சென்னையோடு மல்லுக்கட்டு, மும்பையோடு சிணுங்கல் சண்டை... அழகுப்புயல் ப்ரீத்தி ஜிந்தா... ஐ.பி.எல் ஏல சுவாரஸ்யங்கள்! #IPLAuction

​​ரிச்சர்ட் மேட்லியின் 'gavel' சத்தத்தோடு ஐ.பி.எல் தொடர் தொடங்கிவிட்டது. கோவாவுடன் தண்ணீருக்காகப் போராடிவரும் பெங்களூரு நகரை, கோடிகளில் நனைத்துள்ளது 2018-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலம்.  சர்வதேச அரங்கில் ஜொலித்த நட்சத்திரங்கள் பலர் விலைபோகாத நிலையில், உள்ளூர் வீரர்கள் பலரின் பேங்க் பேலன்ஸும் கோடிகளில் எகிறியுள்ளது.  சில அணிகள் மிகவும் பலமான squad-யை அமைத்துள்ளன. ஒருசில உரிமையாளர்கள் இளம் வீரர்களைக் கொண்டு அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சியுள்ளனர்.  2 நாள்கள் நடந்த இந்த ஏலம் வழக்கம் போல் ஆச்சர்யங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்தே இருந்தது. அந்த இரண்டு நாள்கள் நடந்த அதிரிபுதிரி நிகழ்வுகளின் தொகுப்பு....#IPLAuction

#IPLAuction

ப்ரீத்தி ஜிந்தா - ஏலத்தை மையம் கொண்ட புயல்!

இந்த இரண்டு நாள்களும் அனைவரையும் கவர்ந்தது ப்ரீத்தி ஜிந்தாவின் உற்சாகம்தான். முழுக்க முழுக்க ப்ரீத்தி 'ஜிந்தாபாத்' தான் ஏலத்தில். முதல் நாள் ஏலம் தொடங்கியதும் ஃபுல் ஃப்ளோவில் இருந்தார் ப்ரீத்தி. முதலில் ஏலம் விடப்பட்ட 8 மார்க்கி வீரர்களில், கெயில் தவிர்த்து மற்ற 7 பேருக்காகவும் மல்லுக்கட்டினார். ஒரு வீரரையும் விடவில்லை.  யுவ்ராஜ் சிங்கை வாங்கிய உற்சாகத்தில் அடுத்த வந்த 6 வீரர்களில் ஐவரை அவரே வாங்கிக் குவித்தார். அந்த மற்றொரு வீரர் unsold! முதல் நாள் ஏலத்தின் முதல் செஷன் முழுதும் அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. சில அணிகளின்  உரிமையாளர்கள் வீரர்களை வாங்கிய பிறகு சந்தோஷத்தில் கைகுலுக்கிக்கொண்டனர். சென்னை, கொல்கத்தா அணிகளுக்காக ஏலத்தில் ஈடுபட்டிருந்தவர்களோ 'statue' மோடிலேயே அமர்ந்திருந்தனர். ஏதோ ஐ.டி கம்பெனியின் க்ளயன்ட் மீட்டிங்கைப் போல் நடந்துகொண்டிருந்த ஏலத்தில், கொஞ்சம் கிரிக்கெட் ஃப்ளேவரைச் சேர்த்தது பஞ்சாப் அணிதான். வீருவின் சிரிப்பும், ப்ரீத்தியின் ரியாக்ஷன்களும்தான் இந்த ஏலத்துக்கான எனர்ஜி டானிக்.

