நைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் 3 #IPLAuction | KKR's decision may hurt Delhi Daredevils

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (12/01/2018)

கடைசி தொடர்பு:11:22 (12/01/2018)

நைட் ரைடர்ஸின் முடிவு டேர் டெவில்ஸைப் பாதிக்கும்... ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் 3 #IPLAuction

இன்ஜினீயரிங் கடைசி ஆண்டு elective பாடங்கள் இருக்கும். நான்கு அல்லது ஐந்து பாடங்களில் ஏதேனும் இரண்டைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், மற்ற பரீட்சைகளைவிட, இந்த எலக்டிவ் பாடத்தை எழுதும்போதுதான் மனசு ஓவராக ஃபீலாகும். நமக்கு பாதியில் எல்லாம் மறந்துவிடும். வேறு பாடம் எடுத்த நண்பன் நன்றாக எழுதிக்கொண்டிருப்பான். 'பேசாம அந்தப் பாடத்த எடுத்திருக்கலாமோ' என்று தோன்றும். "நான்தான் அப்பவே இந்த சப்ஜெக்ட எடுக்க சொன்னேன்ல" என்று நண்பன் கேலி செய்வானே? என்ற எண்ணம்தான் வெளியே வரும்வரை போட்டு வாட்டும். ஃபெயிலாகப் போகிறோம் என்பதைவிட, 'தவறான முடிவெடுத்துவிட்டோம். அது கேள்விக்குள்ளாகுமே' என்ற பயம் அதிகமாக இருக்கும். சரி, இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாத சப்ஜெக்ட் பத்திப் பேசுறோம்..? சம்பந்தம் இருக்கிறது! #IPLAuction

IPL

ஐ.பி.எல் ஏலம் இந்த elective பரீட்சைப் போலத்தான். ஒவ்வொரு முடிவுகளும் கேள்விக்குள்ளாகும். ஒவ்வொன்றும் பலகட்டப் பரிசீலனைக்குப் பிறகு எடுக்கவேண்டும். ஒவ்வொரு பிளானுக்கும் குறைந்தது 10 பேக்-அப்கள் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, 10 கோடி கொடுத்து சாஹலை ஆர்.சி.பி வாங்கினால், "இதற்கு 7 கோடி கொடுத்து ரீடெய்ன் பண்ணியிருக்கலாம்" என்று கேள்வி வரும். கேள்வியைவிட, அது முட்டாள்தனம் என்பது அவர்களுக்கும் உறுத்தலாக இருக்கும். ஆக, இந்த ஏலம் என்பது மிகப்பெரிய சைக்கலாஜிக்கல் தலைவலி என்பதுதான் உண்மை. இப்படிப்பட்ட ஏலம், நடப்பதற்கு முன்பே டெல்லி அணிக்கு சிக்கல் தொடங்கியிருக்கிறது!

அணிகள் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் வெளியாவதற்கு முன்பே, 'கௌதம் கம்பீர் தக்கவைக்கப்படமாட்டார்' என்று பரவலான பேச்சு அடிபட்டது. ஒரு நிருபர் கம்பீரிடமே இதைக் கேட்டுவிட, "எந்த அணிக்கும் விளையாடத் தயார்" என்று ஸ்டேட்மென்ட் கொடுத்தார் கம்பீர். தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளிவந்தது...சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தக்கவைக்கப்பட்டனர். கம்பீர் கழட்டிவிடப்பட்டார். ஒன்றும் பிரச்னை இல்லை, RTM கார்டு மூலம் மீண்டும் வாங்கிவிடலாம். ஆனால், கம்பீரின் அந்தப் பேட்டியும், கொல்கத்தா அணியின் இந்த முடிவும், டெல்லி அணியைக் கேள்விக்குள்ளாக்கும்.

Gambhir IPL

டேர்டெவில்ஸ் - 10 ஆண்டுகளில் ஒருமுறைகூட பைனலுக்குச் செல்லாத ஒரே அணி. ஐ.பி.எல் தொடக்க காலங்களில் கொஞ்சம் நன்றாகத்தான் ஆடிவந்தது. நான்காவது சீசனிலிருந்து தொடர்ந்து சரிவுதான். அந்த அணி அரையிறுதியை எட்டிய மூன்று முறையும் அணியின் கேப்டனாக இருந்தவர் சேவாக். ஐ.பி.எல் தொடக்கத்தில், மார்க்கீ வீரராகவும், அணியின் அடையாளமாகவும் இருந்தவர். முதல் மூன்று சீசன்களில் கம்பீரும் அங்குதான் இருந்தார். 2010-ம் ஆண்டு கேப்டனாகவும் செயல்பட்டார். சேவாக், கம்பீர், தினேஷ் கார்த்திக், அமித் மிஷ்ரா போன்ற இந்திய வீரர்கள் நிறைந்திருக்க, முதல் 3 சீசன்கள் நன்றாக செயல்பட்டது.

