வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (18/01/2018)

கடைசி தொடர்பு:17:54 (18/01/2018)

பிரஸ் மீட்டில் நடந்தது என்ன... நிருபர்களிடம் கோலி கொந்தளித்தது ஏன்?! #SAvsIND

“உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வந்திருக்கிறேன். உங்களுடன் சண்டை போட அல்ல..!’’ - விராட் கோலியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

முதன்முறையாக, தோல்வி வதைக்கிறது; தலை உருள்கிறது; `Skipper of a series - losing side’ முத்திரை குத்தப்படுகிறது; ஒருவன் தன் முடிவை தவறு என்கிறான்...  அதுவும் கூட்டம் போட்டுச் சொல்கிறான்; ஆளாளுக்குக் கேள்வி எழுப்புகிறார்கள், எல்லாமே ஒரு மாதிரியான  கேள்விகள்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகள். ஆனால், பதில் சொல்லியாக வேண்டும். கோபம் வருகிறது. ஆக்ரோஷக்காரனுக்குக் கோபம் இயல்பு. விராட் கோலி ஆக்ரோஷக்காரர். பட்பட்டென வெடிக்கிறார். நிருபர்களும் விடவில்லை. வாக்குவாதம் நடக்கிறது. பிரஸ்மீட்டில் இது அபூர்வம். ஏனெனில்...

கோலி

விளையாட்டு உலகில் பிரஸ்மீட்கள் சுவாரஸ்யமானவை. அதிலும், போட்டி முடிந்த பிறகு நடக்கும் போஸ்ட் மேட்ச் கான்ஃப்ரென்ஸ்கள் கவனிக்கவேண்டியவை. கால்பந்து உலகில் மான்செஸ்டர் யுனைடெட் மேனஜேர் ஜோஸே மொரினியோ, பிரஸ்மீட்டில் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மீம் மெட்டீரியல். ஸோ... பார்த்துப் பேச வேண்டும். வெற்றி பெற்ற கேப்டனுக்கு, போஸ்ட் மேட்ச் கான்ஃப்ரென்ஸ் பெரும்பாலும் பிரச்னையில்லை. ஒரே டெம்பிளேட். ஆட்ட நாயகனைப் புகழ்வது... அணியைப் புகழ்வது. தோல்வியடைந்த கேப்டனுக்கு அப்படியல்ல; What went wrong-ல் ஆரம்பித்து, `நீங்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள்?' என நோண்டி நொங்கெடுப்பார்கள். Form out ஆன சீனியர் பிளேயரிடம் `எப்போது ஓய்வு?’ என மறைமுகமாகக் கேள்வி எழும். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும். ஓய்வு குறித்த ஆஸ்திரேலிய நிருபரின் கேள்விக்கு தோனி பாணியில் பதில் சொன்னால், ரகளையாக இருக்கும். பொறுமையிழந்தால்  இப்படித்தான்... மறுநாள் மேட்ச் ரிப்போர்ட்டைவிட பிரஸ் கான்ஃப்ரென்ஸ் மேட்டர் விஸ்வரூபம் எடுத்து நிற்கும். 

அரிதினும் அரிதாகவே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வாக்குவாதம் நடக்கும். அதுவும் கிரிக்கெட்  பிரஸ்மீட்களில் வாக்குவாதம் அபூர்வம். ஏனெனில், பிரஸ்மீட்டின்போது யார் கேள்வி கேட்க வேண்டும், எத்தனை கேள்விகள் கேட்கப்பட வேண்டும், பிரஸ்மீட் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பதை அந்த அணியின் மீடியா மேனேஜர்தான் முடிவுசெய்கிறார். பிரஸ்மீட்டில் குவிந்திருக்கும் எல்லா நிருபர்களுக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைக்காது. அதுவும் வெளிநாட்டு நிருபர்களும் அமர்ந்திருக்கும் டெஸ்ட் மேட்ச்சில், ஒரே நபருக்கு இரண்டாவது கேள்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனால், செலிபிரிட்டியுடன் வாக்குவாதம் நடத்துவதற்கும் வாய்ப்பில்லை; மறுகேள்விக்கும் இடமில்லை. 

