வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (10/01/2018)

கடைசி தொடர்பு:11:04 (10/01/2018)

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்தியா தோற்றதுக்கான விதை... பி.சி.சி.ஐ போட்டது! #SAvsIND

2017 பிப்ரவரி - ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியது. 2 வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வங்கதேசத்தை நசுக்கிவிட்டு ஆஸி அணியை எதிர்கொள்ள ஆயத்தமானது இந்தியா. ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. கேப்டனாக கோலி வானில் பறந்துகொண்டிருந்தார். இலங்கையிடம் வைட்வாஷ், தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வி என வரிசையாக சரிவுகளையே கண்டிருந்த ஸ்மித்மீது எக்கச்சக்க நெருக்கடி. 10 மாதங்கள் முடிந்துவிட்டது. மிகப்பெரிய ஆஷஸ் தொடரை 4-0 என வென்று, தொடரின் நாயகனாகவும் ஜொலித்து டெஸ்ட் அரங்கின் அரசனாக நிற்கிறார் ஸ்மித். விராட் - தென்னாப்பிரிக்க மண்ணில், 9 செஷன்கள் கூட தாங்காத இந்திய அணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். காலம் மாறியதில் பிரச்னை ஏதுமில்லை. களம் மாறியதுதான்! We will play only in sub-continent track! #SAvsIND

பும்ரா

ஜாஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார் இணை இந்தியாவின் வெற்றிகரமான பௌலிங் கூட்டணியாக உருவெடுத்துவிட்டது. முன்பெல்லாம் டெத் ஓவர்களில் சொதப்பும் இந்திய அணி, இப்போது கடைசி கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய 27 போட்டிகளில் 7-ல் மட்டும்தான் தோற்றுள்ளனர். தோல்வியின் விளிம்பிலிருந்த சில போட்டிகளை வென்று தந்துள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் கையில் இருந்தது அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஆயுதம் - வெள்ளை நிறப் பந்து. ஆனால், இப்போது - பேட். சர்வதேச கிரிக்கெட்டில், புவி - பும்ரா பார்ட்னர்ஷிப்பின் பேட்டிங் அனுபவம் வெறும் 18 பந்துகளே! புவனேஸ்வர் குமாராவது அவ்வப்போது ஆடிப் பழக்கப்பட்டவர். பும்ரா அப்படியல்ல. தன் முதல் 10 சர்வதேசப் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்தவர். இப்போது அறிமுக டெஸ்ட்...தோல்வியின் கரம் பிடித்து களம் புகுந்தார். புவி - பும்ரா கூட்டணியின் டெஸ்ட் பயணம் தோல்வியோடு... இல்லை, படுதோல்வியோடு தொடங்கியிருக்கிறது.

முதன்முறையாக சிவப்பு நிற குக்கபரா பந்தைப் பயன்படுத்திய இந்தக் கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டது. இருவரும் இணைந்து இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் டு  பிளெஸ்ஸிஸ் - டிவில்லியர்ஸ் கூட்டணி நிலைத்து நிற்கக் காரணம், இவர்கள் வீசிய மோசமான பந்துகளே. ஆனால், அவர்களின் டெஸ்ட் அனுபவம் குறைவுதானே? பும்ராவுக்கு இதுதான் முதல் போட்டி. அதனால், அவரது தவறுகளை பெரிதுபடுத்துவது நியாயமல்ல. முகமது ஷமி, அஷ்வின் ஆகியோரின் செயல்பாடும் திருப்தியே. பெயருக்கென்று இந்திய பிளேயிங் லெவனில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களே 15 விக்கெட்டுகள் (ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவைச் சேர்க்கவில்லை) வீழ்த்திய இந்தப் போட்டியில் இந்திய அணி எப்படித் தோற்றது...?

SAvsIND

இந்திய அணி தோற்றது இருக்கட்டும்....இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 15 விக்கெட் எப்படி எடுத்தனர்? சொல்லப்போனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு மோசம் இல்லை. வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் அவர்களால் நன்றாக பந்துவீச முடியும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆச்சர்யமாக ஸ்விங்குக்கு உதவிய கொல்கத்தா ஆடுகளத்தில், 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியது இந்திய வேகப்பந்து கூட்டணி. அதுவும் 98 ஓவர்களில். அதாவது, ஒவ்வொரு ஆறு ஓவருக்கும் ஒரு விக்கெட். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை அது நல்ல பந்துவீச்சுதான். அதனால்தான் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் கேப்டவுன் ஆடுகளத்தில் அவர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தினர். உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா இருவரில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸின்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் ஈஸியாக ரன் எடுத்ததை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கலாம். 

