வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (16/01/2018)

கடைசி தொடர்பு:12:57 (22/01/2018)

ஆரோன் ஃபின்ச் - பெர்ஃபெக்ட் கேப்டன் மெட்டீரியல்... எந்த அணிக்கு? ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 4 #IPLAuction

ஐ.பி.எல் தொடருக்கு ஒரு விசித்திர வரலாறு இருக்கிறது. இதுவரை நடந்த 10 தொடர்களை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் தலைமை தாங்கிய அணிகளே வென்றுள்ளன. கம்பீர், தோனி 2 முறை, ரோஹித் 3 முறை கோப்பையை வென்றுள்ளனர். மற்றபடி 2008, 2009, 2016 ஆண்டுகளில் முறையே கோப்பையை வென்ற மூவரும் ஆஸ்திரேலியர்கள்: வார்னே, கில்கிறிஸ்ட் மற்றும் வார்னர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் மூவரும் ரெகுலர் கேப்டன்கள் இல்லை. இந்த வரலாறு 2018 ஏலத்தில் ஒரு வீரருக்குச் சாதகமாகலாம். அவர் - ஆரோன் ஃபின்ச்! #IPLAuction

Finch

அதிரடி ஓப்பனரான ஃபின்ச்தான் உலகின் நம்பர்-2 டி-20 பேட்ஸ்மேன். சர்வதேச டி-20 போட்டிகளில் இவரது சராசரி 37.73! இது டேவிட் வார்னரின் (27.35) சராசரியைவிட அதிகம். இவரது ஸ்ட்ரைக் ரேட்டும் (148.36) வார்னரின் ஸ்ட்ரைக் ரேட்டைவிட (139.24) அதிகம். ஆனால், வார்னருக்கு இருக்கும் மவுசு ஐ.பி.எல் தொடரில் ஃபின்ச்சுக்கு இல்லை. 2010-ல் இருந்து ஐ.பி.எல் தொடரில் ஆடிவரும் ஃபின்ச், 8 சீசன்களிலும் சேர்த்து இதுவரை 65 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். அதனால்தான், ஐ.பி.எல் தொடரில் அவர் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு அவரைக் குறைகூறி பிரயோஜனம் இல்லை. 2010-ம் ஆண்டு அவர் ராஜஸ்தான் அணியில் ஆடியபோது வார்னே, வாட்சன், ஷான் டெய்ட் போன்ற வீரர்களைத் தாண்டி அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மைக்கேல் லம்ப், நமன் ஓஜா என இரண்டு ஓப்பனர்களும் நல்ல ஃபார்மில் இருந்தனர். அதனால் அந்த சீசனில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். அடுத்த 2 ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில். இம்முறை சேவாக், டேவிட் வார்னர் கூட்டணியால் ஓப்பனிங்கில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இரண்டு சீசன்களிலும் சேர்த்து 8 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் ஃபின்ச்.

Finch

ஐ.பி.எல் தொடரில் தனக்கென ஒரு இடத்தை அவர் தக்கவைத்துக்கொண்டது 2013-ம் ஆண்டுதான். புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடிய ஃபின்ச், சில போட்டிகளில் அணியை வழிநடத்தவும் செய்தார். அந்த சீசனில் 14 போட்டிகளில் 456 ரன்கள் குவித்து அசத்தினார் ஃபின்ச். அடுத்த ஆண்டு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 309 ரன்கள் எடுத்தார். அந்த சீசனில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது உண்மைதான். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டவர், காயம் காரணமாக விலகினார். ஆனால், அதற்கடுத்த சீசன்களில் அவருக்கான ஓப்பனிங் வாய்ப்புகள் மீண்டும் குறைந்தது. 

அடுத்த 2 ஆண்டுகள், புதிதாக கலந்துகொண்ட குஜராத் லயன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம், ஜேசன் ராய், இஷான் கிஷான் என நிறைய ஓப்பனர்கள் நிறைந்திருந்ததால், அந்த அணிக்காக விளையாடிய 26 போட்டிகளில் அவரால் 8-ல் மட்டுமே தொடக்க வீரராகக் களமிறங்க முடிந்தது. ஆனாலும், இந்த 2 சீசன்களில் 7 அரைசதங்கள் உள்பட 692 ரன்கள் எடுத்தார் ஃபின்ச். ராயல் சேலஞ்சர்ஸ் அணி 'கிறிஸ் கெய்லோடு யாரைக் களமிறக்கலாம்' என்று யோசித்த போதெல்லாம், தரமான ஓப்பனரான ஃபின்ச், பெஞ்சில் அமர்ந்திருந்தார். மிடில் ஆர்டரிலும் நன்றாக விளையாடிய பாவத்தினால், ஓப்பனிங் ஸ்லாட் பறிபோனது. ஆக, ஆரோன் ஃபின்ச் எனும் உலகத்தர ஓப்பனரை இன்னும் ஐ.பி.எல் முழுமையாகப் பார்க்கவில்லை.

அதனால்தான் ஃபின்ச், 'டேஞ்சரஸ்' பேட்ஸ்மேனாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒருவேளை, ஓப்பனராகவே அவர் விளையாடியிருந்தால், கெய்ல், வார்னருக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார். இந்த முறையாவது அவர் ரெகுலர் ஓப்பனராகக் களமிறங்கினால், நிச்சயம் டாப் ஸ்கோரர்களில் ஒருவராக இருப்பார். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், கேப்டனாகவும் அவரை அணிகள் தேர்வு செய்தால் டபுள் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புண்டு! எப்படி...?

