வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (17/01/2018)

கடைசி தொடர்பு:12:57 (22/01/2018)

டெல்லி எடுக்கும் முடிவும்... இரண்டு வீரர்களின் எதிர்காலமும்...! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 5 #IPLAuction

 

பாகம் - 1 | பாகம் -2 | பாகம் -3 | பாகம் - 4

வரும் 27,28 தேதிகளில் நடக்கும் ஐ.பி.எல் ஏலம்தான், அடுத்த சில ஆண்டுகளுக்கு ஒவ்வோர் ஐ.பி.எல் அணிகளின் செயல்பாட்டுக்கும் அஸ்திவாரம். அதனால், ஒவ்வோர் அணியும் யாரை வாங்கும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஏலத்தின்போது அணிகள் எடுக்கும் முடிவுகள், அந்தந்த அணிகளின் எதிர்காலத்தை மட்டுமே நிர்ணயிக்கும். ஆனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முடிவுகள், இந்திய தேசிய அணிக்கு மிகவும் முக்கியமானவை. அப்படியானால், டேர்டெவில்ஸ் அணியின் முடிவு இந்திய தேசிய அணியைப் பாதிக்குமா? ஆம், பாதிக்கும்! ஒரு ஐ.பி.எல் அணி எடுக்கும் முடிவு, தேசிய அணியை எப்படி பாதிக்கும்...? #IPLAuction

Delhi Daredevils #IPLAuction

2004-ம் ஆண்டு தோனி இந்திய அணிக்கு அறிமுகமானார். அதற்கு முன்புவரை சரியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிடைக்காமல், பல வருடங்களாகத் தடுமாறிக்கொண்டிருந்தது இந்திய அணி. நயன் மோங்கியா, விஜய் தாஹியா, அஜய் ராத்ரா என பேட்டிங்கில் கொஞ்சம்கூட பெர்ஃபார்ம் செய்யாத கீப்பர்களே வந்துகொண்டிருக்க, டிராவிட் விக்கெட் கீப்பராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கு அவர் கீப்பராக, டெஸ்ட் போட்டியில் அந்தப் பணியை ஏற்றார் பார்த்திவ் படேல். அடுத்து அவருக்குப் போட்டியாக தினேஷ் கார்த்திக். முன்பு சொன்னவர்களைவிட இவர்கள் ஓரளவு சுமாரான பேட்ஸ்மேன்கள் என்றாலும், உலகத்தரம் வாய்ந்த கீப்பர்களா என்றால்...இல்லை! 

தோனி இந்திய அணிக்குள் நுழைந்தபின், கீப்பர், பேட்ஸ்மேன் என இரண்டு ரோல்களையும் நன்றாகவே செய்தார். அவர் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும், நம்பர் - 7ல் விளையாடுவதற்கான டீஸன்டான சாய்ஸாகவே இருந்தார். 2014-ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றபோது, அவர் இடத்தை ரித்திமான் சஹா நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கீப்பிங்கில் அசத்தினாலும், சஹாவால் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டிருந்தாலும், அவ்வப்போது மட்டுமே களமிறங்குவதால், பார்த்திவ் மற்றும் கார்த்திக் ஆகியோரால் இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பை அளிக்க முடியவில்லை.

Dhoni

2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி முழுவதுமாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறக்கூடும். அப்போது சஹாவுக்கு 35 வயதும், பார்த்திவ், கார்த்திக் ஆகியோருக்கு 34 வயதும் ஆகியிருக்கும். மூவரும் கிரிக்கெட் அரங்கில் தங்களின் கடைசி காலகட்டத்தில் இருப்பார்கள். இந்நிலையில், தோனி போன்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடுவது இந்திய அணிக்கு அவசியம். மீண்டும் தாஹியா, ராத்ரா போன்ற வீரர்களை அறிமுகப்படுத்தி, ஓரிரு தொடருக்குப் பின் அடுத்த ஆளைத் தேடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. டெஸ்ட் போட்டியில், ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான தேவை இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது. தென்னாப்பிரிக்கத் தொடரில் பார்திவ், சஹா இருவராலும் சோபிக்க முடியவில்லை. அதனால், தோனியின் வாரிசை இப்போதே கண்டறியவேண்டும்.

ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் இந்த இருவரும் தோனியின் இடத்தை நிரப்ப தகுதியான நபர்களாகக் கருதப்பட்டனர். ஐ.பி.எல் தொடரின்மூலம் லைம்லைட்டுக்கு வந்த சஞ்சு சாம்சனுக்கு வயது 23. ரிசப் பன்ட் இப்போதுதான் 20-ஐத் தொட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இவர்கள் இருவருமே ஓரளவு சோபித்துள்ளனர். 2017 ஐ.பி.எல் சீசனில் முறையே 386, 366 ரன்கள் எடுத்தனர். முதல்தரப் போட்டிகளிலும் நல்ல சராசரி வைத்துள்ளனர். ரிஷப் பன்ட், முதல் தரப் போட்டிகளில் 53.62 சராசரி வைத்துள்ளார். இந்த ரஞ்சி சீசனில் டெல்லி அணியின் கேப்டனாகவும் இருந்தார். இதற்கும், இந்தக் கட்டுரைக்கும், டேர்டெவில்ஸ் அணிக்கும் என்ன சம்பந்தம்? இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர்களாகக் கருதப்படும் அந்த இருவரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடுவதுதான் பிரச்னை!

Parthiv, Saha, DK

ராஜஸ்தான் அணி சஸ்பெண்ட் செய்யப்பட, 2016 சீசனுக்கான ஏலத்தில் டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டார் சாம்சன். 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பையில் பட்டையைக் கிளப்ப, உள்ளூர் வீரர் பன்ட்டையும் வாங்கியது டெல்லி. ஏற்கெனவே குவின்டன் டி காக் அணியில் இருக்கும்போது இரண்டு கீப்பர்கள் வாங்கப்பட்டனர். அதோடு நின்றதா டெல்லி? இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸையும் வாங்கியது. அந்த சீசனில் 4 ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுடன் விளையாடியது டேர்டெவில்ஸ். 13 போட்டிகளில் டி காக் விக்கெட் கீப்பராகப் பணியாற்றினார். அவர் விளையாடாத ஒரேயொரு போட்டியில் மட்டும் சஞ்சு சாம்சன் கீப்பிங் செய்தார். 10 போட்டிகளில் விளையாடிய ரிஷப், ஒரு போட்டியில்கூட கீப்பிங் செய்யவில்லை. 

டெல்லி அணியில் நிலமை இப்படி இருக்க, அந்த சீசன் ஃபைனலுக்குச் சென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் நிலமையோ வேறு மாதிரி இருந்தது. ஆர்.சி.பி அணியில் ரெகுலர் கீப்பரே இல்லை. கே.எல்.ராகுல், கேதர் ஜாதவ் இருவரும்தான் அந்தப் பணியைச் செய்தனர். 17 போட்டியும் நமன் ஓஜாவைத்தான் ஆடவைத்தது சன்ரைசர்ஸ். அந்தத் தொடரில் அவரது சராசரி 13.60. ஆனாலும், அவரையே களமிறக்கக் காரணம், அவர்கள் அணியிலிருந்து மற்றொரு கீப்பர் ஆதித்யா தாரேதான். இப்படி தரமான கீப்பர்களே இல்லாமல் இரு அணிகள் ஃபைனல்வரை செல்ல, 4 கீப்பர்களை வைத்திருந்தது டேர்டெவில்ஸ்.

Samson, Dekock, Pant IPL

2017 ஐ.பி.எல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, காயம் காரணமாக வெளியேறினார் டி காக். அவரது இடத்தை நிரப்பினார் ஆதித்யா தாரே. மீண்டும் 4 கீப்பர்களோடு களமிறங்கியது. 14 போட்டிகளிலும் ரிஷப் பன்ட்தான் கீப்பராக இருந்தார். சாம்சன் ஃபீல்டராகத்தான் அணியில் ஆடினார். அவர்கள் விளையாடிய 2-வது போட்டியில், முதல் நான்கு பேட்ஸ்மேன்களுமே கீப்பர்களாகத்தான் களமிறங்கினர். இந்த 2 சீசன்களில் 6 போட்டிகளில், பிளேயிங் லெவனில் 4 கீப்பர்களோடு களமிறங்கியுள்ளது டெல்லி அணி. 17 போட்டிகளில் குறைந்தபட்சம் 3 ஸ்பெஷலிஸ்ட் கீப்பர்களோடு களமிறங்கியுள்ளனர். 

