வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (14/01/2018)

கடைசி தொடர்பு:22:30 (14/01/2018)

ஜேசன் ராய் சாதனை சதம்! ஆஷஸ் தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்ட இங்கிலாந்து

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Photo Courtesy: ICC

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பாரம்பர்ய ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி மெல்போர்ன் எம்.சி.ஜி. மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தொடக்கவீரர் ஆரோன் பின்ச் சதத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. மார்க்கஸ் ஸ்டோய்னஸ் 60 ரன்களும், மிட்செல் மார்ஷ் 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிளங்கிட் 3 விக்கெட்டுகளும், ரஷீத் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

305 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 60 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கைகோர்த்த ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஜோடி இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. மூன்றாவது விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்த நிலையில் 180 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் ஆட்டமிழந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதேபோல், ஆஸ்திரேலிய மண்ணில் சேஸிங்கின் போது வெளிநாட்டு வீரர் ஒருவர் எடுக்கும் அதிக ரன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இலக்கை 48.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டியது. ஜோ ரூட் 91 ரன்களுடனும், மொயின் அலி 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் வரும் 19-ல் நடைபெறுகிறது.