2011 ஏலம் - கம்பீர் தக்கவைக்கப்படவில்லை. ஏலத்திலும் எடுக்கவில்லை. கொல்கத்தா செல்கிறார். கேப்டனாகிறார். 2014... அடுத்த ஏலம்...சேவாக்கும் கழட்டிவிடப்படுகிறார்.  பஞ்சாப் அணிக்கு ஆடுகிறார் விரு. முதல்முறையாக ஐ.பி.எல் பைனலில். அந்தத் தொடரில் 455 ரன்கள் அடிக்கிறார். டெல்லி அணியின் டாப் ஸ்கோரர் டுமினி அவரைவிட 45 ரன்கள் குறைவாக 410 ரன்கள் மட்டுமே அடிக்கிறார். அந்தத் தொடரை வென்று, தன் இரண்டாவது ஐ.பி.எல் கோப்பையை வெல்கிறார் கம்பீர். டெல்லி கடைசி இடத்தில்! பிரச்னை அவர்கள் இரு பேட்ஸ்மேன்களை இழந்தது அல்ல. தங்களின் ஒவ்வொரு முடிவாலும், ஒரு நல்ல கேப்டனை இழந்துள்ளனர். 

Sehwag - IPL

சேவாக் டெல்லியில் ஆடியபோதே கேப்டனாக இருக்க மிகவும் யோசித்தார். அதனால்தான் 2010-ல் கம்பீர் கேப்டனானார். 6-வது, 7-வது சீசன்களில் முறையே மஹிலா ஜெயவர்தனே மற்றும் கெவின் பீட்டர்சன் அந்த அணியை வழிநடத்தினர். அந்த இரண்டு ஆண்டுகளுமே டெல்லி கடைசி இடம்தான் பிடித்தது. அந்த இரண்டு சீசன்களில், மொத்தம் 30 போட்டிகளில் அந்த அணி வென்றது வெறும் 5 போட்டிகள்தான். அடுத்த சீசன் - டுமினி கேப்டன்... ஏழாவது இடம். வெளிநாட்டுக் கேப்டன்கள் செட்டாகாது என்றுணர்ந்து, கேப்டன்சி அனுபவம் இல்லாத ஜாஹிர் கானை கேப்டனாக்கினர். அரையிறுதி வாய்ப்பு அகப்படவே இல்லை. டிவில்லியர்ஸ், ஜெயவர்தனே, வார்னர், மெக்ராத், வெட்டோரி போன்றோரோடு சேவாக், கம்பீர் ஆடிய காலத்திலேயே அகப்படாத கோப்பை, அதன்பிறகு உருவாக்கப்பட்ட சுமாரான டீமுக்குக் கிடைத்திடுமா?

இப்போது விஷயத்துக்கு வருவோம். இப்போதுள்ள அணிகளில் 3 அணிகள்தான் கோப்பையை வெல்லவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் - 3 முறை பைனலுக்குள் நுழைந்துள்ளது. கிங்ஸ் லெவனும் ஒரு பைனலைப் பார்த்துவிட்டது. டெல்லி...? அரையிறுதிக்குள் நுழைந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஏலம், அவர்களின் மாற்றத்துக்கான புதிய தொடக்கம். பயிற்சியாளராக, உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான பான்ட்டிங்! ஒரு கேப்டனின் அவசியத்தை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார். 

ஜேம்ஸ் ஹோப்ஸ், ஜெயவர்தனே, கெவின் பீட்டர்சன், ஜே.பி.டுமினி போன்றோரெல்லாம் கேப்டனாக இருந்து அணியை கடைசி இரண்டு இடங்களுக்கே வழிநடத்தியுள்ளனர். அதனால் இந்த முறையேனும் ஒரு நல்ல கேப்டனை வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. 'நல்ல கேப்டன் என்ன நல்ல கேப்டன்... அதான் கம்பீர் இருக்கார்ல...' - இதுதான் இப்போது டெல்லி அணி சந்திக்கும் பிரச்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு, கேப்டன் கம்பீரை விட்டுவிட்டது. இதற்குமுன்பே வந்து `ஹைப்' ஏற்றியது கம்பீரின் அந்தப் பேட்டி...

