வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (16/01/2018)

கடைசி தொடர்பு:10:06 (16/01/2018)

சச்சினுடன் திருமணம்... கோலியுடன் காதல்... யார் இந்த ப்ரோக்கன் கிரிக்கெட்?!

‘சச்சினைத் திருமணம் செய்து, பின், விராட் கோலியைக் காதலித்து, இப்போது டி வில்லியர்ஸுடன் ரகசிய உறவில் இருக்கிறேன்!’ -  Bio-வே கிறங்கடிக்கிறது. Bio-னா இப்படி இருக்கணும் என பொறாமைப்படவைக்கிறது. நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் கிரிக்கெட் வெறி ஊறியவனால் மட்டுமே இப்படி பயோ வைக்க முடியும். ப்ரோக்கன் கிரிக்கெட் என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கும் கிருஷ்ணன் மாசிலாமணி அப்படிப்பட்டவர்.

ப்ரோக்கன் கிரிக்கெட்  ப்ரோக்கன் கிரிக்கெட்

ட்விட்டரில் இவருக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள். ஒரு சில பிரபலங்களுக்குக் கூட இவ்வளவு ஃபாலோயர்ஸ் இல்லை. ஆனால், இவர் பிரபலமும் இல்லை. இவர் பதிவு செய்யும் ஒவ்வொரு ட்வீட்டும் கிரிக்கெட் பற்றியது. ஆனால், கிரிக்கெட்டர்களுக்கே தெரியாதது; கிரிக்கெட் நிபுணர்களுக்கே தோன்றாதது... இவரது ஒவ்வொரு ட்விட்டிலும் ஒரு தகவல் இருக்கும், ஒரு Quote இருக்கும், ஒரு புள்ளிவிவரம் இருக்கும், ஒப்பீடுகள் இருக்கும், வர்ணனை இருக்கும், சுவாரஸ்யம் இருக்கும். மொத்தத்தில் ஏதோவொரு வகையில் அந்த ட்விட் கிரிக்கெட் ரசிகனை ஈர்க்கும்.

உலகில் எங்கு கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் இவரது டைம்லைன் களை கட்டும். நோட்டிஃபிகேஷன் நிரம்பி வழியும். இன்று தென்னாப்பிரிக்காவில் நடக்கும் போட்டியை, கடந்த தென்னாப்பிரிக்கத் தொடருடன் ஒப்பிடுவார், கோலிக்கும் ஸ்மித்துக்கும் இடையிலான மயிரிழை வித்தியாசத்தைக் கிரிக்கெட் நிபுணர்களுக்கு முன் பறைசாற்றுவார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஜொலிக்கும் ஒருவனை அடையாளம் கண்டு புகழ்வார்.

ஜேக் ஹாப்ஸ் -  முதல் தரப் போட்டிகளில் 61,760 ரன்களும், 199 சதங்களும் அடித்தவர். அதிக ரன்கள், அதிக சதங்கள் என அனைத்திலும் இவர்தான் டாப். ஆனால், இவரைப் பற்றி இன்றைய தலைமுறையினரில் 90 சதவிகிதம் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது பிறந்தநாளன்று, அவரைப் பற்றி ஒரு ட்வீட். அனைவரும் கோலி - ஸ்மித் பற்றியே பேசிக்கொண்டிருக்க, தோல்விகள் பற்றி ராகுல் டிராவிட் கூறியதைப் பற்றி ஒரு ட்வீட். இப்படி கிரிக்கெட் ரசிகர்கள் கேள்விப்படாத, பார்க்காத, அறியாத விஷயங்களைப் பகிர்வதால் ட்விட்டரில் ப்ரோக்கன் கிரிக்கெட் செம ஹிட். 

broken cricket

புள்ளி விவரத்துக்கு இருக்கவே இருக்கு கிரிக்இன்ஃபோவின் Statsguru. ஆனாலும், எல்லோராலும் அங்கு எல்லா தகவல்களையும் தேடி எடுக்க முடியாது. அதற்கென 11 பேர் கொண்ட குழு இருக்கிறது. ஆனால், இவர் தனி ஆளாக எல்லா விவரங்களையும் சேகரிக்கிறார். எங்கிருந்தெல்லாமோ தகவல்களைத் தோண்டி எடுக்கிறார். இன்று ஹர்டிக் பாண்டியா நிகழ்த்தும் சாதனையை 31 ஆண்டுகளுக்கு முன்னர் கபில் தேவ் செய்த சாதனையுடன் ஒப்பிடுகிறார். கேப்டனாக 2-வது போட்டியில் கோலி எத்தனை ரன்கள் அடித்தார், ஸ்மித் எத்தனை ரன்கள் அடித்தார் என்பது போன்ற புள்ளிவிவரங்களை அடுக்குகிறார். கிரிக்கெட் டேட்டா பேங்க் இவர் விரல் நுனியில்...! இந்த ட்விட்களால் அவருக்குப் பைசா பிரயோஜனமில்லை. ஆனால், அவருக்கு பைசா ஒரு மேட்டரே இல்லை. ஏனெனில், அவர் சச்சினை மணந்தவர்; விராட் கோலியைக் காதலித்தவர்; டி வில்லியர்ஸுடன் ரகசியமாக டேட்டிங் சென்றவர். காசெல்லாம் எம்மாத்திரம்? காசு சம்பாதிக்க வேற வேலை இருக்கு. ஆம், அவர் வங்கி அதிகாரி.