விராட் கோலி

கேப்டன், கோச், ஆட்ட நாயகன் இவர்களில் யாரேனும் வந்து அமர்ந்தவுடன், கேள்வி கேட்கும் நிருபர் முன்கூட்டியே கையை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு நிருபரும் கேள்விகளுடன் தத்தமது கையை உயர்த்துவர். யார் முதலில் கை தூக்கியது என வரிசைப்படுத்துவது மீடியா மேனேஜரின் வேலை. எல்லாவற்றையும் மெளனமாகப் பார்த்துவிட்டு, கடைசியில் அவர் விரும்பும் நிருபர்களை மட்டுமே கேள்வி கேட்க அனுமதிப்பார். `ஏன் என்னை கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை?’ என அவரிடம் சண்டைபோடவும் முடியாது. ஆக, கேட்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் அதை நறுக்கென கேட்க வேண்டும். அது சுருக்கென தைக்க வேண்டும். செஞ்சுரியன் டெஸ்ட் முடிந்ததும் அப்படியொரு கேள்வியைக் கேட்டார் நிருபர் சேதன் நருலா.

இவர், இந்திய கிரிக்கெட் நிருபர்கள் வட்டாரத்தில்  மிகப் பிரபலம். இளைஞர்தான் எனினும் 50 டெஸ்ட் மேட்ச்களை நேரில் சென்று கவர்செய்தவர். இந்திய அணியின் ஒவ்வொரு வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்திலும் தவறாது இடம்பிடிப்பவர். விவகாரம் இல்லாத ஆள் என்பதால்தான், அவரை முதல் கேள்வி கேட்க அனுமதித்தார் இந்திய அணியின் மீடியா மேனேஜர். அவரும் இந்திய கிரிக்கெட் ரசிகன் மனதில் இருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். மகாபாரத கிளைக்கதைகள்போல நீண்டது அந்தக் கேள்வி. ஒரு கேள்விக்குள்தான் எத்தனை எத்தனை கிளைக் கேள்விகள்!

கோலி

நிருபர்: கடந்த இரண்டு ஆண்டுகளாக நீங்கள் துணைக்கண்ட ஆடுகளங்களில் விளையாடியிருக்கிறீர்கள். அதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி வெற்றிபெற வேண்டும் என்பது உங்களுக்கு நன்கு பரிச்சயம். செஞ்சுரியன் பிட்ச் துணைக்கண்ட ஆடுகளங்களைப்போல இருப்பதாக இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களுமே சொன்னார்கள். அப்படி இருந்தும் வெற்றிபெற முடியவில்லை. இந்தத் தோல்வி எப்படி வதைக்கிறது? ஒருவேளை நீங்கள் பெஸ்ட் லெவனைத் தேர்வுசெய்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாமோ?

கேள்வியை முடிக்கும் முன்...

கோலி: பெஸ்ட் லெவன் எது?

நிருபர்: இந்த அணிதான் உங்கள் பெஸ்ட் லெவனா?

கோலி: ஒருவேளை நாங்கள் வெற்றிபெற்றிருந்தால், இந்த அணிதான் பெஸ்ட் லெவனா?

நிருபர்: மீண்டும் சொல்கிறேன்... இது துணைக் கண்டத்தில் உள்ள பிட்ச் போல இருக்கிறது.

கோலி: வெற்றி - தோல்வியைப் பொறுத்து நாங்கள் பிளேயிங் லெவனைத் தேர்வுசெய்வதில்லை.

நிருபர்:  என் கேள்வி, பிட்ச்சைப் பற்றியது...

கோலி: ஆனால், நீங்கள்தான் சொன்னீர்கள்... பெஸ்ட் லெவனோடு விளையாடியிருக்கலாம் என்று. ஆக, பெஸ்ட் லெவன் எது என நீங்கள் சொல்லுங்கள். அவர்களை வைத்து நாங்கள் ஆடுகிறோம். இந்தத் தோல்வி நிச்சயம் வருத்தம்தான். ஆனால், எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டால், `உனக்கு சர்வதேசப் போட்டியில் விளையாடத் தகுதியில்லை’ எனச் சொல்லிவிட முடியாது. ஏன்... சிறந்த பிளேயிங் லெவனைக்கொண்டிருந்தும் இந்தியாவில் தோல்வியடைந்ததில்லையா? விளையாடுவது யாராக இருந்தாலும் களத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். மற்றவர்களின் கருத்து என்னை பாதிக்காது.

தென்னாப்பிரிக்கா

ஆரம்பத்திலேயே சூடேற்றிவிட்டதால், அடுத்தடுத்த கேள்விகள் எல்லாம் கொஞ்சம் ஃபார்மலாகவே இருந்தன. கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு கேள்வி கொதிக்கவைத்தது. இந்தமுறை அந்தக் கேள்வியைக் கேட்டது தென்னாப்பிரிக்க நிருபர்.