POnting

"கொல்கத்தா அணி ரீடெய்ன் செய்யவில்லை என்றால் டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவீர்களா" என்று கேட்க, "Retention பற்றிய எந்தச் செய்தியும் இதுவரை எனக்குத் தெரியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எனக்கு மிகவும் நெருக்கமான அணி. டெல்லி, எனது சொந்த ஊர் என்பதால், டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார் கம்பீர். அவர்களின்  முன்னாள் வீரர், முன்னாள் கேப்டன் அவர்களுக்காக விளையாட ரெடி. இதனால், கம்பீர்தான் டெல்லி அணியின் புதிய தொடக்கத்துக்கு, சரியான கேப்டன் என்ற பிம்பம் உருவாகிவிட்டது.

கொல்கத்தா எப்படிப்பட்ட முடிவும் எடுக்கலாம். இப்படியான சூழ்நிலையில் டெல்லி அணி கம்பீரை மீண்டும் டெல்லிக்கு அழைத்துவருமா என்பதுதான் கேள்வி. டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை சாதித்திருந்தால், இது சாதாரண கேள்வியாக கடந்திருக்கும். அவர்களின் மோசமான வரலாறு, இந்தக் கேள்வியை.. மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாற்றியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை அவர்கள் பூர்த்தி செய்யாவிடில் நிச்சயம் கேள்விகள் எழும். "நான்தான் வேற சப்ஜெக் எடுன்னு சொன்னேனே" என்று வெறுப்பேத்தும் நண்பனைப்போல். 'கொல்கத்தா RTM கார்டு பயன்படுத்தி ரீடெய்ன் செய்துவிட்டால்?' அப்போதும் சும்மா விடுவோமா? RTM பயன்படுத்துவதற்கு முன்பாக கூறப்படும் அதிகபட்ச தொகை டெல்லி கேட்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில், அப்போதும் கேள்விகள் துரத்தும். ஆகமொத்தம், கம்பீர் கொல்கத்தாவுக்குப் போகிறாரோ இல்லையோ, அவரை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் டேர்டெவில்ஸ் அணிக்கு ஏற்படும்... ஏற்பட்டுள்ளது! #IPLAuction

Zaheer - IPL

போன சீசன் தங்கள் அணியில் ஆடிய ஆஞ்ஜெலோ மாத்யூஸை, RTM மூலம் வாங்கி கேப்டனாக்கலாம். ஆனால், அவர் தலைமை தாங்கிய இலங்கை அணி வாங்கிய அடி உலகுக்கே பரிட்சயம். எனவே, அப்படியான விஷப்பரீட்சையில் பான்ட்டிங் இறங்கமாட்டார் என்று நம்பலாம். 'ஐ ஹேட் அதர் ஐடியாஸ்!' என்று டெல்லி சொல்லலாம். ஆனால், ஐ.பி.எல் அனுபவம், கேப்டன்சி அனுபவம் சேர்ந்து பெற்ற கேப்டன்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? வில்லியம்சன், மெக்கல்லம், ரஹானே, தவான், வாட்சன், டுபிளஸ்ஸி, இயான் மோர்கன் போன்ற வீரர்கள் அனைவரும் RTM கார்டு மூலம் தங்கள் பழைய அணிகளால் திரும்ப வாங்கப்பட வாய்ப்புண்டு. எஞ்சியிருப்பவர்கள் ஜேசன் ஹோல்டர், ஷகிப் அல் ஹசன் போன்ற கேப்டன்களும், அஷ்வின், ஹர்பஜன் போன்ற இந்திய வீரர்களும்தான். ஜாஹீரிடம் பெற்ற அனுபவம் போதும்தானே. அதனால், கம்பீர் என்று சொல்லிக்கொண்டு......'டெல்லி அண்டர் பிரஷர்!'

டெல்லி அணிக்கு இன்னொரு ஆப்ஷன் இருக்கு. அவருக்காக 2 அணிகள் அடிச்சுக்கலாம். யாரு அவரு...? (அடுத்த பாகத்தில்...)

 


டிரெண்டிங் @ விகடன்