`கிங் காஜூ’ - 50 வயதில் கால்பந்து விளையாட்டில் சாதிக்கும் ஜப்பான் வீரர்!

ஜப்பான் உள்ளூர் கால்பந்து போட்டிகளில் 50 வயதான கஜூயோஸி மியூரா (Kazuyoshi Miura) என்ற வீரர் கலக்கி வருகிறார். 

Photo Courtesy: FIFA

விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள், பெரும்பாலும் 40 வயதைத் தொடும் முன்னர் ஓய்வு பெற்றுவிடுவதுண்டு. வெகுசிலரே 40 வயதைக் கடந்தும் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு வருவர். அந்தவகையில், ஜப்பானைச் சேர்ந்த கஜூயோஸி மியூரா என்ற 50 வயது வீரர், தனது 33 வது கால்பந்து சீஸனில் விளையாட இருக்கிறார். ஜப்பானின் உள்ளூர் அணியான யோகோஹாமா கிளப் அணியில் விளையாட மேலும், ஓர் ஆண்டுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. 

முன்கள வீரரான மியூரா, அடுத்த மாதத்தில் 51 வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இந்தநிலையில், அவரது ஆஸ்தான அணி ஒப்பந்தக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. பிரேசிலின் பிரபலமான உள்ளூர் கிளப் அணியான சாண்டோஸ் அணியுடன், கடந்த 1986-ல் கால்பந்து போட்டியில் அடியெடுத்து வைத்த மியூரா, தொடர்ச்சியாக 33 வது சீஸனில் விளையாட இருக்கிறார். ஜெனோவா, டினாமோ ஜாக்ரப் ஆகிய கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ள அவர், யோகோஹாமா கிளப் அணிக்காகக் கடந்த 2005-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். ஜப்பானின் ஜே-லீக் தொடரில் 89 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், தனது அணிக்காக 139 கோல்கள் அடித்துள்ளார். அந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் அவர் 6 வது இடத்தில் இருக்கிறார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!