`தொடர் முழுவதும் கலக்கிய பௌலர்கள்!' - தென்னாப்பிரிக்கா சீரிஸ் குறித்து நெகிழும் கோலி | The bowlers were outstanding, Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (28/01/2018)

கடைசி தொடர்பு:17:36 (28/01/2018)

`தொடர் முழுவதும் கலக்கிய பௌலர்கள்!' - தென்னாப்பிரிக்கா சீரிஸ் குறித்து நெகிழும் கோலி

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, மேட்ச் குறித்து தனது கருத்துகளை கூறினார். 

ஜோகன்ஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களும் தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்கா 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. இந்தநிலையில், நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணிக்கு டீன் எல்கர் - ஹஷிம் அம்லா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இந்திய பந்துவீச்சைத் திறம்பட சமாளித்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. அம்லா, 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அம்லா வெளியேறியவுடன் தென்னாப்பிரிக்க அணியின் சரிவு தொடங்கியது. ஒரு முனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடினாலும், அவருக்கு சரியான ஒத்துழைப்பை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் கொடுக்கவில்லை. ஆகையால், இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 73.3 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை 1-2 என்ற கணக்கில் முடித்துக்கொண்டது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி, பௌலர்களுக்கு புகழாரம் சூட்டினார். 

கோலி, `தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதால் இந்த தொடரே கடினமாகத்தான் இருந்தது. குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டி. காரணம், நாங்கள் தொடரில் கண்டிப்பாக 3-0 என்ற கணக்கில் ஒயிட்-வாஷ் ஆகிவிடுவோம் என்று பலர் ஆருடம் கூறினர். ஆனால், எங்களின் மிகச் சிறந்த பேட்டிங் மூலம் இந்தப் போட்டி எங்கள் வசமானது. பௌலர்களும் சிறப்பாக பந்து வீசினர். இந்தத் தொடர் முழுவதுமே எங்களது பௌலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று போட்டிகளில் 60 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதுபோன்று முன் எப்போதும் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. அதுதான் இந்தத் தொடரின் மிகப் பெரிய பாசிடிவான விஷயம் என்று நினைக்கிறேன். முன்றாவது டெஸ்ட்டை வெல்வதற்கு அணியினர் விளையாடிய விதம் உண்மையில் ஒரு கேப்டனாக என்னை பெருமை கொள்ளச் செய்கிறது' என்று நெகிழ்ந்தார்.