நிருபர்: ஒரு அணியாக சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்று சொன்னீர்கள். அணியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதுதான் அதன் காரணமா? நீங்கள் 30-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். டெஸ்ட் மேட்ச்சில் வெற்றிபெற கன்சிஸ்டன்சி அவசியம். அது உங்களுக்குப் பின்னடைவாக இருப்பதுபோல் தெரிகிறது. இருந்தும், அணியை மாற்றிக்கொண்டே இருப்பேன் என சொல்கிறீர்கள். பிறகு எப்படி டெஸ்ட் மேட்ச்சில் பாசிட்டிவான முடிவை எதிர்பார்க்க முடியும்?

கோலி: 34 டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்?

நிருபர்: எத்தனை போட்டிகளில் நீங்கள் பிளேயிங் லெவனை மாற்றியுள்ளீர்கள்?

கோலி:  எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்? சொல்லுங்கள்... எத்தனை போட்டிகளில் வென்றுள்ளோம்? 21 வெற்றிகள். இரண்டு தோல்விகள். எத்தனை போட்டி டிரா? 

(உண்மையில் கேப்டனாக கோலி 20 போட்டிகளில் வெற்றி, ஐந்தில் தோல்வியடைந்துள்ளார்.)

நிருபர்: அதில் இந்தியாவில் வென்றது எத்தனை?

கோலி: அதெல்லாம் ஒரு விஷயமா? எங்கு விளையாடினாலும் சிறப்பாக விளையாட முயல்கிறோம். நான் இங்கே உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வந்திருக்கிறேன்; சண்டைபோட அல்ல.

இந்த பிரஸ் கான்ஃப்ரென்ஸில் பல கேள்விகள் கேட்கப்பட்டன என்றாலும், கோலி டென்ஷனானது இந்த இரு கேள்விகளுக்கு மட்டுமே. இரண்டுமே நியாயமான கேள்விகள். அந்த இரு நிருபர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகனின் கேள்விகளும் அவையே. 

இந்திய அணி

தென்னாப்பிரிக்காவில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், `ரஹானேவை எடுக்க வேண்டும்’ என்று. கோலி கடைசிவரை கேட்கவே இல்லை. இன்ஃபார்மை கணக்கில்கொண்டு ரோஹித்தைத் தேர்வுசெய்ததாக கோலி சொன்ன காரணம்  ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், அந்நிய மண்ணில் அதுவும் டெஸ்ட்டில் ரோஹித் அப்படியொன்றும் பெரிதாகச் சாதிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா ஒன்றும் இலங்கை அல்ல. பிலாண்டர், மோர்கல், ரபாடா எல்லாம் லக்மல், காமேஜ் அல்ல. அது இருக்கட்டும்.

ரஹானே ஏன் அவசியம்? செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் ரோஹித் - பார்த்திவ் படேல் பார்ட்னர்ஷிப். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் டெஸ்ட் ஆடுகிறார் பார்த்திவ். அதுவும் நான்காவது இன்னிங்ஸில் இலக்கை நோக்கிய ஆட்டம். டென்ஷன். எதிர்முனையில் இருந்த ரோஹித்துக்கும் நெருக்கடி. இந்த நேரத்தில் ரஹானே போன்ற ஒரு அனுபவ வீரர் இருந்தால், பார்த்தீவ் படேலும் தன் இயல்பான ஆட்டத்தை ஆடியிருக்க முடியும். இது ஒரு உதாரணம்தான். 

விராட் கோலி

ரஹானே ஏன் முக்கியம் என்பதை கோலியே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என எல்லா இடங்களிலும் தென்னாப்பிரிக்கா பக்கா. குறிப்பாக, ஃபீல்டிங்கில் இந்தியாவைவிட தென்னாப்பிரிக்கா ஒரு படி மேல். இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித்தை டி வில்லியர்ஸ் கேட்ச் செய்த விதமும், பார்த்திவ் படேலை மோர்கல் கேட்ச் பிடித்த விதமுமே அதற்குச் சான்று. ஆனால் இந்தியாவோ, ஸ்லிப்பில் கேட்ச்சை விட்டுக்கொண்டே இருந்தது. ஏன், விராட் கோலியே ஸ்லிப்பில் கேட்ச்சை விட்டார், இல்லையா?! ரஹானே ஸ்லிப்பில் கேட்ச் விடுவது அபூர்வம்.

தவிர, அந்தத் தென்னாப்பிரிக்கா நிருபர் சொன்ன மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. வீம்புக்கென ஒவ்வொரு டெஸ்ட்டிலும் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. இந்திய அணி, இந்த ஆண்டு முழுவதும் அதிக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளவிருக்கிறது. எனவே, கோலி தன் தவறுகளைச் சரிசெய்யாதபட்சத்தில், ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு நிருபருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், பிரஸ்மீட்டுக்குச் செல்வது சண்டைபோட அல்ல; வாக்குவாதம் நடத்த அல்ல; நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்