வெளியிடப்பட்ட நேரம்: 19:21 (23/01/2018)

கடைசி தொடர்பு:19:21 (23/01/2018)

47-0ல் இருந்து 96-க்கு ஆல்அவுட்: 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய ஆஸி. ஸ்பின்னர்! - வீடியோ

ஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 

Photo: Twitter/ICC

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாகக் கேப்டன் ஜேசன் சங்கா 58 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பாம்பர், பென்னிங்டன் மற்றும் ஜேக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று அரையிறுதிக்கு எளிதாகத் தகுதி பெற்றுவிடும் என்றே ரசிகர்கள் கருதினர். அதுவும், விக்கெட் இழப்பின்றி அந்த அணி 47 ரன்கள் குவித்தபோது அந்த நம்பிக்கை அதிகரித்தது.

இந்தச் சூழலில் 8 வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் லாய்ட் போப் வீச வந்தார். அந்த ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி விக்கெட் வேட்டையைத் தொடங்கிய போப், இங்கிலாந்து அணியை 96 ரன்களுக்குச் சுருட்டியதில் முக்கிய பங்கு வகித்தார். 9.4 ஓவர்கள் வீசிய போப் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரில் வீரர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு இதுதான்.