Finch - IPL

PC - BCCI

10 ஐ.பி.எல் தொடர்களில் ஏழு தொடர்களை இந்தியக் கேப்டன்களே வென்றுள்ளன. மற்ற 3 தொடர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் வழிநடத்திய அணிகள்தான் வென்றுள்ளன. பிரண்டன் மெக்கல்லம் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்), டேனியல் வெட்டோரி (ராயல் சேலஞ்சர்ஸ் பேங்களூர்), மகிளா ஜெயவர்தனே (டெல்லி டேர்டெவில்ஸ்), குமார் சங்கக்காரா (கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ்) போன்றவர்களும் ஐ.பி.எல் அணிகளை வழிநடத்தியுள்ளனர். ஆனால், அவர்களால் தங்கள் அணியை சாம்பியனாக்க முடியவில்லை. 2 முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி 20 உலகக்கோப்பையை வென்று தந்த டேரன் சமியாலும், ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை.

அதேசமயம், ஐ.பி.எல் சாம்பியனான 3 கேப்டன்கள் - ஷேன் வார்னே, ஆடம் கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர்... இவர்கள் யாரும் ரெகுலர் கேப்டன்கள் இல்லை. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரெகுலர் கேப்டன்களே ஐ.பி.எல் தொடரில் சாதித்ததில்லை. ரிக்கி பான்டிங் கொல்கத்தாவில் ஆடியபோது கங்குலிதான் அணியை வழிநடத்தினார். மும்பை அணிக்கு அவர் கேப்டனாக இருக்க, விரைவில் அணியிலேயே இடத்தை இழந்தார். மைக்கேல் கிளார்க் புனே அணியை வழிநடத்தும் முன்பே காயத்தால் விலகினார். ஸ்டீவ் ஸ்மித் (புனே சூப்பர்ஜெயின்ட்ஸ்), ஜார்ஜ் பெய்லி (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) வழி நடத்திய அணிகள் ஃபைனல்வரை வந்து வீழ்ந்தன. அன்றைய ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் கேமரான் ஒயிட் சிலநாள்கள் வழிநடத்திய டெக்கான் சார்ஜர்ஸும் சோபிக்கவில்லை. ஆக, சர்வதேசக் கேப்டன்கள் எவரும் இங்கு சோபித்ததில்லை.

Finch - IPL

PC - BCCI

அந்த வகையில், வார்னருக்கு அடுத்த ஆளாக ஃபின்சுக்கு வாய்ப்புகள் அதிகம். புனே வாரியர்ஸ் அணியை சில போட்டிகளில் வழிநடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய டி-20 அணியையும் 9 போட்டிகளில் வழிநடத்திய அனுபவம்  இருக்கிறது. லீக் போட்டிகளில் விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார். 2012-ம் ஆண்டு ரெனகேட்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார் ஃபின்ச்! டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்குக் கேப்டன் இல்லாததால் ஃபின்ச்சைத் தேர்வு செய்வது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். 

சரியான கேப்டன் இல்லாததால்தான் இந்த இரு அணிகளும் சமீபகாலமாக திணறி வருகின்றன. பஞ்சாப் அணி அக்சர் படேலை மட்டும் தக்கவைத்துள்ளதால், ஏலத்தின்போது எப்படியும் முன்னணி வீரர்களைத் தேடும். அந்த அணியில் சாதாரணமாகவே ஆஸ்திரேலிய வீரர்கள் நிறைந்திருப்பர். ஷான் மார்ஷ், ப்ரெட் லீ, ஹோப்ஸ் எனத் தொடங்கி, பெய்லி, ஜான்சன், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என பிளேயிங் லெவனில் ஆஸ்திரேலியர்கள் இல்லாமல் அந்த அணி களம் கண்டதே இல்லை. அப்படிப் பார்க்கையில் அவர்கள் ஃபின்ச்சுக்கு முயற்சி செய்யலாம். ஓப்பனர், கீப்பர் என இரண்டு பாக்ஸ்களையும் ரிசப் பன்ட் டிக் செய்வதால், டி காக்குக்குப் பதிலாக, மற்றொரு ஓப்பனராக ஃபின்ச்சை வாங்குவது டெல்லி அணிக்கும் சரியான சாய்ஸ்!

Finch

அதுமட்டுமல்லாமல், கடைசியாக விளையாடிய 5 டி-20 போட்டிகளில் 158 ரன்களும், கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் (இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிவரை) 2 சதம், 2 அரைசதம் உள்பட 425 ரன்களும் குவித்து நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். ஆக, இதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத ஃபின்ச்-க்கு இந்த ஏலத்தில் முக்கியத்துவம் தந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்! அந்த மாற்றத்துக்காக டெல்லி, பஞ்சாப் அணிகள் இவருக்குப் போட்டி போடலாம்! 

டெல்லி அணியின் முடிவு, இந்திய தேசிய அணியின் எதிர்காலத்துக்கு மிகமுக்கியம். ஏன்...? அடுத்த பாகத்தில்!


டிரெண்டிங் @ விகடன்