சரி, இந்தியா ஏன் தோற்றது? சிம்பிளாகச் சொன்னால் பேட்டிங் சரியில்லை. கொஞ்சம் விவரித்துச் சொன்னால், ஆடுகளத்துக்கு ஏற்ற பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்படவில்லை. அலசி ஆராய்ந்து சொன்னால்... இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிளானிங் சரியில்லை! முதல் விஷயம்  பேட்ஸ்மேன்களின் சொதப்பல்... துணைக்கண்டத்தைத் தாண்டிவிட்டதை இந்திய வீரர்கள் மறந்துவிட்டனர். மற்றபடி வேறொன்றும் காரணம் இல்லை! பிட்ச்சின் தன்மையைக் கணிக்கவில்லை, பந்தின் 'seam position'-ஐக் கவனிக்கவில்லை, பேக்ஃபூட் வைக்கவில்லை...வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானத்தில் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கிரிக்கெட் இலக்கணம் சொல்கிறதோ, அதையெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் புறக்கணித்தனர். விளைவு - 20 விக்கெட்டுக்கு வெறும் 344 ரன்கள்.

SAvsIND

பேட்ஸ்மேன்கள் செய்தது மட்டுமா தவறு. அணி தேர்வில் எத்தனை எத்தனை தவறுகள்...! "சமீபத்திய ஃபார்மை கணக்கில்கொண்டு ரஹானேவின் இடத்தில் ரோஹித் தேர்வுசெய்யப்பட்டார்" என்றார் கோலி. லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் சதங்களும், இரட்டைச் சதங்களுமாக அடித்த ரோஹித் இந்தப் போட்டியில் அடித்தது 21 ரன்கள். போட்டியின் எந்தத் தருணத்திலும் அவர் கம்ஃபோர்டாக ஃபீல் செய்யவில்லை. திணறினார், திணறினார்...திணறிக்கொண்டே இருந்தார். Seam இல்லாத இலங்கை, இந்திய பிட்ச்களில் சதம் அடித்துவிட்டால், தென்னாப்பிரிக்காவிலும் அடித்திட முடியுமா?

"இடதுகை பேட்ஸ்மேன் இருந்தால், அது எதிரணி பௌலர்களுக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதனால், தவான் இருப்பது அணிக்குப் பலம்" என்றும் கூறினார் இந்தியக் கேப்டன். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் அடித்தது 32 ரன்கள். முதல் இன்னிங்ஸில் ஒரு கேட்ச் டிராப் வேறு. ஒரு டெஸ்ட் போட்டியில் ஓப்பனிங் எவ்வளவு முக்கியம். 'டெஸ்டிலும் நான் அதிரடியாகத்தான் ஆடுவேன்' என்று அடிக்கிறார் தவான். இது இந்தியாவும் இல்லை, ஒருநாள் போட்டியும் இல்லை என்பதை உணரவில்லையா அவர்?

SAvsIND

பிரச்னை இவர்கள் இருவரையும் தேர்வு செய்தது இல்லை. இவர்களுக்குப் பதிலாக வெளியே உட்கார வைக்கப்பட்டவர்கள்தான். ரஹானே - வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன். இலங்கை தொடரில் சொதப்பியதால் இந்தப் போட்டிக்குச் சேர்க்கப்படவில்லை. தவானைச் சேர்த்தால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதைய இந்திய அணியில், துணைக்கண்டத்துக்கு வெளியே டெஸ்ட் போட்டிகளில் 50-க்கும் மேல் சராசரி கொண்டுள்ள வீரர்கள் இருவர். அவர்கள் இருவரும் முதல் டெஸ்டில் அணியில் சேர்க்கப்படவில்லை.

அணி தேர்வு சிக்கல் அடுத்த போட்டியில் சரிசெய்யப்படலாம். ஆனால், வீரர்கள் ஆடுவது....? ஸ்விங், சீம், பௌன்ஸ் போன்றவையெல்லாம் மறக்கும் அளவுக்கு துணைக்கண்டத்திலேயே ஆடிக்கொண்டிருந்தால் இப்படித்தான் இருக்கும். தேர்வுக்குழு சிறப்பாகச் செயல்படுகிறது. பயிற்சியாளர்கள், வீரர்களிடையே நல்ல புரிதல் இருக்கிறது. ஃபிட்னஸில் இருந்து பெர்ஃபாமன்ஸ் வரை அனைத்துக்காகவும் வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இருந்தும் என்ன பயன்? பி.சி.சி.ஐ வகுக்கும் திட்டங்கள் அணியின் முன்னேற்றத்துக்குக் கொஞ்சமாவது உதவுகிறதா?

