``வீறுகொண்டு எழுந்த வேகங்கள்’’ - தென்னாப்பிரிக்காவில் இந்திய அணிக்கு முதல் வெற்றி!

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Photo Credit: Twitter/ICC

ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணிக்கு டீன் எல்கர் - ஹஷிம் அம்லா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்திய பந்துவீச்சைத் திறம்பட சமாளித்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. அம்லா, 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அம்லா வெளியேறியவுடன் தென்னாப்பிரிக்க அணியின் சரிவு தொடங்கியது. ஒரு முனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடினாலும், அவருக்கு சரியான ஒத்துழைப்பை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் கொடுக்கவில்லை. டிவிலியர்ஸ் 6 ரன்களிலும் கேப்டன் டுபிளசி 2 ரன்களிலும், விக்கெட் கீப்பர் டி காக் ரன் கணக்கைத் தொடங்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிலாண்டர் 10 ரன்களிலும், பெலுக்வாயோ, ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-2 என்ற கணக்கில் முடித்துக்கொண்டது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  தென்னாப்பிரிக்க அணி தரப்பில் டீன் எல்கர் 84 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். ஹசீம் அம்லா 52 ரன்கள் எடுத்தார். முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா தொடரை வென்றிருந்தது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!