ஒரே ஓவரில் 37 ரன்கள்..! மலைக்கவைத்த டுமினி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜே.பி. டுமினி, ஒரே ஓவரில் 37 ரன்களைக் குவித்து மலைக்கவைத்துள்ளார்.

Duminyதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர், ஜே.பி. டுமினி. ஆல் ரவுண்டரான இவர், தற்போது உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணிக்காக ஆடிவருகிறார். நேற்று நடந்த ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணியும், நைட்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய நைட்ஸ் அணி 240 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

அடுத்து களமிறங்கிய கேப் கோப்ராஸ் அணி, 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. டுமினி, 30 பந்துகளில் 34 ரன்களுடன் களத்திலிருந்தார். போனஸ் பாயின்ட் பெற வேண்டுமென்றால், 240 ரன்கள் இலக்கை கேப் கோப்ராஸ் அணி 40 ஓவர்களில் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. 

37-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் எடி லீ வீசினார். அந்த ஓவரை டுமினி சின்னாபின்னமாக்கினார். முதல் நான்கு பந்துகள் சிக்சருக்குப் பறந்தன. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து நோபாலாக வந்தது. அதை, பவுண்டரிக்கு விளாசினார் டுமினி. நோபாலுக்கு மாற்றாக வீசப்பட்ட இறுதிப் பந்தை டுமினி சிக்சருக்குத் தூக்க, ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை அவர் வசமானது. அத்துடன் அணியும் வெற்றிபெற்றது. டுமினி 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்துக் களத்திலிருந்தார்.

ரன்கள் குவித்தது பற்றிக் கூறிய டுமினி, ``இதுபோன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைத்துவிடாது. 6 பந்துகளிலும் சிக்சர் அடிக்கத்தான் முயன்றேன். போனஸ் பாயின்ட் பெற வேண்டுமென்ற எண்ணமும் மனதில் இருந்தது. ஆகவே, எடி லீயின் பந்துவீச்சை அடித்து ஆடுவது என முடிவுசெய்தேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!