வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (17/01/2018)

கடைசி தொடர்பு:16:17 (17/01/2018)

2 வது டெஸ்ட்டிலும் தோல்வி; தொடரையும் இழந்தது! இந்திய வீரர்களை அச்சுறுத்திய லுங்கிசானி #IndVsSA

தென்னாப்பிரிக்கா இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் 2-0 என்ற ரீதியில் இழந்தது இந்திய அணி.

South African team

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான  2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி, 150 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில், முகமது ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்கு லீட் ரன்கள் இருக்கவே, இந்திய அணிக்கு டார்கெட்டாக 287 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸை நான்காவது நாளான நேற்றுத் தொடங்கிய இந்திய அணி, நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதையடுத்து கடைசி நாளான இன்று களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.  51 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்தியா. இதனால், இரண்டாவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி சார்பில், லுங்கிசானி கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது தென்னாப்பிரிக்கா.