வியக்க வைக்கும் நியூசிலாந்து அண்டர் 19 அணியின் பயிற்சித் திட்டம்! மற்ற அணிகளுக்குப் பாடம்! #ICCU19WorldCup | New Zealand under-19 team's practise methods are examples for others

வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (27/01/2018)

கடைசி தொடர்பு:14:16 (31/01/2018)

வியக்க வைக்கும் நியூசிலாந்து அண்டர் 19 அணியின் பயிற்சித் திட்டம்! மற்ற அணிகளுக்குப் பாடம்! #ICCU19WorldCup

ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்து வெளியேறியிருக்கிறது நியூசிலாந்து அண்டர் 19 அணி. சொந்த ஊரில், அஸோசியேட் அணியிடம் 202 ரன் வித்தியாசத்தில் தோற்று உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது. சிலருக்கு இந்தத் தோல்வி ஆச்சர்யம். ஆனால், அவர்கள் இவ்வளவு தூரம் பயணித்ததுதான் ஆச்சர்யம். நியுசிலாந்தின் சீனியர் அணிக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போல, அவர்களுடைய 19 வயதிற்கு உட்பட்டோர் அணிக்காக அவர்களால் நிதியை ஒதுக்கமுடியவில்லை. ஆனால், அதையொரு காரணமாகச் சொல்லாமல் அண்டர் 19 அணி நிர்வாகம் உழைத்தது. நியூசிலாந்து கோச்சிங் யூனிட் செயல்படும் விதம் மொத்த உலகுக்கும் மிகப்பெரிய பாடம்! 

தற்போது  உலகக்கோப்பையைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நியுசிலாந்தின் 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. 2017 கிறிஸ்துமஸின்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு சிறிய தொடர். தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், கென்யா ஆகிய அணிகளோடு பயிற்சி போட்டிகளில் மட்டும் விளையாடியது. பலம் வாய்ந்த அணிகளோடு எந்தத் தொடரும் விளையாடவில்லை. 

ஆனால், 19 வயதிற்கு உட்பட்டோர் அணியின் தலைமை பயிற்சியாளர் பால் வைஸ்மனோடு இணைந்து, ஆறு பயிற்சிக்கழகங்களும், அதன் பயிற்சியாளர்களும் அவர்களுடைய வீரர்களின் திறமையைக் கண்டறிவதற்கு  நிறைய முயற்சிகளைக் கையாண்டனர். அவை கிரிக்கெட்டுக்கு அப்பாற்ப்பட்டது.

#ICCU19WorldCup

“எங்கள் முயற்சியானது வீரர்களின் திறமையைக் கண்டுணர்வதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆறு முக்கிய பயிற்சி மையங்களின் ஆறு பயிற்சியாளர்களும் என்னோடு அருமையான தொடர்பில் இருக்கின்றார்கள். கடந்த பதினெட்டு மாதங்களில், பதின்மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நாங்கள் பயிற்சி அளித்தோம். குளிர் காலத்தில் ஐந்து வாரங்கள் பயிற்சிப்பட்டறை அமைத்துக்கொடுத்தோம். அவர்களை நன்றாக அறிந்துகொள்வதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர்களுடைய ஆட்டத்தைமட்டும் கருத்தில்கொள்ளாமல், ஒரு முழுமையான வளர்ச்சியை நோக்கி அவர்களைச் செலுத்தவேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். நீங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள் என்றால், உங்களுக்கு வெகுமதியாக இருக்கும். அவ்வளவே. ஆனால் நாங்கள் நியூசிலாந்தின் தேசிய அணிக்காக மிகச் சிறந்த விளையாட்டுவீரர்களை உருவாக்க முயற்சித்து வருகின்றோம். ஆட்டத்தைமட்டும் கருத்தில்கொள்ளாமல், முழுமையான வளர்ச்சியை நோக்கி நாங்கள் பயணிக்கின்றோம்” என்கிறார் பயிற்சியாளர் வைஸ்மன். 

