய்யவில்லை. ஏனெனில், டிரைவ் செய்வதில் கோலி புலி. கட் ஷாட் அடிக்கவும் வாய்ப்பில்லை. அதற்கேற்ற டெலிவரியும் இல்லை. ஷார்ட் பாலும் இல்லை. சொல்லிவைத்தாற்போல, 13 பந்தும் ஒரே இடத்தில் பிட்ச்சானது. அதாவது ஸ்டம்ப்பிலிருந்து 6 -8 மீட்டர் இடைவெளிக்குள்... அதுவும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஒரே லைனில்... குறிப்பாக ஒரே பேட்ஸ்மேனுக்கு... வாட்டே பியூட்டி! அழகு மட்டுமல்ல அதிசயம்... அதிசயம் மட்டுமல்ல ஆச்சர்யம். ஆம், எல்லாமே, பக்கா பிளானிங்! 

என்னடா இது... டிரைவ் செய்யவும் வழியில்லை. ரிஸ்க் எடுக்கவும் வழியில்லை... கோலி எரிச்சலைடந்தார். ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்ப்பிலிருந்து விலகிவந்து எதிர்கொள்ள வேண்டிய நிலை. 20-வது ஓவரில் ஐந்தாவது பந்து. ஒரு வழியாக, லைனும் லென்த்தும் பிடிபட்டது. ஒரு பஞ்ச். சிங்கிள். கோலி நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். பிலாண்டரும் நிம்மதியடைகிறார். தன் பந்தை அடித்தற்கு எந்த பெளலராவது நிம்மதியடைவாரா? பிலாண்டர் நிம்மதியடைந்தார். ஏன்... காரணம், இருக்கிறது. பிலாண்டர் வீசிய வலையில் சிக்கிவிட்டார் கோலி. அப்படியா...? இல்லையே... ரபாடா வீசிய அடுத்த ஓவரை நிதானமாகத்தானே எதிர்கொண்டார். பின்  எப்படி? ஹா ஹா ஹா... கோலியின் விக்கெட்டை எடுக்க  நேர்ந்துவிடப்பட்ட ஆள்... ரபாடா இல்லை, பிலாண்டர்! ஆம், கோலியை வீழ்த்தும் அசைன்மென்ட்டை வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்டவர் அவர். அதற்கான ஹோம்வொர்க்கை பக்காவாக செய்திருந்தார் (பிரஸ் மீட்டில் அதைக் குறிப்பிட்டிருந்தார்). அதை எக்ஸிகியூட் பண்ணும் தருணத்துக்காக காத்திருந்தார். அந்தத் தருணமும் வந்தது.  

#SAvsIND Virat kohli


22-வது ஓவரில் மீண்டும் கோலி vs பிலாண்டர். மீண்டும் அதே லைன். அதே லென்த். ரன்னில்லை.  முதல் பந்து அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் நோக்கி வருகிறது. ஸ்டம்ப்பிலிருந்து விலகி கவர் திசை நோக்கி ஒரு Push. அடுத்த பந்து ஸ்டம்ப்புக்கு கொஞ்சம் வெளியே. கோலி தடுத்து விட்டார். அடுத்த பந்து மீண்டும் ஸ்டம்ப்புக்கு வெளியே... கோலி அதைத் தொடவில்லை. நான்காவது பந்து. அதே லைன், அதே லென்த். ஆனால், லேசாக ஸ்விங் ஆன பந்து, கோலியின் முன் காலின்  pad-ல்  பட்டது. பிலாண்டர் கத்துகிறார். தென்னாப்பிரிக்க வீரர்கள் கத்துகிறார்கள். ரசிகர்கள் கத்துகிறார்கள். நடுவர் விரலை மேல்நோக்கி தூக்கி விட்டார். அவுட். கோலி அவுட். இந்தியா அவுட்! கோலியால் நம்பமுடியவில்லை. ரோஹித்தால் நம்பமுடியவில்லை. இந்திய ரசிகர்களால் நம்பமுடியவில்லை. நம்பித்தான் ஆக வேண்டும். Pitching - out side off. Impact - on line. wickets - hitting... எல்லாமே சரியாக இருக்கிறது. தப்ப முடியாது. பந்து லெக் ஸ்டம்ப்பைத் தகர்க்கும். அது நமக்குத் தெரிந்தது. பிலாண்டருக்குத் தெரிந்திருந்தது. தென்னாப்பிரிக்க வீரர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், எதிர்முனையில் இருந்த ரோஹித்துக்குத் தெரியவில்லை. ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்! கோலி, ரோஹித்திடம் பேசுகிறார். ரிவ்யூ கேட்கிறார். ரிவ்யூ தோல்வியடைந்தது. கோலி தோல்வியடைந்தார்.  இந்தியா தோல்வியடைந்தது. பிலாண்டர் வென்று விட்டார். கோலியை வென்று விட்டார். இந்தியாவை வென்று விட்டார். ஆட்ட நாயகன் விருதையும்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்