வெளியிடப்பட்ட நேரம்: 08:08 (11/01/2018)

கடைசி தொடர்பு:11:48 (11/01/2018)

இந்தியக் கிரிக்கெட்டின் இரும்புக்கோட்டை... ராகுல் டிராவிட்! #HBDDravid

கிரிக்கெட் உலகில் மிகவும் கடினமான விஷயம் எதுவெனில், அது டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்குவதுதான். அப்படிப்பட்ட சிரமமான காரியத்தை, அலாதியான காதலோடு அள்ளி அனைத்துக்கொண்ட கிரிக்கெட்டின் காதலன், ராகுல் டிராவிட். மூன்றாவது வீரராகக் களமிறங்குவதில் அப்படி என்ன சிரமம்... அதில் என்ன ஸ்பெஷல்?

Rahul Dravid

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் பேடுகளைக் கட்டும்போதே, மூன்றாவது வீரரும் கட்ட வேண்டும். களம் செல்லும் இருவரில் யாரேனும் ஒருவர் முதல் பந்திலேயே அவுட் ஆகலாம். இல்லை, இருவருமே நிலைத்து நின்று 50-60 ஓவர்கள் வரை கூட ஆடலாம். போருக்குத் தயாரான நிலையில் நிலைநிறுத்தப்படும் பீரங்கியைப்போல எந்நேரமும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். எதிரணியின் திட்டங்களை தவிடுபொடியாக்குவதில் மிகப்பெரிய கடமை மூன்றாவதாக களமிறங்கும் வீரருக்கு இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் வழுவழுப்பு அவ்வளவு எளிதில் மறையாது. அதனால், அதிக நேரம் ஸ்விங் ஆகும். சரி, பொறுமைகாத்து பிறகு அடித்துக்கொள்ளலாம் என்றும் இருக்க முடியாது. இந்திய துணைக்கண்டத்தில் ஆடப்படும் போட்டிகளில் பெரும்பாலும் மைதானங்கள் முழுவதும் பச்சைப்புற்கள் இருக்காது. பந்து விரைவில் சொரசொரவென ஆகி ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால், தொடக்க வீரர்களும் மூன்றாவது வீரரும் பொறுமையாக ஆட்டமிழக்காமல் ஆடி, பந்து ஸ்விங் ஆகும் தன்மையிலிருந்து பாதுகாத்தால் அதற்கடுத்து வரும் வீரர்கள் பதம் பார்ப்பார்கள்.

இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பந்து ஏகத்துக்கும் ஸ்விங் ஆகும். இந்தியாவின் தொடக்க வீரர்கள் பட்டியலைப் பார்த்தால் தலையே வெடித்துவிடும். டிராவிட் வருவதற்கு முன்பு, ஆடிய காலம் என்று கொஞ்சம் பட்டியலிட்டால் இரு வீரர்கள் மட்டுமே தேறுவர். அவர்கள் சேவாக் மற்றும் கம்பீர். இவர்கள் இருவரும் ஆடிய காலகட்டத்தில்தான் டிராவிட் கொஞ்சம் நம்பிக்கையோடு ஒரு கோப்பை தேநீராவது அருந்த முடியும். அதுவும் இந்திய ஆடுகளங்களில் மட்டுமென்றால் மிகையாகாது.

இப்போது அன்னிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல ஏதேதோ வித்தைகள் செய்தும் ரிசல்ட் நெகட்டிவாக வர முக்கிய காரணம், குறைந்தது 150 பந்துகளை சந்திக்கக்கூடிய பொறுமை இன்றைய வீரர்களிடம் இல்லாமல் போனதே. இன்றுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் டிராவிட் மட்டுமே. ஒரு பௌலர் டிராவிட்டுக்குப் பந்துவீசும்போது, 6 முறை கஷ்டப்பட்டு வெவ்வேறு லெந்த்களில் பந்து வீச யோசிக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சிப்போனால் 7-8 ஓவர்களுக்கு மேல் பந்துவீச ஒரு பௌலருக்கு உடம்பில் தெம்பு இருக்காது. யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமோ, கொடுத்துவிட்டு மற்றவர்களை அடித்து ஆடுவதே புத்திசாலித்தனம்.

