வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (17/01/2018)

கடைசி தொடர்பு:17:37 (17/01/2018)

ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா மெத்தன ஆட்டமா? - கொதிகொதிக்கும் வார்னர்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, மெல்பர்னில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணியிடம் மண்ணைக் கவ்வியது ஆஸ்திரேலியா. ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தைத் தவிடுபொடியாக்கிய ஆஸ்திரேய அணியா இப்படி மெத்தனமாகச் செயல்படுகிறது என்று ஊடகங்கள் பரவலான சந்தேகங்களை எழுப்பின. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர். 

டேவிட் வார்னர்

இதுகுறித்து அவர் கூறுகையில், `எங்கள் ஆஷஸ் வெற்றியைத்தான் நாங்கள் கொண்டாடினோம். ஆஷஸ் எங்களுக்கு மிக நீண்டத் தொடராக இருந்தது. அந்தத் தொடரில் நாங்கள் விளையாடிய விதமும் இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்ததும் கொண்டாட்டத்துக்கு உரியதுதான். இதைச் சிலர் மிக அதீத கொண்டாட்டம் என்று நினைத்தால், அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. எந்த வித ஆட்டம் என்றாலும் நாங்கள் ஓர் அணியாக அதற்குத் தயாராகவே இருப்போம். ஆஸ்திரேலிய அணிக்காக மற்றும் ஓர் ஆட்டத்தில் விளையாட உள்ளோம் என்பது மட்டும்தான் எங்கள் மனதில் எப்போதும் நிலைகொண்டிருக்கும்' என்றார் தீர்க்கமாக.