வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (18/01/2018)

கடைசி தொடர்பு:14:45 (18/01/2018)

ஒன்றா, இரண்டா... பல இடங்களில் சறுக்கிய கேப்டன் கோலி..! இந்தியா தோற்றது ஏன்? #SAvsIND

செஞ்சுரியன் மைதானத்தில் அதுவரை சந்தித்த 236 பந்துகளையும் திடமாக எதிர்கொண்டிருந்தார் கோலி. அனுபவ மோர்கல், அசுரவேக ரபாடா, கடந்த போட்டியின் நாயகன் பிலாண்டர் மூவரையும் அற்புதமாகக் கையாண்டார். அவர்கள் யாரும் கோலிக்கு அதுவரை அப்படியொரு பந்தை வீசியிருக்கவில்லை. 16-வது ஓவரின் கடைசிப் பந்து, கோலியை மிரளவைத்தது. குட் லென்த்தில், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்டது அந்தப் பந்து. பௌன்ஸ் ஆகியிருக்கவேண்டும். ஸ்விங் ஆகியிருந்தாலும் ஆஃப் ஸ்டம்ப் லைனுக்குத்தான் வந்திருக்கவேண்டும். கோலியும் அதைத்தான் எதிர்பார்த்தார். ஆனால்... #SAvsIND

Kohli #SAvsIND

பௌன்ஸ் ஆகவில்லை. மிடில் ஸ்டம்புக்கும், லெக் ஸ்டம்புக்கும் நடுவில், கோலியின் pad-யைப் பதம் பார்த்தது. நிலைகுலைந்து உட்காந்தார் கோலி. அந்தப் பந்தின் தரம் அப்படி. அப்பீல் செய்ததும், நடுவரின் விரல் உயர்ந்துவிட்டது. இந்தியக் கேப்டனையும், இந்தியாவின் வெற்றிக் கனவையும் மொத்தமாகக் காலி செய்தார் லுங்கி எங்கிடி. அறிமுகப் போட்டியிலேயே 6 விக்கெட்டுகள்... தென்னாப்பிரிக்கா தொடரை வென்றுவிட்டது.

ஒரு பேட்ஸ்மேனாக அந்தத் தருணம் கோலிக்கு ஏமாற்றம்தான். ஆனால், அதைவிட கேப்டன் கோலிக்கு அது மிகவும் மோசமான தருணம். இதுவரை அவரது தலைமையில் இந்திய அணி ஒரு தொடரைக்கூட தோற்காமல் இருந்தது. தென்னாப்பிரிக்க மண்ணில் ஆடிய இரண்டாவது போட்டியிலேயே, அந்தப் பெருமை பறந்துவிட்டது. கேப் டவுன் போட்டி அளவுக்கு இந்தப் போட்டி மோசம் இல்லைதான். ஆனால், இந்திய வீரர்களின் ஆட்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1 சதம், 1 அரைசதம். அந்தச் சதமும் கேப்டன் அடித்ததுதான். மற்ற எந்த பேட்ஸ்மேனும் ஒழுங்காக ஆடவில்லை...புஜாரா உள்பட. மற்ற பேட்ஸ்மேன்களை மட்டும் தோல்விக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. கோலிக்கும் இதில் பொறுப்பிருக்கிறது. கேப்டன் கோலிக்கு இந்தத் தோல்வியில் பெரிய பங்கிருக்கிறது.

#SAvsIND

ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா... இலங்கையிடம் விளையாடும் ஞாபகத்தில் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார் கேப்டன். இன்றைய சூழ்நிலையில், இந்தியாவின் சிறந்த 'ஓவர்சீஸ்' பேட்ஸ்மேன் ரஹானே. அதேபோல், டெஸ்ட் போட்டிக்கான சிறந்த ஃபாஸ்ட் பௌலர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் இருவரும்தான். முதல் போட்டியில் இவர்கள் மூவருமே இல்லாத பிளேயிங் லெவனைத் தேர்வு செய்தார் கோலி. சிறப்பான தொடக்கம் தரக்கூடிய ராகுல். அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்படாததும் தோல்விக்கான காரணங்கள் வரிசையில் ஒட்டிக்கொண்டது. அந்தத் தோல்விக்குப் பிறகாவது அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இஷாந்த், ராகுல் இருவர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். ரஹானே சேர்க்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சிதான்.

