தடுமாறும் இந்தியா... வெற்றி முனைப்பில் தென்னாப்பிரிக்கா..! #IndVsSA

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான  2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா 35/3 என்ற நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. 

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி, 150 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா, 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில், முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு லீட் ரன்கள் இருக்கவே, இந்திய அணிக்கு டார்கெட்டாக 287 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியின் ஒபனர்கள் முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல், நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தனர். ஆயினும், ரபாடா வீசிய பந்து ஒன்று லோவாக இருக்க 9 ரன்களில் முரளி விஜய் வெளியேறினார். இதையடுத்து, ராகுலும் பாயின்ட்டில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலியும் எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. இதையடுத்து களம்கண்ட பார்த்திவ் படேல், புஜாராவுடன் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார். நான்காவது நாள் முடிவில், இந்திய அணி, 3 விக்கெட்டுகள் பறிகொடுத்து 35 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 252 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு வெற்றி வசப்படும்.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!