வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/01/2018)

கடைசி தொடர்பு:22:30 (11/01/2018)

47 ரன்கள்...4 விக்கெட்! ஆஸ்திரேலியாவில் அசத்திய சச்சின் மகன் 

இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் (வயது 18). இவரும் கிரிக்கெட் வீரராக களத்தில் ஜொலித்து வருகிறார். தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் அர்ஜுன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 தொடரில் பங்கேற்று வருகிறார்.

ARJUN


சிட்னி கிரிக்கெட் மைதானம் சார்பில் கிளப் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணி சார்பில் அர்ஜுன் பங்கேற்று விளையாடுகிறார். இந்திய கிரிக்கெட்டர்ஸ் கிளப் அணியும், ஹாங்காங் கிரிக்கெட் கிளப் அணியும் மோதிய போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில், பேட்டிங், பந்து வீச்சில் அர்ஜுன் டெண்டுல்கர் கலக்கி எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கி 27 பந்துகளில் 48 ரன்கள் விளாசியதோடு, நான்கு விக்கெட்டுகளையும் அவர் அள்ளினார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேசக் கிரிக்கெட்டில் சாதனைகள் பல நிகழ்த்திய நிலையில், அவருடைய மகனும் சிறந்த வீரராக உருவெடுத்து வருவதையே இந்த ஆட்டம் காட்டுகிறது. 

இடக்கை வேகப்பந்து வீச்சு மற்றும் இடது கை பேட்ஸ்மேனான அர்ஜுன் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தனது ரோல் மாடல்களாகச் சொல்கிறார்.