வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (11/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (11/01/2018)

`தென்னாப்பிரிக்காவில் இதைச் செய்யுங்கள்’ - இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சேவாக் கொடுத்த அடடே யோசனை

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கிறது. 

கேப் டவுனில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாகச் செயல்பட்டும், பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காததே இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. ஆடும் லெவனில் கே.எல்.ராகுல் மற்றும் ரஹானே ஆகியோருக்குப் பதிலாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோரைச் சேர்த்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்தநிலையில், தென்னாப்பிரிக்க தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவக் பேசியுள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் இதுகுறித்துப் பேசிய சேவாக், ‘ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளைத் தொடாமல் இருங்கள் என்பதே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நான் கூறும் ஆலோசனை. முடிந்தவரை ஸ்ட்ரெய்டாக ஆட முயல வேண்டும். அதேபோல், அதிரடி காட்டுவதற்காக ஸ்ட்ரெய்ட் மற்றும் பிளிக் வகை ஷாட்களையே தேர்வு செய்ய வேண்டும். ஷார்ட் பிட்ச் பந்துகள் உங்களைப் பதம்பார்க்கலாம். அதற்குத் தயாராக இருந்துகொள்ளுங்கள். 

தென்னாப்பிரிக்க பிட்சுகளில் பந்துகள் பவுன்ஸாகத் தொடங்கியிருக்கிறது என்பதால், பேட்ஸ்மேன்கள் போல்ட் முறையில் அவுட்டாகி வெளியேறுவது கடினம். இந்தச் சிந்தனையை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, ஒவ்வோர் ஓவரிலும் குறைந்தது 3 ரன்களையாவது பேட்ஸ்மேன்கள் சேர்க்க வேண்டும். இந்தத் தொடரில் இந்திய அணி மீண்டுவர 30 சதவிகிதமே வாய்ப்புகள் இருக்கின்றன’ என்றார்.