வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (26/01/2018)

கடைசி தொடர்பு:20:39 (26/01/2018)

இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்கள் குவிப்பு! தென்னாப்பிரிக்காவில் முதல் வெற்றிபெறுமா இந்தியா?

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Photo Credit: BCCI

ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல், புஜாரா ஆகியோர் விரைவில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தொடக்க வீரர் முரளி விஜயுடன் கைகோத்த கேப்டன் கோலி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4-வது விக்கெட்டுக்கு சிறிதுநேரம் தாக்குப்பிடித்த இந்த ஜோடி, 43 ரன்கள் சேர்த்த நிலையில், 25 ரன்கள் எடுத்திருந்த விஜய் ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலியும் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பாண்ட்யாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 

இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹானே - புவனேஷ்வர் குமார் இணை, தென்னாப்பிரிக்க பந்துவீச்சை மிகநேர்த்தியாக எதிர்க்கொண்டு விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தது. ரஹானே 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி அதிரடி காட்ட இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களைக் கடந்தது. 2 சிக்ஸர்கள் உள்பட 28 பந்துகளில் 27 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த புவனேஷ்வர் குமார் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய அணி 80.1 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற 241 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் பிலாண்டர், மோர்கல் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.