வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/01/2018)

கடைசி தொடர்பு:19:00 (14/01/2018)

கிரிக்கெட்டில் இப்படியெல்லாம் கூட மாற்றம் நடக்கலாம்! கணிக்கும் இங்கிலாந்து கேப்டன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேசியுள்ளார். 

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டி, 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் கொண்ட டி20 போட்டி என மூன்று பிரிவுகளில் விளையாடப்பட்டு வருகிறது. பத்து ஓவர்கள் கொண்ட டி10 போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. காலமாற்றத்துக்கேற்ப கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு மாற்றங்களைத் தொடர்ச்சியாக எதிர்க்கொண்டு வந்திருக்கின்றன. 

இந்தநிலையில் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேசியுள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ’அடுத்த பத்தாண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கும். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த மாற்றங்கள் இருக்கும். ஒவ்வொரு வகைப் போட்டிகளுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கும். சொல்லப்போனால், ஒவ்வொரு வகைக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் தனித்தனியாக பயிற்சியாளர்களை நியமிக்கும் நிலைகூட வரலாம். எனவே, எந்தநிலை ஏற்பட்டாலும் அதை எதிர்க்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்’ என்றார்.