டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். 

Photo Courtesy: BCCI

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ரிஷாப் பாண்ட், ஹிமாச்சலப்பிரதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 

தொடர்ச்சியாக அதிரடி ஆட்டம் ஆடிய பாண்ட், 32 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டி20 போட்டிகளில், இது சர்வதேச அளவில் இரண்டாவது அதிவேகமான சதமாகும். புனேவாரியர்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்ததே இந்த வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. ரிஷாப் பாண்டின் அதிரடியால் டெல்லி அணி, 11.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ரிஷாப் பாண்ட் 38 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 12 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை அவர் அடித்தார். மறுமுனையில், கவுதம் காம்பீர் 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!