307 ரன் சேர்த்தது இந்தியா... தென்னாப்பிரிக்கா திணறல் தொடக்கம்! | Virat Kohli Scores Century Against South Africa

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (15/01/2018)

கடைசி தொடர்பு:17:33 (15/01/2018)

307 ரன் சேர்த்தது இந்தியா... தென்னாப்பிரிக்கா திணறல் தொடக்கம்!

 

கோலி

Photo Credit: BCCI

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி, 85 ரன்களுடனும் பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்திலிருந்தனர். 
இன்று, மூன்றாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, சதமடித்தார். டெஸ்ட்டில் இது அவருடைய 21-வது சதமாகும். சதமடித்த சிறிது நேரத்தில், பாண்ட்யா அவுட்டானார். ரன் அவுட் முறையில் அவர் அவுட்டானார். அதுவும் அஜாக்கிரதையாக அவர் அவுட் ஆனது அதிருப்தியை ஏற்படுத்தியது. கிரீஸை நெருங்கிய அவர், பேட்டை தரையில் வைத்திருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டார். ஏனோதானோவென்று அவர் ஓடியதால்தான் விக்கெட்டை பறிகொடுக்க நேரிட்டது.

அடுத்து, அஸ்வின் களமிறங்கினார். அவர், சற்று அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதற்கிடையே, எடுக்கப்பட்ட புதிய பந்து அவர் விக்கெட்டை பறிகொடுக்கக் காரணமாயிற்று. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிலாண்டர் வீசிய பந்தை அஸ்வின் அடிக்கப் போக, அது பேட்டின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் நின்ற டூ பிளசியிடம் கேட்சாக மாறியது. அஸ்வின் 7 பவுண்டரிகளுடன் 38 ரன் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஷமி, 1 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் விராட் கோலி தனி ஒருவனாகப் போராடினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இருந்தது. 

அதன்பிறகு விராட் கோலி 153 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி திணறல் தொடக்கம் கண்டது. மார்க்ரம், அம்லா ஆகியோர் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது.


[X] Close

[X] Close