வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (25/01/2018)

கடைசி தொடர்பு:12:22 (25/01/2018)

அந்த கேட்ச்சில் டி வில்லியர்ஸ் செய்த மேஜிக்... இந்தியா சுருண்டது எப்படி? #SAvsIND

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் (#SAvsIND) தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங் அசத்தலாக இருந்தது. விராட் கோலியே அதை ஒப்புக்கொண்டார். ஆனால், ஜோகன்னஸ்பர்க்கில்...? ரபாடா வீசிய பெளன்ஸரை pull shot ஆட முயன்றார் கோலி. தவறான ஷாட் செலக்ஷன். பந்து மிட் விக்கெட் நோக்கி உருண்டு செல்வதற்குப் பதிலாக எட்ஜாகி மிட் ஆஃப் பக்கம் சென்றது. அதை அலட்டாமல் கேட்ச் பிடித்து, பந்தைத் தூக்கிப் போட்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், பிலாண்டர் தேவையில்லாமல் கீழே விழுந்து, புரண்டு கேட்ச்சையும் கோட்டைவிட்டார். அந்தக் கேட்சைப் பிடித்திருந்தால் கோலி 11 ரன்களில் அவுட். இந்தியாவின் ஸ்கோர் 27/3 என்றிருந்திருக்கும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெளலர் ரபாடா, நடு பிட்ச்சில் உட்கார்ந்து இரு கைகளையும் முகத்தில் வைத்து அழாத குறையாக விரக்தியடைந்தார். (அதுசரி, பந்து எப்படி வந்தாலும் கேட்ச் பிடிக்க பிலாண்டர் என்ன டி வில்லியர்ஸா?!) 

SAvsIND

அடுத்த சில நிமிடங்களில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சிரித்தது. டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த பார்த்தீவ் படேல் சிரிக்கிறார்; ரஹானே உதட்டைப் பிரிக்காமல் சிரிக்கிறார்; ஷிகர் தவன் ஒரு படி மேலேபோய் தொடை மீது கைதட்டி சிரிக்கிறார். கடைசியில் களத்தில் இருந்த புஜாராவும் சிரித்தார். அப்படியென்ன நடந்தது? அதுவரை அசராமல் பந்தைத் தின்றுகொண்டிருந்த புஜாரா, எங்கிடியின் பந்தில் ஸ்கொயர் லெக் பக்கம் ஒரு சிங்கிள் தட்டி முதல் ரன்னை எடுத்தார். அதாவது 54-வது பந்தில் முதல் ரன். முழுமையாக 9 ஓவர்கள் கடந்துவிட்டன. அதற்குத்தான் அந்தச் சிரிப்பு. முதல் ரன்னுக்கு 54 பந்துகள் எனில், முதல் பவுண்டரி அடிக்க அவர் ஒரு செஷனே காத்திருக்க வேண்டியிருந்தது. ஆம், பிலாண்டர் பந்தில் புஜாரா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தபோது இரண்டாவது செஷன் தொடங்கி ரொம்ப நேரமாகியிருந்தது.

அரைகுறையான வாய்ப்புகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதே ஜாம்பவான்களின் தனித்துவம். டி வில்லியர்ஸ் ஜாம்பவான். டி வில்லியர்ஸ் நின்ற அந்த மூன்றாவது ஸ்லிப்பில் வேறு யாராவது இருந்திருந்தால் விராட் கோலியின் அந்த கேட்ச்சைப் பிடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. வழக்கமாக மூன்றாவது ஸ்லிப் ஃபீல்டர் நிற்கும் இடத்தைவிட இரண்டு ஸ்டெப் முன்னேறி நின்றிருந்தார் டி வில்லியர்ஸ். அல்லஅல்ல கோலி டிரைவ்களுக்கு அடி போடுவதைப் பார்த்து டி வில்லியர்ஸை அங்கு நிற்கு வைத்தார் கேப்டன் டு பிளெஸ்ஸி. ஸ்மார்ட் மூவ். நிற்கவைத்தது மேட்டர் இல்லை. டி வில்லியர்ஸ் அந்த கேட்சைப் பிடித்ததுதான் ஹைலைட். 