டிராவிட்

டிராவிட் மூன்றாவது வீரராகக் களமிறங்கி 10,524 ரன்களை எடுத்துள்ளார் 52.88. டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை வெவ்வேறு வீரர்களோடு ஜோடி சேர்ந்து ரன் குவித்த வீரர்களிலும் டிராவிட்தான் டாப்.

சில நேரங்களில் சிலருக்கு ஏற்படும் காயங்கள் அணிக்கு சாதகமாக முடியும். அப்படி சாதகமாக முடிந்த விஷயங்களில் மிகப்பெரிய ட்விஸ்ட்களில் ஒன்றுதான் சஞ்சய் மஞ்சரேக்கர். அவர் காயம் காரணாமாக 1996-ம் ஆண்டு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து விலக, டிராவிட் அடியெடுத்து வைத்தார். அதேபோல சச்சின் வெகு நாட்களாக டென்னிஸ் எல்போ வலியில் வாட, ஒருநாள் போட்டிகளில் யாரைத் தொடக்க வீரராக களமிறக்குவது என முழித்துக்கொண்டிருந்த கங்குலிக்கு கிடைத்த பொக்கிஷம், சேவாக்.

இந்திய அணி அந்நிய மண்ணில் சாதித்த பெரும்பாலான வெற்றிகளில் டிராவிட்டின் பங்கு அளப்பறியது. இதை எந்தத் தராசு கொண்டும் அளவிடமுடியாது. தன் அறிமுகப் போட்டியே இங்கிலாந்தில் அரங்கேறியாதால், அதன் பின்பு எப்போது இங்கிலாந்து சென்றாலும் ஒரு கலக்கு கலக்காமல் வர மாட்டார். 1999 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையோடு 2002-ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்தபோது, ஹெடிங்கிலி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், சேவாக் 8 ரன்ளோடு நடையைக்கட்ட, சஞ்சய் பாங்கருடன் ஜோடி சேர்ந்து, நாள் முழுவதும் இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களை கதறவைத்தார்டி ராவிட்.

பாங்கர் 236பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்கள் சேர்க்க, டிராவிட் 307 பந்துகளில் 148 எடுக்க, சச்சினும் கங்குலியும் தங்கள் பங்குக்கு சோர்ந்த இங்கிலாந்தை சுளுக்கெடுக்க, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும்  46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் வீடியோ பதிவுகளைக்கொண்டு வளரும் வீரர்களுக்கு பாடமே எடுக்கலாம். தற்போது 80 சதவீத போட்டிகள் நான்கு நாட்களுக்குள் முடிந்துவிடுகிறது. அவசரம், அவசரம், அவசரத்துக்கெல்லாம் பெரிய அவசரம் என்று பக்கத்துக்கு தெருவில் பந்து சென்றால் கூட, ஷாட் ஆட முற்பட்டு அவுட்டாகும் இன்றைய வீரர்களைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

அடுத்த வருடமே (2003) அடிலெய்ட் மைதானத்தில் இரு சதங்கள் (233) மற்றும் ஆட்டமிழக்காமல் எடுத்த 72 ரன்கள், மீண்டும் நம்பவே முடியாத ஒரு அசாத்திய வெற்றியைச்சுவைக்க காரணாமாக அமைந்தது. அந்த வெற்றியைக் கொண்டு தொடரை சமன் செய்து, கங்குலி தலைமையிலான அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வசப்படுத்தியது.

இப்போதுபோல இல்லாமல், நிஜமாகவே மேற்கிந்தியத்தீவுகளின் பந்துவீச்சு தரமாகவும், அவர்களின் ஆடுகளங்கள் வேளச்சேரி ரோடுகளைப் போல குண்டும்குழியுமாக இருந்தபோது, ரோஸ் பௌல் மைதானத்தில் 81 & 68 ரன்களைக் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று சரித்திரம் படைத்தார். லாரா, சந்தர்பால், கெய்ல், பிராவோ, சாமுவேல்ஸ, கங்கா என்று உள்நாட்டில் அட்டகாசமாக ஆடக்கூடிய அணியை எதிர்த்து, சச்சின் இல்லாத சுமையைத் தோளில் சுமந்து, வெற்றியை இந்திய வசமாக்கினார் டிராவிட்.

