வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (29/01/2018)

கடைசி தொடர்பு:21:39 (29/01/2018)

சி.கே.நாயுடு முதல் தோனி வரை... பத்மபூஷண் வென்ற 10 இந்திய கிரிக்கெட்டர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியில் மிக நீண்ட காலமாக கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக இருந்த தோனிக்கு மத்திய அரசால் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் விருது இந்தியாவின் 3 வது மிக உயர்ந்த குடிமகன் விருது. இதற்கு முன்பு இந்தியாவின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், நான்காவது உயர்ந்த குடிமகன் கௌரவ விருதான பத்மஸ்ரீ விருதும் தோனி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை வென்ற தோனிக்கு இந்த விருது அவரது மகுடத்தில் சூடப்பட்ட மற்றொரு வைரக்கல். இந்த வருடம் தோனி காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். திரும்ப சிஸ்கே அணிக்காக விளையாட போகிறார். அவர் கேப்டன் பதவியைத் துறந்தாலும் கேப்டன் பதவி அவரை நோக்கி வந்து கொண்டுதான் இருக்கிறது இந்த முறை சிஸ்கே வடிவில். பிறகு பத்ம பூஷன் விருது என வருட ஆரம்பமே தோனிக்கு அமர்க்களமாய் இருக்கிறது. 

தோனிதோனி பத்ம பூஷன் விருது பெரும் பத்தாவது கிரிக்கெட் வீரர். மற்ற 9 வீரர்கள் யார்…?

1956 - சி.கே. நாயுடு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதல் கேப்டன், கோட்டரி கனகையா நாயுடு. 1956 இல் இவர் இந்த விருதை பெற்றார். அக்காலத்தில இது இரண்டாவது உயரிய விருதாக போற்றப்பட்டது. 62 வயது வரை ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றவர். இவர் பெயரில் இன்றும் கூட உள்ளூர் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.

1958 – விஜய் ஆனந்தா:
விஜயநகரத்தின் மஹாராஜா என்றழைக்கப்பட்ட விஜய் ஆனந்தாதான் பத்ம பூஷன் விருது பெற்ற இரண்டாவது கிரிக்கெட் வீரர் ஆவார். 1958 ஆம் ஆண்டு விளையாட்டிற்கு பங்களித்த சேவைக்காக இவ்விருது வழங்க பட்டது. இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1973 – வினூ மண்கட்:
1973-ல் தலை சிறந்த ஆல் ரௌண்டரான வினூ மண்கட் இவ்விருதைப் பெற்றார். 1968 முதல் 1979 வரை இவ்விருதை பெற்ற ஒரே விளையாட்டு வீரர் இவர்தான். கிரிக்கெட்டில் பரவலாக பேசப்படும் மண்கெடிங் இவர் பெயரின் வழி வந்தது. 1947-ல் இவர் ஆஸ்திரேலியா வீரர் பில்லி பிரௌனை மண்கெடிங் முறையில் அவுட் ஆக்கினார்.

1980 - சுனில் காவாஸ்கர்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் சுனில் கவாஸ்கர், 1980 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் 34 சதம் அடித்துள்ளார். 50-கும் மேல் சராசரி கொண்டிருந்தவர். தலைசிறந்த டெஸ்ட் ஓப்பனராக இன்றும் கருதப்படுபவர்.

1991 - லாலா அமர்நாத், டி.பி. தியோதார் மற்றும் கபில்தேவ்:
1991 ல், இந்திய அரசாங்கம் லலா அமர்நாத், டி.பி. தியோதார் மற்றும் கபில்தேவை இந்திய கிரிக்கெட்டில் பங்களித்ததற்காக பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. அமர்நாத் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மையான வீரராக இருந்தார். கபில்தேவ் தலைமயில்  இந்தியா 1983 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பையை வென்றது மற்றும் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையை வெகு நாளாக தன் வசம் கொண்டிருந்தார். அதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. டி.பி. தியோதார் முதல் தர கிரிக்கெட்டில் சிறந்து விளங்கினார். அவரை நினைவு படுத்தும் வகையில்தான் தியோதர் கோப்பை போட்டிகள் நடத்தப்படுகிறது.

2002 - சந்து போர்டே:
பத்ம பூஷண் விருதைப் பெற்ற 8 வது கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் குலாப்ராவ் போர்டே ஆவார். 1958 மற்றும் 1970 க்கு இடையில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகித்தார். 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் இவ்விருது வழங்கி கௌரவிக்கபட்டார் .

2013 - ராகுல் டிராவிட்:
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களைக் கொண்ட இரு இந்திய வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். 2013 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இன்று பெரிய பதவிகள் அளித்த போதிலும் அதை வாங்க மறுத்து இந்தியா அண்டர் 19 வீர்கள் மற்றும் இந்தியா ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.  

 


டிரெண்டிங் @ விகடன்