2016-ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் கத்துக்குட்டி வெஸ்ட் இண்டீஸை வென்று திரும்பிய கோலி அண்ட் கோ, அதற்கடுத்து 19 டெஸ்ட்கள் இந்தியத் துணைக் கண்டத்தில்தான் விளையாடியது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா வெளிநாட்டில் விளையாடிய ஒரே டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் தொடர்தான். 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில், 27 இந்தியத் துணைக்கண்டத்தில் ஆடியவை. அதில் 11 போட்டிகள் இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் எதிராக ஆடப்பட்டவை. 

கோலி அண்ட் கோ SAvsIND

கொழும்பு, நாக்பூர், பெங்களூரு, காலே என பேட்டிங்குக்குச் சாதகமான அல்லது சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களில்தான். இதுபோன்ற ஆடுகளங்களில் பிட்ச் ஆனதும் பந்தின் வேகம் குறைந்துவிடும். அடிப்பதற்கு வாட்டமாக இருக்கும். தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் இங்குள்ளவை போன்றது அல்ல. பிட்ச் ஆகும் பந்து அதே வேகத்தில் எழும். அதிகமாக பௌன்ஸாகும். சாதாரணமாக இங்கு இடுப்பளவு எகிறும் பந்து, அங்கு மார்பளவு எழும். அதுமட்டுமல்லாமல் பந்தின் direction சற்று மாறும். இதை சமாளிக்க முடியாமல்தான் இந்திய வீரர்கள் திக்குமுக்காடினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனது ஒன்றுபோதும் இந்திய வீரர்கள் எந்த மைண்ட் செட்டில் ஆடினார்கள் என்பதை உணர்த்த. ஃபிலாண்டர் வீசிய அந்தப் பந்து நான்காவது ஸ்டம்ப் லைனில் பிட்சாகி பேட்ஸ்மேனுக்கு வெளியே சென்றது. ரோஹித் மெதுவாக ரியாக்ட் செய்ய, இன்சைடு எட்ஜாகி போல்டானார். துணைக்கண்டத்தில் ஆடும் அதே ஷாட். தென்னாப்பிரிக்க ஆடுகளத்துக்கு அவர் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளவே இல்லை. அவர் மட்டுமல்ல...விஜய், புஜாரா போன்ற டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களும் கூட!

SAvsIND

இன்ஃபோகிராஃபிக்ஸ் : எம்.மகேஷ்

"இது ஹோம் சீசன். அடுத்து அவே சீசன்" என்று கூறியது பி.சி.சி.ஐ தரப்பு. இதுவொன்றும் கால்பந்தல்ல. கிரிக்கெட். ஆடுகளங்கள் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் இந்த விளையாட்டில், தொடர்ச்சியாக ஒரே மாதிரியான ஆடுகளங்களில் ஆடினால், அது ஒரு பேட்ஸ்மேனின் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணம் - புஜாரா. நேர்த்தியாக ஆடக்கூடிய அவரும், பந்தின் சீமுக்கு ஆடாமல், ஸ்ட்ரெய்ட் பேட் போட்டு அவுட் ஆனபோது, மொத்த இந்திய அணியின் நிலைமையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஐ.பி.எல் தொடரின்போது, வேறு எந்த சர்வதேசத் தொடரும் நடந்து, அதனால் வீரர்கள் விலகிடாமல் இருக்கும் வகையில் ஐ.பி.எல் விண்டோ உருவாக்குவதில் கொண்டிருந்த ஆர்வத்தை இந்திய அணியின் நலனுக்கும் காட்டலாமே. இந்தியாவின் வெற்றி இங்கு மிகப்பெரிய வியாபாரம். வெற்றிகளுக்காகத்தான் இந்த இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள். இந்த லட்சணத்தில் 2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில்! பி.சி.சி.ஐ-யின் இந்த அணுகுமுறை மாறும்வரை அரபிக் கடலைக் கடந்தாலே இந்திய அணி அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கும்!


டிரெண்டிங் @ விகடன்