வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/01/2018)

கடைசி தொடர்பு:20:00 (25/01/2018)

``நன்றி தோனி!’’ - நெகிழ்ந்த ஜான்டி ரோட்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்குத் தன் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். 


தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. அதன் பின்னர் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் இந்திய அணி விளையாட இருக்கிறது. டெஸ்ட் தொடர் முடிவடையயிருக்கும் நிலையில், ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய வீரர்கள் துபாய் வழியாகத் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்குச் சென்றனர். 

இந்தநிலையில், மும்பையிliருந்து தென்னாப்பிரிக்காவுக்குத் தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பயணித்த விமானத்தில், தன் குடும்பத்தினரைத் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து தோனி மற்றும் தன் குழந்தைகள் இருப்பது போன்ற புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜான்டி ரோட்ஸ், ``இரண்டு மாதங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்ட பின்னர், அவர்கள் தனியாகப் பயணம் மேற்கொள்வது கடினமான விஷயம்தான். ஆனால், அவர்களைப் பத்திரமாக தோனியிடம் ஒப்படைத்துவிட்டதால், அவர்கள் தனியாகப் பயணிப்பது குறித்து நான் அச்சமடையத் தேவையில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், தன் குழந்தைகளான இந்தியா மற்றும் நாதன் ஜான் ஆகியோர் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் விளையாடுவது எப்படி என்பது குறித்து தோனிக்கு ஆலோசனைகள் வழங்கியதாகவும், அது தமக்குத் தெரியும் என்று தோனி பதிலளித்ததாகவும் அந்தப் பதிவில் ஜான்டி ரோட்ஸ் விளையாட்டாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், துபாயிலிருந்து ஜோகன்ஸ்பெர்க் செல்லும் விமானத்தில் தோனி மற்றும் அக்சர் படேலுடன் இருப்பது போன்ற புகைப்படத்தைச் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹாலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.