வெளியிடப்பட்ட நேரம்: 08:37 (10/01/2018)

கடைசி தொடர்பு:10:07 (10/01/2018)

இந்த ஆர்.சி.பி மட்டும் ஏன் திருந்துவதேயில்லை...! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும் பாகம் -2

பாகம் - 1 : கம்பீர், தவான் வெளியே...சர்ஃபராஸ் உள்ளே.. அணிகளின் பிளான் என்ன?

‘என்னப்பா கெய்லை ரீடெய்ன் பண்ணாம, சர்ஃபராஸப் பண்ணியிருக்காங்க...’ ராயல் சேலஞ்சர்ஸின் இந்த முடிவு விவாதத்துக்குள்ளானது. ரஹானே தக்கவைக்கப்படாததும் பலரை ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், கம்பீர் விஷயத்தில் கொல்கத்தா எடுத்த முடிவுதான் நெகடிவ் விமர்சனங்களுக்குள்ளானது. ஒருவகையில் பார்த்தால், இந்த 3 அணிகளுமே retention-ல் சரியாக செயல்படவில்லை. கெய்ல், கம்பீர் விஷயத்தில் முடிவுகள் சரிதான். ஆனால்...! அலசுவோம்... #IPLAuction

கம்பீர் - #IPL

2011-ம் ஆண்டு இதேபோல் வீரர்களைத் தக்கவைக்கும் சூழ்நிலை வந்தது. டிராவிட், காலிஸ், ஸ்டெய்ன் போன்ற வீரர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு இளம் விராட் கோலியை மட்டும் தக்கவைத்தது ஆர்.சி.பி. அந்த 3 ஆண்டுகள் இருந்த பெங்களூரு அணிக்கும், அடுத்த 7 ஆண்டுகள் ஆடிய பெங்களூரு அணிக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஜாஹிர் கான், டேல் ஸ்டெய்ன், பிரவீன் குமார், வினய் குமார், கும்ப்ளே போன்ற பௌலர்கள் விளையாடினர். பேட்டிங் சொதப்பல்களால் தோற்றது. நான்காவது சீசனிலிருந்து கெய்ல், கோலி, டிவில்லியர்ஸ், தில்சன் என பேட்ஸ்மேன்களை வாங்கிக் குவித்துவிட்டு பௌலிங்கில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். நல்ல பௌலர்கள் இருந்தாலும் ஓரிருவர் மட்டுமே இருப்பர். ஐந்தாவது பௌலராக ஹர்ஷல் படேல், அபு நெகிம் போன்றோர் இருந்தால் எப்படி கோப்பையை வெல்ல முடியும்?

10 சீசன்களில் ஒருமுறைகூட கோப்பையை வெல்லவில்லை. இந்த முறையேனும் சரியான திட்டமிடலுடன் களம் கண்டிருக்கவேண்டும். சாஹல், ஸ்டார்க் போன்ற பௌலர்கள் இருந்தும் அவர்களைவிட்டுவிட்டு சர்ஃபராஸ் கானை தக்கவைத்திருக்கிறார்கள். RTM கார்டு மூலம் அவர்களை ஏலத்தின்போது தக்கவைத்துக்கொள்ள முடியும்தான். ஆனால், 7 கோடிக்கும் குறைவாகப் போவார்களா? நிச்சயம் வாய்ப்பு குறைவு. 20 ஓவர் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களின் அவசியத்தை அனைத்து அணிகளும் நன்கு உணர்ந்திருக்கின்றன. 

சஹால் - IPL

கடந்த சீசனில், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 5-ம் இடத்திலிருந்த இம்ரான் தாஹிர் (12 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்), 6-ம் இடத்திலிருந்த ரஷித் கான் (14 போட்டிகளில் 17 விக்கெட்டுகள்) இருவருமே லெக் ஸ்பின்னர்கள்தான். அவர்களுக்கு அடுத்து அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்பின்னர் - பவன் நெகி (12 போட்டிகளில் 16 விக்கெட்டுகள்). ஆல்ரவுண்டர். பெங்களூரு அணியின் வீரர்தான். ஆனால், குறைந்த விலைக்கு வாங்கிட முடியும். wrist ஸ்பின்னராக இருந்திருந்தால் கிராக்கி அதிகமாக இருந்திருக்கும். இந்நிலையில், சாஹலை அவ்வளவு எளிதில் RTM பயன்படுத்தி பெற்றிட முடியாது. ஆனால், எளிதாக சர்ஃபராஸ் கானை எளிதில் தக்கவைத்துக்கொண்டிருக்க முடியும். இது மிகவும் தவறான முடிவு. 

எஞ்சியிருக்கும் 2 RTM கார்டுகளில் எப்படியும் ஒன்றினை கே.எல்.ராகுலுக்குப் பயன்படுத்துவர். இரண்டாவது கார்டு கெய்லுக்குப் போனாலும் போகலாம். முழுவதும் பேட்ஸ்மேன்களாக தக்கவைத்துவிட்டு, கடந்த ஆண்டு தைமல் மில்ஸுக்கு செலவு செய்ததுபோல் ஒரு வெளிநாட்டு பௌலர்களுக்கு செலவு செய்துவிட்டு, மிச்சத் தொகையில் அனுபவம் இல்லாத பௌலர்களை வைத்துத் திண்டாடப் போகின்றனர். ஏலத்தில் மற்ற அணிகளைவிட இவர்கள் எச்சரிக்கையாக வீரர்களை வாங்கினால் மட்டுமே இனியேனும் கோப்பையைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

ராஜஸ்தான் அணியும் ரஹானேவைத் தக்கவைக்காமல் தவறு செய்துள்ளது. ரூ.12.5 கோடிக்கு ஸ்டீவ் ஸ்மித் தக்கவைக்கப்பட்டுள்ளார். கூடவே, ரூ.8.5 கோடி செலவு செய்திருந்தால் ரஹானேவையும் தக்கவைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட தொகைக்கு நியாயம் சேர்த்ததுபோல் இருந்திருக்கும். என்னதான் தலைசிறந்த பேட்ஸ்மேனாக இருந்திருந்தாலும், 12.5 கோடி என்பது ஸ்மித்துக்கு கொஞ்சம் அதிகம்தான். வெளிநாட்டு வீரர் என்பதால் குறைந்த தொகைக்குத்தான் ஏலம் போயிருப்பார்.  

