நான்கு நாடுகள் ஹாக்கி! இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 

hockey

Photo Credit: Hockey India Twitter

நான்கு நாடுகள் ஹாக்கிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. ஆனால், அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதையடுத்து, இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எதுவென்பதை முடிவு செய்யும் இன்றைய வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு நுழைந்துவிடலாம் என்ற நிலையில் நியூசிலாந்து அணி இருந்தது. ஆனால், அந்த அணியின் கனவுக்கு இந்திய அணி வீரர்கள் முட்டுக்கட்டைப் போட்டனர். இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங், மந்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நியூசிலாந்து அணியால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. கனே ரஸல் அந்த கோலை அடித்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பெல்ஜியம் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-ம் இடம் வகிக்கும் பெல்ஜியம் அணியும் 6-ம் இடம் வகிக்கும் இந்திய அணியும் மோதுகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!