2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிக்கு முன்பாக, அணியின் வீரர்கள் அனைவரும் துபாய்க்குச் சென்று நான்கு பயிற்சி ஆட்டங்கள் விளையாடினார்கள். அதற்குப் பிறகே அவர்கள் அனைவரும் வங்காளதேசத்திற்குச் சென்றார்கள். ஆனால் இம்முறை, வீரர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட 18 மாதங்களில், ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கடுமையான பயிற்சி ஆட்டங்கள்’, சிறப்பு பயிற்சி முகாம்கள், அணியுடன் ஆடும் ஆட்டங்கள் என்று அவர்கள் தம்மை நன்றாகப் பட்டைதீட்டிக்கொண்டார்கள். 

“கடந்த முறை நாங்கள் சுழற்பந்துக்குச் சாதகமான ஆடுகளங்கலில் லேசாகத் திணறினோம். அதனால், இம்முறை சுழற்பந்து வீச்சிற்கு நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றோம். ஆயினும், இவ்வீரர்களுடைய நீண்ட கால மேம்பாட்டையே நாங்கள் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம் என்று கூறும் வைஸ்மன், “சர்வதேச போட்டிகளில் பாதிக்குப்பாதி சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்துவதால் அதைக் கற்றுக்கொள்வது அத்தியாவசியமாகின்றது” என்று வங்கதேசப் பயனத்தின்போது தெரிவித்தார்.

#ICCU19WorldCup

“அதைப்போலவே, அணியின் வீரர்கள் அனைவரையும் அறிந்துகொள்வதால், பயிற்சியின் நுணுக்கங்கள் பற்றி கற்றுக்கொடுப்பதற்கும், நிறைய நேரம் அவர்களோடு செலவிடவும் முடிகின்றது. விளையாட்டு என்றில்லாமல், கொஞ்சம் அறிவியல் ரீதியான உத்திகளையும் நாங்கள் தற்போது கையாளமுடிகின்றது” என்றார். 

வைஸ்மன் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று, இளம் வீரர்களை அவர்களின் எதிர்காலத்திற்கு ஏதுவான வழியில் செலுத்துவது. பெரும்பாலும் அவர்கள் எதிர்கொள்ளும் வீரர்கள், தங்களின் வாழ்க்கையில் இரண்டு விளையாட்டுகளுக்கு இடையிலோ, அல்லது கிரிக்கெட் மற்றும் படிப்பிற்கு இடையிலோ எதைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். 

“வீரர்கள் சமநிலையோடு இருப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கின்றோம். எடுத்துக்காட்டாக, அவர் பல்கலைக்கழகத்தில் பயில்பவராக இருந்தால், பயிற்சி முகாம்கள் விடுமுறை நாட்களில் இருப்பதுபோல பார்த்துக்கொள்வோம். அவர்கள் வளர்ச்சி அடைய அவை எல்லாம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு வீரர் ஆல்-ரவுண்டராக இருக்கின்றார் என்றால், நமக்கு இன்னும் சிறப்பான விளையாட்டு வீரர் கிடைத்திருக்கின்றார் என்றுதானே அர்த்தம்? அவர்கள் வேறு விளையாட்டுகளையும் முடிந்தவரை விளையாட நாங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துகின்றோம். ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும்வரை, எவ்வளவு விளையாட்டு வேண்டுமானாலும் விளையாடலாம் என்பதனை நாங்கள் எங்கள் கொள்கையாகவே பின்பற்றுகின்றோம். சிற்சில இழப்புகள் இருந்தாலும், முடிவில் சிறப்பான விளையாட்டு வீரர்கள் கிடைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர். 

கிரிக்கெட்டா ரக்பியா என்று முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜோர்டி பாரேட்டை நினைவுகூருகின்றார் அவர். எதிர்பாராத விதத்தில் அவருக்குக் காயம் ஏற்பட்டதால், அவரால் வங்காளதேசப் போட்டியில் பங்கேற்க இயலவில்லை. ஆனால் இன்று, அவர் நியுசிலாந்து கால்பந்து அணியின் முக்கியமான கால்பந்தாட்ட வீரராக இருக்கின்றார். 