தனியார் வங்கியில் வேலை. தினமும் 9 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கவேண்டும். அடிக்கடி ஷிஃப்டுகள் மாறும். ஆனாலும், அலுவலகத்தில் இருந்துகொண்டே இதற்கும் நேரம் ஒதுக்கி செயல்படுகிறார். வங்கியில் இருந்தாலும் போட்டிகளின்போது ட்வீட்கள் போடத் தவறுவதில்லை. எதற்காகவும் கிரிக்கெட்டை விட்டுத்தருவதாய் இல்லை!  போட்டிகள் இல்லாத நாள்களிலும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தினமும் இதற்காக செலவிடுகிறார். பேட்டிகள், பழைய நிகழ்வுகள் குறித்த விவரங்களை எடுத்து வைத்துக்கொள்கிறார். ‛அப்பாடா’ என ஓய்வெடுக்க வேண்டிய நேரத்திலும் அப்பேட்டே கதி எனக் கிடக்கிறார். அதைப் பார்த்து அவரது குடும்பம் சலித்துக்கொள்வதில்லை. திட்டுவதில்லை. தட்டிக்கொடுக்கிறார்கள். 

broken cricket

"நமக்குப் பிடிச்ச விஷயத்தைச் செய்ய, குடும்பத்தோட சப்போர்ட் ரொம்ப அவசியம். எனக்கு ஃபேமிலி சப்போர்ட் நல்லாவே இருக்கு. வீக் எண்ட்ல உக்காந்து கிரிக்கெட் கிரிக்கெட்னு அதையேதான் பாத்துட்டு இருப்பேன். அவங்கள வெளியலாம் கூட்டிட்டுப் போக முடியாது. ஆனா, அவங்க அதுக்காக ஃபீல் பண்ணது கிடையாது. இதுதான் இவனுக்குப் பிடிச்சிருக்குணு புரிஞ்சுகிட்டாங்க. அதுதான் எனக்கு ரொம்ப சப்போர்டிவா இருக்கு" என குடும்ப புராணம் பாடும் கிருஷ்ணா, ஒரு நார்மலான மிடில் கிளாஸ் ஃபேமிலியைச் சேர்ந்தவர். 

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் 'Pin' செய்திருக்கும் ஒரு ட்வீட் சொல்லிவிடுகிறது அவர் சந்தித்த சங்கடங்களை... 'ஏழ்மை, மோசமான ஆங்கிலம் இவை எதுவும் உங்களைத் தடுக்க முடியாது... நம்பிக்கை இருந்தால்!' - அது உண்மைதான். "தமிழ் மீடியம்ல படிச்சவன் நான். ஆரம்பத்துல ட்வீட் போடும்போது கிராமர் மிஸ்டேக்ஸ் நிறைய வரும். ஒருசிலர் அதைக் கலாய்ப்பாங்க. சிலர் திட்டுவாங்க. நான் அதை அவமானமா நினைச்சது இல்லை. அப்படி என்னைத் திட்டுறவங்ககிட்டயும் கலாய்க்கறவங்ககிட்டயும் 'தப்பு இருந்தா நேரடியா பொறுமையா சொல்லுங்க, திருத்திக்கிறேன்'னு சொல்லிடுவேன். இப்போ என்னோட ஆங்கிலம் இம்ப்ரூவ் ஆயிருக்கு" என்று சொல்லும் கிருஷ்ணாவின் கிரிக்கெட் காதலுக்கு ஆங்கிலமோ, அவமானமோ முட்டுக்கட்டையாக இருக்கவில்லை.

Krishnan

 
அவர் சந்தித்த மோசமான நாள்கள்தான் இன்று அவருக்கான பாதையை வகுத்துக்கொடுத்துள்ளன. இந்த ட்விட்டர் பக்கம் உருவாகவும் அவர் சந்தித்த சங்கடங்கள்தான் காரணம். "2012-ல  பெர்சனலா சில பிரச்னைகள். அப்போ கிரிக்கெட்லாம் மறந்தே போயிருந்துச்சு. பிரச்னையிலிருந்து வெளிய வர ஒரு லாங் டிரைவ் போனேன். 'நமக்குப் பிடிச்ச விஷயத்துல மனச செலுத்தணும்'னு தோணுச்சு. கிரிக்கெட்தான்னு முடிவு பண்ணேன். அப்போதான் சில கிரிக்கெட் பேஜ்கள் பிரபலமடைஞ்சிட்டு இருந்துச்சு. ட்விட்டர்ல ஒரு பேஜ் ஸ்டார்ட் பண்ணணும்னு முடிவு செஞ்சு ஆரம்பிச்சேன்" என்று ப்ரோக்கன் கிரிக்கெட் தொடங்கிய கதை சொல்கிறார்...

