ஊக்கமருந்து புகார்! யூசுஃப் பதானுக்கு 5 மாதம் தடை

தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்திய புகாரில், கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 5 மாதம் தடை விதித்துள்ளது. 

Yosuf Pathan


இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான்,  2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 

யூசுஃப் பதான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி, டெல்லியில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டியில் பங்கேற்றார்.  போட்டிக்கு முன்னர் அவரிடமிருந்து ஊக்க மருந்து தடுப்புச் சோதனைக்காக சிறுநீர் மாதிரி பெறப்பட்டது. சோதனையில், 'டெர்பூட்டலைன்' என்ற தடைசெய்யப்பட்ட வேதிப்பொருளை பதான் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. இது, வழக்கமான இருமல் 'சிரப்'களில் கலந்திருக்கும். யூசுஃப் பதான் கவனக்குறைவாக இதைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால், இது சர்வதேச ஊக்கமருந்து ஆணையத்தால் தடைசெய்யப்பட்ட பொருளாகும்.

ஆகவே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அவர்மீது விசாரணை நடத்தியது. அப்போது யூசுஃப் பதான் தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவித்தார். அவர், கவனக்குறைவாகவே அந்த மருந்தை எடுத்துக்கொண்டார் என்பது விசாரணையில் உறுதியானது. எனினும், விதிகளுக்குக் கட்டுப்பட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யூசுப் பதானுக்கு 5 மாதம் தடை விதித்தது. 

விசாரணை தொடங்கிய கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து யூசுஃப் பதான்  தடையில் இருந்துவந்தார். அந்த வகையில், அவருக்கு விதிக்கப்பட்ட 5 மாத தடைக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகிறது. ஆகவே, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் யூசுஃப் பதான் விளையாட தடை இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!