வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/01/2018)

கடைசி தொடர்பு:19:20 (20/01/2018)

பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Photo: Cricket Association for the Blind in India (CABI)

பாகிஸ்தான் மற்றும் சார்ஜாவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. சார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இதையடுத்து 309 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, சுனில் ரமேஷ் (93 ரன்கள்), கேப்டன் அஜய் ரெட்டி (63 ரன்கள்) வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். பாகிஸ்தான் நிர்ணயித்த 309 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது. இதன்மூலம் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பையை வென்றது.

முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அதேபோல், லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த இந்திய அணி, உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வியைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.