விராட் கோலி நிதான ஆட்டம்; இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் 2-வது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் னாப்பிரிக்கா அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில், தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. 

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், கேஷவ் மகராஜ் அவுட்டானார்.  அரை சதமடித்த டு பிளசிஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி பந்துவீச்சில் அஷ்வின் 4 விக்கெட்களும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். இந்திய அணி 28 ரன்கள் எடுத்திருந்தநிலையில், லோகேஷ் ராகுல் 10 ரன்களில் மார்கல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இதனால், இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் கோலி - முரளி விஜய் ஜோடி பொறுப்பாக ஆடியது. அணி எண்ணிக்கை 107 ஆக இருக்கும்போது, 46 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 10 ரன்களிலும், விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் 19 ரன்களிலும் அவுட்டாகினர். அப்போது, அணியின் எண்ணிக்கை 164 ஆக இருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கோலி, அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்களுடனும்  பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தென் ஆப்ரிக்காவைவிட 152 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் கேஷவ் மகராஜ், மார்கல், ரபடா, கிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!