இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்குமா? - ஐ.சி.சி ட்வீட்

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா. ஆனால், பிட்ச் கண்டிஷன் மோசமடையவே, மூன்றாவது நாள் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று போட்டி நடக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், ஐ.சி.சி அது குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ICC

ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதே நேரத்தில், கோலி, ரஹானே, புவ்னேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் மதிக்கத்தக்க ரன்கள் குவிக்கவே, இந்திய அணி, 247 ரன்களை எட்டியது. இந்திய தரப்பில் ரஹானே அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 10 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே முதல் விக்கெட்டை இழந்தது. மேலும், பிட்ச்சின் மோசமான கண்டிஷன் காரணமாக, யூகிக்க முடியாத அளவில் பந்து பௌன்ஸானது. இதனால், நிறைய பந்துகள் பேட்ஸ்மேன்களின் உடம்பைப் பதம்பார்த்தது. குறிப்பாக, பும்ரா வீசிய பந்து எல்காரின் ஹெல்மெட்டைத் தாக்க, ஆட்ட நடுவர்கள் மற்றும் ரெஃப்ரி ஆகியோர் பிட்ச்சை ஆய்வு செய்தனர். இதையடுத்து, மூன்றாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று ஆட்டம் நடக்குமா என்ற கேள்விக்கு ஐ.சி.சி பதில் அளித்துள்ளது. 

இது குறித்து ஐ.சி.சி பதிவிட்டுள்ள ட்வீட்டில், `ஆட்ட நடுவர்கள், போட்டியின் ரெஃப்ரி, இரு அணி கேப்டன்கள், க்ரௌண்ட்ஸ்மேன் ஆகியோருடன் உரையாடிய பிறகு, ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிட்ச்சின் கண்டிஷன் குறித்து நடுவர்கள் தொடர்ந்து கவனித்து வருவர். பிட்ச் மேலும் மோசமடைந்தால் அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!