`ஆஷஸ் தோல்வியிலிருந்து வெளிவர ஜோரூட் இதைச் செய்ய வேண்டும்!' பயிற்சியாளர் கொடுத்த ஐடியா | England Coach Trevor Bayliss's idea to Joe Root to overcome from Ashes Defeat

வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (10/01/2018)

கடைசி தொடர்பு:17:05 (10/01/2018)

`ஆஷஸ் தோல்வியிலிருந்து வெளிவர ஜோரூட் இதைச் செய்ய வேண்டும்!' பயிற்சியாளர் கொடுத்த ஐடியா

ஆஷஸ் தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டுவர இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு, அந்த அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் அறிவுரை ஒன்றைக் கூறியிருக்கிறார். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பர்யமான ஆஷஸ் தொடர் சமீபத்தில் முடிந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணி 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது. இதனால், இங்கிலாந்து அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆஷஸ் தொடரில் பெரிய அளவில் சோபிக்காத கேப்டன் ஜோ ரூட் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.  

இந்தநிலையில், ஆஷஸ் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலிலிருந்து வெளிவர கிரிக்கெட்டில் இருந்து ஜோ ரூட் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய டிரவர் பெய்லிஸ், ‘ஜோ ரூட்டிடம் கடந்தசில நாள்களுக்கு முன்பாக ஆலோசனை நடத்தினேன். இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடாமல் ஓய்வெடுப்பது நல்லது என்று அவருக்கு நான் அறிவுரை கூறியிருக்கிறேன். கடந்த இரண்டாண்டுகளில் கிரிக்கெட்டில் இருந்து சிறிதுகாலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்போதெல்லாம், ஒரு டி20 தொடரிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிலைதான் தனக்கு வருவதாக ஜோரூட் நினைக்கிறார். 

அவர் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். இதுபோல் டி20 தொடர்கள் அனைத்தையும் மிஸ் செய்யும்போது, அந்தப் போட்டிகளுக்கு ஏற்றவகையில் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதில் பின்னடைவு ஏற்படுவதாகவும் அவர் கருதுகிறார். ஐ.பி.எல் தொடருக்குப் பின்னர், இங்கிலாந்து அணி அதிக போட்டிகளில் விளையாடயிருப்பதால், ஜோ ரூட்டுக்கு இந்த ஓய்வு அவசியம் தேவை’ என்றார். டிரவர் பெய்லிஸ் பயிற்சி அளித்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.