ரஹானே ஐ.பி.எல்

ஆனால், இந்திய வீரர் என்பதால் ரஹானே அதிக தொகை பெறக்கூடியவரே. அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் அவரது செயல்பாடு மிகவும் நன்றாகவே இருந்திருக்கிறது. ஏலத்தில் அவர்  8.5 கோடிக்கும் குறைவாகப் போவாரா? அப்படிப் போனால் ராஜஸ்தான் அணி RTM கார்டைப் பயன்படுத்துமா? ஒருவேளை முதல் சீசனைப்போல், ஒரு அனுபவ கேப்டன்...அவரைச் சுற்றி இளம் இந்திய வீரர்கள் என்ற ஃபார்முலாவை பின்பற்றப் போகிறார்களோ என்னவோ! 

கம்பீர்... கொல்கத்தா அணி எடுத்த முடிவு சரியானதே. கம்பீரைத் தக்கவைத்திருந்தால் கூடுதலாக 12 கோடி செலவு செய்ய வேண்டியிருந்திருக்கும். அது கண்டிப்பாக அநாவசியமான செலவு. ஏலத்தில் மிகவும் குறைவான தொகைக்கு எடுத்துவிடலாம். அந்த வகையில் அவர்களின் இந்த முடிவில் தவறொன்றும் இல்லை. "என்ன இருந்தாலும், 2 கோப்பை வாங்கிக்கொடுத்த கேப்டன். அவருக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடுத்திருக்கணும்" என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். இது கொல்கத்தா... கங்குலியே கழட்டிவிடப்பட்டார்! ஷாரூக் கானுக்கு கம்பீர் எம்மாத்திரம். 'தோனிதான் சூப்பர் கிங்ஸின் அடையாளம்' என அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ஓப்பனாக சொல்வார். ஷாரூக் அப்படிச் சொல்வாரா? 'நான்தான் என் அணியின் அடையாளம்' என்று சொல்லக்கூடியவர். கம்பீருக்கு 'சிம்பதி' எதிர்பார்ப்பதெல்லாம் அங்கு வேலைக்காகாது.

அதேசமயம், சுனில் நரைனைத் தக்கவைத்ததில் அந்த அணி தவறு செய்துள்ளது. அவரைத் தக்கவைக்க அந்த அணி செலவு செய்தது 12.5 கோடி ரூபாய். கடந்த சீசனில் 16 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். குல்தீப் யாதவ் அவரைவிட அதிக விக்கெட்டுகள் (12 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்) வீழ்த்தினார். நரைனின் பேட்டிங்கை காரணமாகச் சொல்லலாம். கன்சிஸ்டென்ஸி...? அதற்கு கிறிஸ் லின் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருந்திருப்பார். ஃபிட்டாக இருந்தால், கிறிஸ் கெய்ல் அளவுக்கு கிறிஸ் லின் சோபிப்பார். தக்கவைத்த இருவரும் வெளிநாட்டு வீரர்கள் என்பதால், லின்னை வாங்க RTM கார்டையும் பயன்படுத்த முடியாது.

நரீன் ஐ.பி.எல்

மனீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் என 3 டாப் இந்திய வீரர்கள் இருந்தபோதிலும், 2 வெளிநாட்டு வீரர்களைத் தக்கவைத்தது கேள்வி எழுப்புவதாக உள்ளது. ஆண்ட்ரே ரஸ்ஸல் - தக்கவைப்பதற்கான மிகச்சிறந்த சாய்ஸ். நிச்சயம் அவட் தக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும். மற்ற ஒருவரோ, இருவரோ இந்தியர்கள் யாரையேனும் அவர்கள் தக்கவைத்திருக்கலாம். RTM கார்டு பயன்படுத்தி அவர்களைத் தக்கவைக்க முயற்சிக்கலாம். ஆனால், குல்தீப், மனீஷ் ஆகியோர் அதிக தொகைக்குப் போக வாய்ப்புண்டு. இந்திய அணிக்காக சீராக ஆடாவிட்டாலும், ஐ.பி.எல் தொடரில் மனீஷ் தொடர்ந்து பட்டையைக் கிளப்பிவருகிறார். அதேபோல், குல்தீப் தேசிய அளவிலும் தன்னை நிரூபித்திருக்கிறார். அவர்களை RTM மூலம் மீண்டும் அணிக்குத் திருப்பினால் பிரச்னை இல்லை. இல்லையேல், நைட் ரைடர்ஸ் அணியின் பிளான் விமர்சனத்துக்கு உள்ளாகும். 

ஆக, இந்த 3 அணிகளும் வேறு வகையான திட்டத்தோடு வீரர்களைத் தக்கவைத்துள்ளன. அவர்களின் பிளான் பாசிடிவ் முடிவைத் தருமா என்பது ஏலத்தில் அவர்களின் சாதுர்யத்தைப் பொறுத்தே அமையும். நைட் ரைடர்ஸின் முடிவு டேர்டெவில்ஸைப் பாதிக்கும். எப்படி...? அடுத்த பாகத்தில்...

Photos: BCCI


டிரெண்டிங் @ விகடன்