ரோஹித் - இந்தியத் துணைக்கண்டத்தில், இங்கிலாந்துக்கு எதிராக ஆடியதை வைத்து தேர்வு செய்தது மிகவும் தவறான முடிவாக அமைந்துவிட்டது. கடினமான நேரத்தில், அவரால் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸ் 'பில்ட்' செய்ய முடியவில்லை. ரஹானேவின் இடத்தில் ஆடும் ஒரு வீரரிடம் இப்படியொரு பெர்ஃபாமென்ஸ்... அதேபோல் பும்ரா! இன்னும் கொஞ்சம் அனுபவம் பெற்றபின் களமிறக்கியிருக்கலாம். அறிமுகத்தோடு சேர்த்து பிரஷரையும் அன்பளிப்பாகக் கொடுத்து களமிறக்கியுள்ளனர். விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஆனால், இன்னும் லைன் அண்ட் லென்த்... டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை. ஓவருக்கு இரண்டு மோசமான பந்துகள் வீசும்போது எதிரணி பேட்ஸ்மேன்களால் ஈசியாக ரன்சேர்க்க முடியும். இந்த இடத்தில் உமேஷ் பெரிதும் உதவியாக இருந்திருப்பார்.

#SAvsIND

போட்டி தொடங்கிய பிறகும் கோலியின் தவறுகள் தொடர்ந்தன. அட்டாக்கிங் மைண்ட்செட் உடையவர் என்று கருதப்படும் விராட், பல இடங்களில் டிஃபன்ஸிவாக யோசித்தார். நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன்... தென்னாப்பிரிக்காவின் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்காமல், ரன்கள் கட்டுப்படுத்துவதில் குறியாக இருந்தார். முகமது ஷமியின் ஓவரில் ரன் அடித்துவிடுவார்கள் என நினைத்து, அவருக்கு அந்த செஷனில் ஒரு ஓவர் மட்டுமே வழங்கினார் கோலி. அப்போது சிக்கனமாகப் பந்துவீசிய இஷாந்த், பாண்டியா இருவரும்தான் அந்த செஷனில் தொடர்ச்சியாகப் பந்துவீசினர். 

அதேபோல், தென்னாப்பிரிக்க அணி 253 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோதே, இந்திய அணி புதிய பந்தை எடுத்திருக்கலாம். அப்போது, தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது. புதிய பந்தை எடுத்து அட்டாக் செய்திருந்தால், டெய்ல் எண்டர்களை சீக்கிரம் வீழ்த்தியிருக்கலாம். ஆனால், டுபிளஸ்ஸி களத்தில் இருந்ததனால் அதற்கும் தயங்கினார் கோலி. ஒருவேளை அவர் புது பந்தில் எளிதாக ரன் எடுத்துவிட்டால்...? தயங்கினார் கோலி. மிகவும் தாமதித்தே புதுப் பந்து எடுக்கப்பட்டது. முதல் ஸ்லிப்பை கீப்பருக்குத் தொலைவாக நிற்கவைத்தது, பெவிலியன் எண்டிலிருந்து மட்டுமே அஷ்வினைப் பந்துவீசச் செய்தது என கோலியின் பல முடிவுகள் அவரது அனுபவமின்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