டிராவிட்

2007-ல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை 1-0 என்று வென்று பல வருடங்களாக இங்கிலாந்தில் தொடரைக் கைப்பற்றாத அணியாக இருந்த நிலையை மாற்றினார். குழுவாக செயல்பட்டு எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் வெற்றிக்கு வித்திட்ட தொடர் அது மட்டுமே. வாசிம் ஜாஃபர், தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான தொடக்கம், டிராவிட், சச்சின், கங்குலி, லட்சுமண், தோனி என எல்லோருமே தங்களது ஃபார்மின் உச்சத்தில் இருந்த நேரம் அது. போதாக்குறைக்கு கும்ப்ளே ஒரு செஞ்சுரி போட, அட்டகாசமாக முதல்முறையாக பல வருடங்களில் இந்திய அணி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு தாயகம் திரும்பியது.

அடுத்தது கும்ப்ளே தலைமையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் சென்றபோது சிட்னி டெஸ்ட்டில் ஒரு தலைபட்ச முடிவுகளால் நொந்து போய், கும்ப்ளே கடுப்பில் வார்த்தைகளைக் கொட்ட, பெர்த் டெஸ்ட் போட்டியில் செமத்தியாக அடிவாங்கப்போகிறோம் என்று நினைத்த நேரத்தில், பௌன்சர்களை எதிர்கொண்டு 91 ரன்களைக் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்டு, ஆஸ்திரேலிய அணியின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். "Respect cannot be demanded it must be earned" என்கிற வாக்கியத்திற்கு ஏதுவாக, 'ப்ராட்மேன்'  நினைவு தினத்தில் ஆஸ்திரேலியர் அல்லாத முதல் வீரராக பங்குபெற்று உரையாற்றினார்.

"வேறு அணியிலிருந்து யாராவது ஒருவர் 90-களின் ஆஸ்திரேலிய அணிக்குள் நுழையும் திறமை கொண்டவர் என்றால் அது டிராவிட் மட்டுமே..." என மெக்ராத் குறிப்பிட்டார்.

உலகக்கோப்பைக்கான அணியை உருவாக்கும்பொருட்டு 2009-ல் தோனி ஒருநாள்போட்டியிலிருந்து டிராவிட்டை நீக்க, உலக சாம்பியனான இந்திய அணி 4-0 என இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் அடி வாங்கியபோது, இறுதி வரை உயிரைக்கொடுத்து ஆடிய ஒரே வீரர். தொடக்க வீரராக வந்து ஆட்டமிழக்காமல் சதமடித்துவிட்டு, ஃபாலோ ஆன் ஆனபோதும் பத்து நிமிடத்தில் மீண்டும் களமிறங்கிய அந்த மன தைரியத்தைக்கண்டு கிரிக்கெட் உலகமே ஆனந்தக்கண்ணீர் வடித்தது.

 ஒரு தின ஆட்டங்களுக்கு வேண்டாம் என ஒதுக்கிய நிர்வாகமே மீண்டும் இங்கிலாந்துக்கு எதிராக ஆட அழைத்தபோது, "நான் நிச்சயம் இதை எதிர்பார்க்கவில்லை.. அதனால், இப்போதே விடைபெறுகிறேன்" என்று தனக்கும் அணிக்கும் உண்மையாக இருந்து விலகிய டிராவிட் போன்று வேறொரு வீரர் கிடைப்பதெல்லாம் நடக்காத காரியம். படேலின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்கவிட்டு  தன்னுடைய சர்வதேச இருபது ஓவர் போட்டியை முடித்ததெல்லாம் ஆச்சர்யத்தின் உச்சம்.

இதோ பாருங்கள், இப்போது இந்த பிறந்தநாள் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், நியூஸிலாந்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்ட உலககோப்பைக்கு இந்திய அணியை தயார்செய்துகொண்டிருக்கிறார். கமென்ட்ரியை விட அடுத்த தலைமுறை வீரர்களை அடையாளம் காண்பது அவருக்குப் பிடித்த வேலை. டிராவிட்டே தேடினாலும் இன்னொரு டிராவிட்டை அடையாளம் காண முடியாது...

ஏனெனில், அவர் ராகுல் டிராவிட்.

#HBDDravid


டிரெண்டிங் @ விகடன்