வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (19/01/2018)

கடைசி தொடர்பு:12:55 (22/01/2018)

அஷ்வின் எங்களுக்குத்தான்! சென்னை ரசிகர்களை மகிழ்வித்த தோனி

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேசியுள்ளார். 


இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர், இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கிறது. தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை அந்த அணி தக்கவைத்துக்கொண்டது. இதன்மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின், ஏலம் விடப்படும் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்துகொண்டார். ஐ.பி.எல் ஏலம் குறித்தும் அஷ்வின் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த தோனி, ‘நான் ஏற்கெனவே கூறியதுபோல எந்த மூன்று பேரைத் தக்க வைப்பது என்பது குறித்து எடுக்கப்பட்டது கடினமான முடிவே. அஷ்வினைப் பொறுத்தவரை, இதேபோன்ற முடிவுகளை நாங்கள் ஏற்கெனவே எடுத்துள்ளோம். ஏலத்தில் அஷ்வினை எடுக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணி முழுமுயற்சி எடுக்கும். உள்ளூர் வீரர்கள் நிறைய பேர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மூன்று வீரர்களை ஏற்கெனவே தக்கவைத்துக் கொண்டதால், அஷ்வினை நிச்சயம் ஏலம் மூலம் எடுப்போம். வீரர்கள் ஏலம் விடப்படும்போது, அஷ்வினை ஏலத்தில் எடுக்கும் வாய்ப்பு சென்னை அணிக்குத்தான் முதலில் வரும். எனவே, இந்த விவகாரத்தில் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவரை ஏலத்தில் எடுக்க நிச்சயம் நாங்கள் முயற்சி செய்வோம்’ என்றார். 2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் 27, 28-ம் தேதிகளில் நடைபெறுகின்றன.