வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (13/01/2018)

கடைசி தொடர்பு:12:33 (13/01/2018)

இந்திய அணிக்கு சச்சின் சொல்லும் 3 யோசனைகள்!

செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய அணி மூன்று விஷயங்களைப் பின்பற்றினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கூறியுள்ளார். 


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வியுடன் தொடரைத் தொடங்கியுள்ளது. ஆடும் லெவனில் அஜிங்கியா ரஹானே மற்றும் கே.எல்.ராகுலைச் சேர்க்காதது, பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் ஆகியவற்றால் இந்திய அணிமீது விமர்சனங்கள் குவிந்துவருகின்றன. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்புச் செய்தும், இந்திய பேட்ஸ்மேன்களால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 400 ரன்கள்கூட குவிக்க முடியாத சூழல் இருந்தது. தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. மூன்று போட்டிகள்கொண்ட தொடரில் இன்று தொடங்கும் இரண்டாவது போட்டித் தொடரை நிர்ணயிக்கும் போட்டி என்பதால், இந்திய அணி கவனமாக விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

இந்தநிலையில், தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய வீரர்கள் செய்ய வேண்டிய முக்கியமான 3 விஷயங்களை முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், ‘தென்னாப்பிரிக்க மைதானங்களில் வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இன்னிங்ஸின் முதல் 25 ஓவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை வேகப்பந்து வீச்சாளர்களுக்கானது. எனவே, இந்திய பேட்ஸ்மேன்கள் அந்த 25 ஓவர்கள் வரை பொறுமை காக்க வேண்டும். அதன்பின்னர் 50 முதல் 80 ஓவர்கள் வரையில் ரன் குவிக்கலாம். ஆனால், முதல் 25 ஓவர்கள் பேட்ஸ்மேன்களைக் கடுமையாக சோதிக்கும். இரண்டாவதாக நமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, ஒரு அணியாக நேர்மறையான எண்ணத்துடன் களத்தில் போராட வேண்டும். 

ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர்கள் பற்றி நாம் மும்பையில் அமர்ந்துகொண்டு பேசமுடியாது. தென்னாப்பிரிக்காவில், அங்குள்ள மைதானங்களின் சூழ்நிலையைப் பொறுத்தே அதை நாம் முடிவு செய்ய வேண்டும். வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தனை பேர் இருந்தாலும், ஒரு போட்டியில் நிச்சயம் சுழற்பந்து வீச்சாளருக்கான இடம் வேண்டும். ஆடுகளங்களின் தன்மை சிறிது மாறினாலும், சுழற்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் திருப்புமுனை ஏற்படுத்துவார்கள்’ என்றார்.