நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி! 74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்த பாகிஸ்தான்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது.

New Zealand

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி டுனேதின் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்ஸன் 73 ரன்கள் சேர்த்தார். ராஸ் டெய்லர் 52 ரன்களும், கப்தில் 45 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ராயீஸ், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சின்னாபின்னமானது. தொடக்க வீரர்கள் 5 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் அந்த அணி 16 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. இதனால் அந்த அணி மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகக்கூடுமோ என்ற நிலை ஏற்பட்டது. எனினும் இறுதி விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஆமிர் (14 ரன்), ரும்மன் ராயீஸ் (16 ரன்) மோசமான சாதனையைத் தவிர்க்க உதவினர். முடிவில் பாகிஸ்தான் 74 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமது 14 ரன்களுடன் களத்திலிருந்தார். 183 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பவுல்ட் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 

பாகிஸ்தான் அணி 1993-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஒருநாள் போட்டியில் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த ஆட்டத்தில் அதேபோன்றதொரு மோசமான சாதனையை பாகிஸ்தான் தவிர்த்தது என்றே சொல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!