"மக்களுக்கு எப்பவுமே 'நம்பர்ஸ்' மேல ஒரு ஈர்ப்பு இருக்கு. எண்கள் வழியே எது சொன்னாலும் கவனிப்பாங்க. அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போகும். அதனால், அப்படியான விஷயங்களைப் பதிவு பண்றதுல தீவிரமா இருந்தேன். அது ஹிட்டும் ஆயிடுச்சு. நிறையப் பேர் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க. அதனால் இன்னும் தீவிரமா அதுக்காக நேரம் செலவழிச்சிட்டு இருக்கேன்" என்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஐ.பி.எல் அணிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கௌன்ட்களும், டாம் மூடி, அஷ்வின், அரவிந்த் சாமி போன்ற பிரபலங்களும் இவரது ஃபாலோயர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள்.

broken cricket

ஆரம்பத்தில் கொஞ்சம் 'சர்காஸ்டிக்'காகத்தான் தொடங்கியுள்ளார். சிலர் எல்லைமீறி பேசத்தொடங்கியதால், நெகட்டிவான எந்த விஷயங்களையும் பதிவு செய்வதில்லை என்ற தீர்க்கமாக முடிவெடுத்தார். சச்சின், தோனி, கோலி என ஒருதலைபட்சமாக யாரையும் கொண்டாடுவதில்லை. கிரிக்கெட்டில் ஜொலிப்பவர் எவராக இருந்தாலும் சரி, அவர்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கத் தவறியதில்லை இந்த ப்ரோக்கன் கிரிக்கெட். ஆப்கானிஸ்தான் வீரராக இருந்தாலும் சரி, மகளிர் கிரிக்கெட்டில் அறியப்படாத வீராங்கனையாக இருந்தாலும்சரி, அண்டர் 19-ல் காலடி எடுத்துவைக்கும் இளம் வீரராக இருந்தாலும் சரி, பாரபட்சமில்லாமல் பாராட்டுவார். 

இவற்றையெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்துவருவதுதான் ஆச்சர்யம். இவரது முயற்சி கண்டு, யாரென்றே தெரியாத ஒருசிலர், கிரிக்கெட் மற்றும் விளையாட்டு பற்றிய பதிவுகள் செய்ய இவருக்கு உதவிவருகின்றனர். "ஃபேஸ்புக்ல மீம்ஸ் மூலமா நிறைய விஷயங்கள் சொல்லிட்டு இருந்தோம். ட்விட்டர் மூலமா எனக்குப் பழக்கப்பட்ட அந்த 4 பேரும் அதுக்கு உதவுனாங்க. ஆனா, ஒருசிலர் அந்த மீம்களை அப்படியே எடுத்து அவங்க பேஜ்ல பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. அவங்ககிட்ட அப்படி பயன்படுத்தவேண்டாம்னு சொல்லிப் பாத்தேன். ஆனா, ஒருசிலர் கேக்கல. நாம போட்ட விஷயத்தைத் திருடிட்டு நம்மகிட்டயே சண்டை போடறாங்க. சரினு விட்டுட்டேன்" என்கிறார் கிருஷ்ணா. 

broken cricket

இவருக்கு உதவியாக இருப்பவர்களும் ஒருவருக்கொருவர் பழக்கம் இல்லாதவர்கள். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காதவர்கள். விளையாட்டின் மீதுள்ள தங்களின் ஆர்வத்துக்காக இணைந்து செயல்பட்டுவருகின்றனர். கிரிக்கெட் மட்டுமில்லாது மற்ற களங்களிலும் இப்போது இயங்கி வருகின்றனர். ப்ரோக்கன் ஸ்டேட்ஸ், ப்ரோக்கன் பண்டிட்ஸ் என்ற அவரது ட்விட்டர் பக்கங்களும் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. இவரது ட்வீட்களைப் பார்த்து, முன்னணி விளையாட்டு சேனலுடன் தொடர்புடைய நிறுவனம் இவரை வேலைக்கு அமர்த்த விரும்பியது. ப்ரோக்கன் கிரிக்கெட் பக்கத்தை நிறுத்தவேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு சம்மதிக்காமல் அந்த வேலையை நிராகரித்தார். காரணம் - ப்ரோக்கன் கிரிக்கெட்டை அவர் உடைக்க விரும்பவில்லை!


டிரெண்டிங் @ விகடன்