#SAvsIND

"தென்னாப்பிரிக்க வீரர்கள் எங்களைவிடச் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக ஃபீல்டிங்கில்..." என்று பரிசளிப்பு விழாவில் கூறினார் விராட். இந்தியாவின் ஸ்லிப் பிரச்னை இன்னும் தீராத நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்களின் ஃபீல்டிங்... தட் ஸ்டொமக் பர்னிங் மொமன்ட்! பார்த்திவ் கேட்ச்சை மோர்னே மோர்கல் பிடித்தது, ரோஹித் கேட்சை டிவில்லியர்ஸ் பிடித்தது, புஜாராவை அன் அவுட்டாக்கிய ஏ.பி-யின் பெர்ஃபெக்ட் த்ரோ என மெர்சல் காட்டியது தென்னாப்பிரிக்க அணியின் ஃபீல்டிங். முன்னணி வீரர்களெல்லாம் ஃபீல்டிங்கில் மிரட்ட, பௌலிங்கில் அசத்தினார் எங்கிடி.

முதல் போட்டி. இவர் replace செய்தது - டேல் ஸ்டெய்ன்! அந்த இடத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்தார். சீம், பௌன்ஸ், ஸ்விங், வேகம் என அனைத்து ஆயுதங்களாலும் இந்திய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். சாதாரணமாக பௌன்ஸர்களை upper cut மூலம் பௌண்டரிக்கு விரட்டுவர் ஹர்டிக். எங்கிடி வீசிய அந்தப் பந்திலும், அதற்குத்தான் முயற்சி செய்தார். பந்து பௌன்ஸ் மட்டும் ஆகவில்லை. விலகி வெளியே சென்றது. சேஸ் செய்து அடித்து, அவுட்டானார் பாண்டியா. இந்திய வீரர்கள் பொறுமை இழக்கும்போதெல்லாம், சரியாகப் பந்துவீசி அவர்களது விக்கெட்டை வீழ்த்தினார் எங்கிடி. ராகுல், பாண்டியா, அஷ்வின் எல்லோரும் இவரது வலையில் வீழ்ந்தனர். இவரது பௌலிங் சிறப்பாக இருந்தது என்றாலும், அவர் ஆட்ட நாயகன் விருது வெல்வதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள்தான் முக்கியக் காரணம்.

#SAvsIND

தென்னாப்பிரிக்காவில் இறங்குவதற்கு முன்பு விளையாடிய 6 போட்டிகளில், ஒரே இன்னிங்ஸில் மட்டும்தான் இந்திய அணி 450 ரன்களுக்கும் குறைவாக ஆல்அவுட் ஆனது. அந்த ஆறு போட்டிகளில் 68 விக்கெட்டுகள் மட்டுமே இழந்தது இந்தியா. சராசரியாக ஒரு விக்கெட்டுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எடுத்தது  - 56.84 ரன்கள். ஆனால், தென்னாப்பிரிக்காவில்... 4 இன்னிங்ஸ்களிலும் ஆல்அவுட். இன்னும் ஒருமுறை கூட 350-யைத் தொடவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரு விக்கெட்டுக்கு சராசரியாக 20.05 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். 

பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறுவது, பிட்ச்சின் தன்மையை உணர்ந்து ஆடுவது, முதல் செஷனில் விக்கெட்டை இழக்காமல்  பொறுமை காப்பது என டெஸ்ட் போட்டிக்குத் தேவையான எதையுமே இந்திய பேட்ஸ்மேன்கள் பின்பற்றவில்லை. விளைவு - 33 போட்டிகள் கழித்து, தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது இந்திய அணி. கோலியின் தலைமையில் 9 டெஸ்ட் தொடர்களை வென்றுவிட்டு, ஒரு போட்டியை வெல்லவே இப்போது போராடிக்கொண்டிருக்கிறது. ஆசியாவிலேயே தொடர்ந்து ஆடுவது, ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கும் வீரர்களை டெஸ்ட் போட்டியில் களமிறக்குவது, ஃபீல்டிங் சொதப்புவது என இந்தியாவின் தோல்விக்கு அதே பழைய காரணங்கள்தான் இன்னும் வழிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அதை மாற்றிக்கொள்ளத்தான் இந்திய அணி தயங்குகிறது!


டிரெண்டிங் @ விகடன்