10 ரன் அடித்த பப்பு யாதவ் மகனுக்கு இடம்; டாப்ஸ்கோரர் 'அவுட்'!

ஒரு போட்டியில் கூட விளையாடாத பீகார் எம்.பி பப்புயாதவின் மகன் டெல்லி டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட,‘அணியின் டாப் ஸ்கோரர் கழற்றி விடப்பட்டுள்ளார். 

பப்பு யாதவ் மகன் சர்தாக் ரஞ்சன்

சர்ச்சைக்குரிய எம்.பி பப்புயாதவின் மகன் சர்தாக் ரஞ்சன், கிரிக்கெட் மீது விருப்பம் இல்லாமல் அதிலிருந்து ஒதுங்கிவிட்டதாகச் சொல்லப்பட்டது. பாடி பில்டிங்கில் ஈடுபட்டு மிஸ்டர் இந்தியா பட்டம் பெறுவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதனால், ரஞ்சி தொடருக்கான டெல்லி அணியில் இருந்து விலக்கப்பட்டார். நடப்பு சீசனில் அவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. 

இந்நிலையில், பப்புயாதவின் மனைவியும் எம்.பியுமான ரஞ்சித், டெல்லி கிரிக்கெட் வாரிய நிர்வாகி விக்ரம்ஜித் சிங்குக்கு ஒரு இமெயில் அனுப்பியிருந்தார். அதில், ''தன் மகன் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்ததால், கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். தற்போது, அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார். அணியில் சேர விருப்பம் இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, சையத் முஸ்டாக் தொடரில் விளையாடவுள்ள 23 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி டி-20 அணியில் பப்பு யாதவின் மகனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தக்கவேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், கடந்த தொடரில் 468 ரன்கள் விளாசிய டெல்லி வீரர் ஹிட்டன் தலால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதுதான். இவர், ஒரு சதம், மூன்று அரை சதம் விளாசியிருந்தார். சராசரி 52, ஸ்ட்ரைக் ரேட் 91.58. 

கடந்த முஸ்டாக் அலி தொடரில் விளையாடிய பப்பு யாதவின் மகன் மூன்று போட்டிகளில் தலா 5,3,2 ரன்களையே எடுத்தார்.  மொத்தமே 10 ரன்கள்தான் அவர் எடுத்துள்ளார். எனினும், பப்பு யாதவின் மகனுக்கு அணியில் இடம் அளித்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

பீகார் அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசியல் செல்வாக்கால் கிரிக்கெட் அணியில் இடம் வாங்கிக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. லாலுவின் மகனும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்கூட கிரிக்கெட் வீரர்தான். 7 ரஞ்சிப் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 37 ரன்கள்தான் எடுத்துள்ளார். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 4 ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட தேஜஸ்வி ஐ.பி.எல். தொடரில் ஒரு போட்டியில்கூட களம் கண்டதில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!