வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (14/01/2018)

கடைசி தொடர்பு:15:30 (14/01/2018)

ஜூனியர் உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய டிராவிட் படை!

ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்தது. 

India

Photo Credit: ICC

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிரிவில், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் உள்ளன. இந்திய அணி பிரித்வி ஷா தலைமையில் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவைச் சந்தித்தது. பே ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தனர். பிரித்வி ஷா 94 ரன்களிலும், மன்ஜோத் கல்ரா 86 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சுப்மான் கில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். அவர் தன் பங்கு 54 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 63 ரன் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபிஷேக் ஷர்மா மட்டும் 8 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்து சிறிது நேரம் அதிரடி காட்டினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது.

India

Photo Credit: ICC

329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் கைகொடுத்தார். அவர் 73 ரன்கள் சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோனதன் மெல்ரோ 38 ரன்களும், விக்கெட் கீப்பர் பாக்ஸ்டர் ஜே ஹோல்ட் 39 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். முடிவில் ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பையை வெற்றியுடன் இந்தியா தொடங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஷிவம் மவி, கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.