“இறுதியில், இவர்களுடைய மனம் எங்கு செல்ல விரும்புகின்றதோ, எங்கு இவர்களுடைய எதிர்காலம் பிரகாசமாக இருக்கின்றதோ, அவர்களின் மனதிற்கு நெருக்கமாக எந்த விளையாட்டு இருக்கின்றதோ, அதையே நாங்கள் ஊக்கப்படுத்துகின்றோம். கிரிக்கெட் எங்களுக்கு முக்கியமான விளையாட்டாக இருந்தாலும், அவர்கள் வேறு சில முடிவுகள் எடுத்தாலும் நாங்கள் அதனை ஆதரிக்கவே செய்வோம்” என்கிறார் அவர். 

#ICCU19WorldCup

வீரர்கள் அவர்களுக்குத் தேவையான முடிவுகளை எடுப்பதற்கு சற்று நேரம் எடுப்பதால், அணியில் சில வீரர்கள் அதிக அளவில் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார்கள். 2016 ஆம் ஆண்டின் ரசின் ரவீந்திரா, பெலிக்ஸ் முர்ரே, டேல் பிலிப்ஸ், பின் ஆலன் ஆகியோர் தற்போதைய அணியிலும் உள்ளார்கள். 

ரவீந்திரா மூன்று லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகள், தொடக்கத்தில் அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது என்று கூறலாம். கென்யாவிற்கு எதிராக ஒரு சதம், இறுதியாக தென்னாப்பிரிக்காவோடு விளையாடியபோது, 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அரைசதம் மற்றும் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் நியுசிலாந்து வீரர் என்ற பெருமையையும்பெற்றார். அலென் ஒரு சதம் மற்றும் அரைசதம் அடித்துள்ள நிலையில், பிலிப்ஸ் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். 

வாய்ப்புகளுக்கும், அதனை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளுக்கும் இடையில் உள்ள சமநிலைகுறித்துக் கூறும்போது, “வீரருக்கு என்ன வேண்டுமோ அதையே நாங்கள் செய்கின்றோம்” என்றார் வைஸ்மன். “இப்போது எங்கள் பயிற்சிமுகாமில் இரண்டு இளம் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். நிச்சயமாக அவர்கள் அடுத்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள். தற்போது இருக்கும் வீரர்களோடு அவர்கள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இப்படித்தான் நாங்கள் பயிற்சியை அமைக்கின்றோம். இரண்டு முறை விளையாடிய நான்கு வீரர்கள் அணியில் இருப்பது மிகவும் அரிது. ஒருவர் இருக்கலாம், ஆனால் சொந்தமண்ணிலும், துணைக்கண்டத்திலும் விளையாடிய வீரர்கள் இருப்பது மிகச்சிறப்பான விஷயமாகவே கருதுகின்றோம். சீனியர் உலகக்கோப்பையிலும் இவர்கள் நிச்சயமாக விளையாடுவார்கள். ஆதலால், இவர்களுக்கு இப்போது கிடைக்கும் அனுபவமும் மிகமுக்கியமானதாகவே இருக்கின்றது” 

“உலககோப்பை போட்டிகள் மிகச்சிறப்பானவைதான். ஆனால் ஒட்டுமொத்த விளையாட்டு வாழ்க்கையையும் தீர்மானிக்கும் ஒன்றாக அது இருக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணித்து அவர்களை மெருகேற்றிக்கொள்ளட்டும். ஒரு சிலருக்கு இவ்வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், இதுவே முழுமையாக அனைத்தையும் தீர்மானிக்கப்போவதில்லை. ஆதலால், கற்றுக்கொள்வதற்கும், மேம்படுத்திக்கொள்வதற்கும் ஒரு சமதளத்தை அமைத்துக்கொடுக்கின்றோம். உலகக்கோப்பையில் முதலாவதாக வருகின்றோமோ இல்லை பன்னிரண்டாவது இடத்தில் இருக்கின்றோமோ, நியூசிலாந்திற்கு மிகச் சிறந்த வீரர்களை அளிக்க வேண்டும், அவ்வளவே!” என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் அவர்!

Source : cricinfo


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close