எங்கிடி வீசிய பந்து ஃபுல் லென்த்தில் டிரைவ் செய்வதற்கு ஏதுவாகத்தான் வந்தது. கோலியும் டிரைவ் செய்ய முயன்றார். ஆனால், எட்ஜ் வாங்கிய பந்து அதே வேகத்தில் மூன்றாவது ஸ்லிப் நோக்கி விருட்டென பாய்ந்தது. டி வில்லியர்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. பந்து மார்புக்கு மேலே வந்தால் ரிவர்ஸ் கேப் போட்டுப் பிடிக்கலாம். மார்புக்கு கீழே எனில் இயல்பாக பிடிக்கலாம். பக்கவாட்டில் சென்றால் டைவ் அடிக்கலாம். டைவ் அடிக்கத் தேவையில்லாத பட்சத்தில் ஒற்றைக்கையிலும் பிடிக்கலாம். தலைக்கு மேலே என்றால் எவ்விக் குதித்துப் பிடிக்கலாம். கண்ணுக்கு முன் பந்து சில அடி தூரத்தில் விழுகிறது என்றால் முன்னோக்கிப் பாய்ந்துப் பிடிக்கலாம். பந்தை மட்டுமே பார்த்து பின்னோக்கி ஓடிச் சென்றும் பிடிக்கலாம். 

SAvsIND

ஆனால், இந்தப் பந்து வித்தியாசமான முறையில் வருகிறது. மேற்சொன்ன எந்த வகையிலும் சேராமல் ஒரு தினுசாக வருகிறது. ஸ்லிப்பில் பந்து இப்படித்தான் வரும் என்றாலும், இயல்பான இடத்தில் இல்லாமல் கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து நிற்பவரால் இதை பிடிக்க முடியுமா? டி வில்லியர்ஸ் பிடித்தார். அவர் அட்டகாசமான ஃபீல்டர். இந்த டெஸ்ட் தொடரிலேயே பலமுறை அதை நிரூபித்துவிட்டார். ஸ்லிப், கல்லி, மிட் ஆஃப், டீப் மிட் விக்கெட் என களத்தில் எங்கு நிறுத்தினாலும் டைவ் அடிப்பார். விட்டால் தார் ரோட்டிலும் டைவ் அடிப்பார். இளம் வயதிலேயே உடல் ரீதியான விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தவர் அவர். அவரால்தான் இப்படிப்பட்ட கேட்ச்களைப் பிடிக்க முடியும். அவரால் மட்டுமே முடியும்.

SAvsIND

பந்து டி வில்லியர்ஸை நோக்கி வருகிறது. அல்ரெடி அவர் குதிக்கத் தொடங்கிவிட்டார். குதிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பந்து கொஞ்சம் உயரமாக வருகிறதே என்ன செய்ய? யோசிக்க நேரமும் இல்லை. ஸ்லிப்பில் இருந்துகொண்டு எங்கு யோசிக்க? டி வில்லியர்ஸ் யோசிக்கவில்லை. தரையில் இருந்து இரண்டடிக்கு மேலே மிதந்தபடியே, அந்தப் பந்தைப் பிடித்தார். எல்லோரும் பந்து செல்லும் பாதையை நோக்கி கைகளைக் கொண்டுசென்றுதான் கேட்ச் பிடிப்பார்கள். ஆனால், டி வில்லியர்ஸ் பந்தின் திசையில் உடம்பைக் கொண்டுசென்று அந்தக் கேட்சைப் பிடித்தார். இங்கு கேட்ச் பிடித்ததுகூட விஷயமில்லை. பிடித்தபின் அவர் கீழே விழுந்த விதம்தான் அதிர்ச்சியாக இருந்தது. பந்தைப் பிடித்த வேகத்தில் முதுகும், பின்புறமும் நங்கென்று தரையில் விழுந்தது. பார்த்த நமக்கே பயமாக இருந்தது. மொத்தத்தில் அது அட்டகாசமான கேட்ச். இதைப் பார்த்து விராட் மலைத்து நின்றார். டு பிளெஸ்ஸி திகைத்து நின்றார். ரசிகர்களுக்கு ஆச்சர்யம். ஏன்... டி வில்லியர்ஸுக்கே ஆச்சர்யம்தான். அந்த செஷன் முடிந்ததும் ஹர்ஷா போக்லே, ஜான்ட்டி ரோட்ஸ் இருவரும் இந்த கேட்ச்சைப் பற்றித்தான் ரொம்ப நேரம் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். 