இதனால் பிரச்னை வருமா...? நிச்சயம் வரும். இந்த இரண்டு சீசன்களில், 28 போட்டிகளில் ஆடிய சஞ்சு சாம்சன், கீப்பராக விளையாடியது வெறும் 1 போட்டியில் மட்டும்தான். இப்படியிருக்கையில், இந்திய அணிக்குள் அவரால் எப்படி நுழைய முடியும்? முச்சதம் அடித்த கருண் நாயரிலிருந்து, துணைக் கேப்டன் ரஹானே வரை பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். லிமிடட் ஓவர் ஃபார்மட்டிலும் இந்திய அணியின் பேட்டிங்குக்குப் பஞ்சமே இல்லாமல் வீரர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். இப்படியிருக்கையில், ஒரு பேட்ஸ்மேனாக அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியாது. 

Risabh Pant

இந்திய அணிக்குள் நுழைவதற்கு அறிவிக்கப்படாத வாயிலாக மாறியிருக்கும் ஐ.பி.எல் தொடரில், கீப்பராகத் தன்னை நிரூபித்தால் மட்டுமே அவரால் அணிக்குள் இடம்பிடிக்க முடியும். ரிஷப் பன்ட்டுக்கும் இதே நிலைமைதான். ரஞ்சி கோப்பைக்கு டெல்லி அணியின் கேப்டனாக இருந்தவர். கிரிக்கெட் சங்க அரசியலால், சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் எதிர்காலம் என நினைத்த உன்முக்த் சந்த், வெளியே அமரவைக்கப்பட்டுள்ளார். கம்பீருக்கும் இடமில்லை. இப்படியான அரசியலால்தான் கடைசி காலத்தில் ஹரியானா அணிக்காக ரஞ்சி கோப்பையில் பங்கேற்றார் சேவாக். இப்படியான கிரிக்கெட் சங்கம், இந்த 19 வயது வீரரை எங்கே நிறுத்தும் என்று சொல்ல முடியாது!

கடந்த 2 சீசன்களிலும் கவனம் ஈர்த்த பன்ட்டுக்கு இது மிகவும் முக்கியமான சீசன். டேர்டெவில்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டிருப்பதால், அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான், டெல்லி அணி ஏலத்தில் எடுக்கும் முடிவு முக்கியத்துவம் பெறும். RTM கார்டு மூலம் அவர்கள் இன்னும் இரண்டு வீரர்களைத் தக்கவைக்க முடியும் - ஒரு இந்திய வீரர், ஒரு வெளிநாட்டு வீரர். ஏற்கெனவே பன்ட் இருப்பதால், சாம்சன், டிகாக் இருவரையும் அவர்கள் தக்கவைக்காமல் இருப்பது அவசியம். டி காக், டெல்லி அணிக்கு வாங்கப்பட்டால், நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். கீப்பராகவும் அவர்தான் செயல்படுவார். அதனால், பன்ட், சாம்சன் இருவருமே ஃபீல்டர்களாகத் தொடர வேண்டியிருக்கும். 

Sanju Samson IPL

அதேசமயம், சாம்சனையும் வாங்காமல் இருந்தால், அது அவருக்கும் நல்லது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டு வந்திருப்பதால், முடிந்தவரை அவர்களுடைய பழைய வீரர்களையே வாங்க முயற்சி செய்வார். அந்த லிஸ்டில் ரஹானேவுக்கு அடுத்து சாம்சன்தான் முதல் சாய்ஸ். அங்கு அவராலும் கீப்பராக செயல்பட முடியும். டெல்லி அணி இப்படியான முடிவுகளை எடுத்தால், பன்ட், சாம்சன் மட்டுமில்லாது, அது இந்திய அணிக்கும் உதவியாக இருக்கும். இருவரும் இப்போதுதான் வளர்ந்து வருவதால், தங்களுடைய ரோலில் விளையாடுவதுதான் நல்லது. அப்படி விளையாடும்போதுதான் இந்திய அணிக்கான சரியான சாய்ஸையும் நம்மால் கண்டெடுக்க முடியும்!


டிரெண்டிங் @ விகடன்