மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி உறுதி: ரெய்னா கணிப்பு

இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று ஜோகன்ஸ்பர்க்கில் நடக்க உள்ளது. பிட்ச் கண்டிஷன் மோசமானதால், நேற்று பாதியிலேயே போட்டி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஐ.சி.சி, தொடர்ந்து போட்டியை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இன்று கண்டிப்பாக மேட்ச் ரிசல்ட் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் இருக்கும் இந்திய அணி, இந்தப் போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். 

சுரேஷ் ரெய்னா

ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்திருந்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களை எட்டியது. இந்திய தரப்பில் ரஹானே அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, 10 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே முதல் விக்கெட்டை இழந்தது. மேலும், பிட்ச்சின் மோசமான கண்டிஷன் காரணமாக, யூகிக்க முடியாத அளவில் பந்து பௌன்ஸானது. இதனால், நிறைய பந்துகள் பேட்ஸ்மேன்களின் உடம்பைப் பதம்பார்த்தது. குறிப்பாக, பும்ரா வீசிய பந்து எல்காரின் ஹெல்மெட்டைத் தாக்க, ஆட்ட நடுவர்கள் மற்றும் ரெஃப்ரி ஆகியோர் பிட்ச்சை ஆய்வு செய்தனர். இதையடுத்து, மூன்றாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆட்டம் தொடர்ந்து நடக்குமா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஐ.சி.சி, `நடுவர்களின் கவனமான மேற்பார்வையில் ஆட்டம் தொடர்ந்து நடக்கும்' என்று தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ரெய்னா, `நாம் இன்றோ அல்லது நாளையோ கண்டிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்றுவிடுவோம். ஏனென்றால், பிட்ச்சில் விளையாடுவது மிகக் கடினம்' என்று கணித்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!