SAvsIND

கோலி 11 ரன்கள் எடுத்திருந்தபோது அல்வா கேட்ச்சை மிஸ் செய்த பிலாண்டர், இந்தக் கேட்ச்சைப் பார்த்து குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகி இருக்கக் கூடும். பிலாண்டர் மட்டுமல்ல,  ‘இப்படியெல்லாமா ஒரு மனுஷன் கேட்ச் பிடிப்பான்...’ என, விராட் கோலியே ஒரு கணம், மிரண்டிருக்கக் கூடும். இப்படியெல்லாம்தான் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க வேண்டும். டி வில்லியர்ஸிடம் இருந்து கோலி கற்க வேண்டிய முக்கிய பாடம் இது. கோலி மட்டுமல்ல இந்திய அணியில் ஸ்லிப் கார்டனில் நிற்கும் எவராக இருந்தாலும் அவசியம் பார்க்க வேண்டிய கேட்ச் இது. ஏனெனில், சமீப காலங்களில் இந்திய அணி ஸ்லிப்பில் கோட்டை விட்ட கேட்ச்கள் ஏராளம். 

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் இந்தியா நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டருடன் களமிறங்கியது. இந்தியா இப்படி களமிறங்குவது அரிது.  தென்னாப்பிரிக்கா தரப்பிலும் அதேநிலைதான்.  ஆம், இரு அணிகளும் ஸ்பின்னர்களை பெஞ்சில் உட்காரவைத்தது. ஒருவழியாக ரோஹித்துக்குப் பதிலாக ரஹானே பிளேயிங் லெவனில் இடம்பிடித்தார். அணியில் மட்டுமே இடம்பிடித்தார். ரசிகர்களின் மனதில் இல்லை. அவருக்கு  அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப். குட் லென்த் என பக்கவாக பந்து வீசினார் பிலாண்டர். நினைத்தது போலவே எட்ஜ். காட் பிகைண்ட். ரகானே அவுட். அவ்வளவுதானா? இதுக்குத்தானா இந்தப்பாடு... பிலாண்டர் வென்றுவிட்டாரா; ரஹானே தோற்றுவிட்டாரா. இல்லை, இல்லை. பிலாண்டர் ஓவர்ஸ்டெப் போல தெரிகிறது. அம்பயர் செக் செய்கிறார். கிரிஸுக்கும், பிலாண்டரின் பின்னங்காலுக்கும் இடையே சென்ட்டிமீட்டர் இடைவெளி இருக்கிறது. ஆம், இது நோ பால். நாட் அவுட். ரஹானே ஆடலாம். அரைசதம் அடித்தால்கூட போதும். விராட் கோலியின் முகத்தில் கரியைப் பூசலாம். ஆனால், அதற்கும் வழியில்லை. மோர்கல் பந்தில் ரஹானே அவுட். எல்பிடபுள்யு. ரிவ்யூ கோரியும் பலிக்கவில்லை. ரஹானே முகத்தில் ஈயாடவில்லை.

முதல் ரன்னை எடுக்க 54 பந்துகள் காத்திருந்த புஜாரா, முதல் பவுண்டரி அடிக்க ஒரு செஷன் முழுவதுமே காத்திருந்த புஜாரா, 178 பந்துகளை பொறுமையாக எதிர்கொண்ட புஜாரா, 179-வது பந்தைச் சந்திக்கும்போது  தடுமாறினார். அந்தத் தடுமாற்றம்தான் எதிரணியின் பலம். பெலுக்வயா அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தைத் தொடலாமா வேண்டாமா என யோசித்து பேட்டை நீட்டியும் மடக்கியும் போக்கு காட்டிக்கொண்டிருக்கும்போதே, பந்து பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரின் கைகளில் சென்றுவிட்டது. புஜாராவும் அவுட். அரைசதம் அடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே அவுட். ஆபத்பாந்தவனே நடையைக் கட்டினார். அப்புறம் என்ன... டெயிலெண்டர்களை எப்படி டீல் செய்ய வேண்டுமோ அப்படி டீல் செய்தனர் தென்னாப்பிரிக்க பெளலர்கள். இந்தியா முதல் இன்னிங்ஸில் 187 ரன்களில் ஆல் அவுட். விராட், புஜாரா தவிர்த்து மீண்டும் ஒருமுறை பேட்ஸ்மேன்கள் ஏமாற்றிவிட்டனர். இனி முடிவு பெளலர்கள் கையில்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்