``தோனி கடவுள்; ஜோஸ் பட்லர் மனிதர்!’’ - இங்கிலாந்து முன்னாள் கேப்டனை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியை, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருடன் ஒப்பிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நெட்டிசன்களால் கடும் விமர்சனத்துக்குள்ளானார். 

மகேந்திரசிங் தோனி தலைமையில் இந்திய அணி 2 உலகக் கோப்பைகள், சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் முதலிடம் எனப் புதிய உச்சம் தொட்டது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, கேப்டன் பொறுப்பையும் ராஜினாமா செய்துவிட்டார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 36 வயதிலும் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாகப் பிட்னெஸுடன் திகழ்ந்து வருவதாக விளையாட்டுலகைச் சேர்ந்த பலரும் தோனியைப் புகழ்ந்து வருகின்றனர். 

இந்தநிலையில், தோனியை ஜோஸ் பட்லருடன் ஒப்பிட்டு ட்விட்டரில் வாக்கெடுப்பு ஒன்றை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நடத்தியிருந்தார். ``கீழ்க்கண்டவர்களின் சமீபத்திய ஃபார்மின் அடிப்படையில் யாரேனும் ஒருவரை உங்கள் அணியில் தேர்வு செய்வதாக இருந்தால், யாரைத் தேர்வு செய்வீர்கள்’’ என்ற கேள்வியோடு, நெட்டிசன்களுக்குத் தோனி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரின் பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் வென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 83 பந்துகளைச் சந்தித்த ஜோஸ் பட்லர், 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதையடுத்தே, மைக்கேல் வாகன் இதுபோன்றதொரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தார். 

ஆனால், தோனியுடன் ஜோஸ் பட்லரை ஒப்பிட்ட மைக்கேல் வாகனின் ரசனையை இந்திய ரசிகர்கள் ரசிக்கவில்லை. அவருக்குக் காட்டமான பதிலையே நெட்டிசன்கள் பலரும் அளித்திருந்தனர். அதிலும் சந்தர்தீப் சிங் என்ற ட்விட்டர் பயனாளி, ``தோனி கடவுள். ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்தான்; ஆனால், அவர் மனிதர் மட்டுமே. தோனியின் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யவும், சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்களை, ஏறக்குறைய 50 என்கிற பேட்டிங் ஆவரேஜுடன் குவிக்க, ஜோஸ் பட்லர் 7 பிறவிகள் எடுக்க வேண்டும்’’ என்று பதிலளித்திருந்தார். அதேபோல், தோனி மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சமீபத்திய செயல்பாடுகளை ஒப்பிட்டும் மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலளித்திருந்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!