ப்ரீத்தி ஜிந்தா

ஒரு வீரரை வாங்கியதும் உற்சாக ஹைஃபை...மிஸ் செய்துவிட்டால் தரும் அந்த சோக ரியாக்ஷன்...தான் வாங்கிய வீரரை, 'RTM பயன்படுத்தி எதிரணி வாங்குகிறதா' எனப் பார்க்கும்போது கண்கள் விரித்துக் காட்டிய பார்வை... RTM  மூலம் டேவிட் மில்லரை வாங்கிவிட்டு, விரல்களைத் துப்பாக்கிபோல் வைத்து நீதா அம்பானியைச் செல்லாமாகச் சுட்டது என வெரைட்டி ரியாக்ஷன்களால் ஏலத்தை கலர்ஃபுல்லாக வைத்திருந்தார் ஜிந்தா. வீரர்களுக்கான தொகை அதிகமாகப் போனபோது 'ஸ்லோ' மோஷனில் paddle-யைத் தூக்கியபோதெல்லாம் 'நடிகை' ப்ரீத்தி ஜிந்தா வெளிப்பட்டார். யுவ்ராஜ் சிங்கை மீண்டும் வாங்கியபிறகு ப்ரீத்தி கொடுத்த ரியாக்ஷன்.....இதுக்காகவாவது ஓவருக்கு 6 சிக்ஸர் பறக்க விடணும் யுவி! 

ப்ரீத்தியை அழவைத்த  RTM

ஒவ்வொரு அணிக்கும் இந்த ஏலத்தில் ஐந்து நபர்களுக்கான டிரம்ப் கார்டு இருந்தது. ரீட்டெய்ன் செய்த வீரர்களின் எண்ணிக்கையை கழித்துவிட்டு, ஒவ்வொரு அணிக்கும் Right To Match (RTM) கார்டுகள் வழங்கப்பட்டன. அதன் மூலம், முந்தைய ஆண்டு தன் டீமில் விளையாடிய வீரரை ,  எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ, அவர்களிடம் இருந்து அதே தொகைக்கு மீண்டும் பெற முடியும். 

இரண்டு நாள்கள் முழுவதையும் மகிழ்ச்சியாகவே கழித்திருந்தாலும், அவ்வப்போது ஜிந்தாவை அழவைத்தன  RTM கார்டுகள்.   அவரும் ஒவ்வொரு வீரராக வாங்கிக் குவித்துக்கொண்டே இருந்தார். ஆனால், ஒவ்வொருவரையும்  RTM மூலம் மற்ற அணிகள் மீட்டுக்கொண்டே இருக்க, நொந்துபோனார் ப்ரீத்தி. ஏலத்தில் முதலாவதாக வந்த ஷிகர் தவானை, ராஜஸ்தான், மும்பை அணிகளோடு போட்டி போட்டு 5.20 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.  RTM பயன்படுத்தி அவரை மீட்டது சன்ரைஸர்ஸ். அடுத்து 1.60 கோடிக்கு, ஆறாவது வீரராக ஏலத்துக்கு வந்த டுப்ளெஸ்ஸியை வாங்கினார். சி.எஸ்.கே  RTM பயன்படுத்தியது. அடுத்து ரஹானேவின் பெயர் திரையில். மும்பை இந்தியன்ஸுடன் போட்டி. 5 கோடிவரை ப்ரீத்தி செல்ல, பின்வாங்கியது அம்பானி குடும்பம். ஆனால், RTM எடுத்து ப்ரீத்தியை கதறவைத்தது ராயல்ஸ்   . பின்னர் டுவைன் பிராவோ, ரஷித் கான் என மீண்டும் இருமுறை அவர் வாங்கிய வீரர்களை சூப்பர் கிங்ஸ், சன்ரைஸர்ஸ் அணிகளிடம் இழந்தார். ஒருவேளை  RTM ஆப்ஷன் இல்லாமல் இருந்திருந்தால் ப்ரீத்தியின் அணி....!

IPLAuction

ஃப்ளெமிங் VS ப்ரீத்தி

என்னடா சும்மா ப்ரீத்தி ஜிந்தா புராணமா இருக்கே என்று கடுப்பாக வேண்டாம். இந்த ஏலம் உண்மையில் அப்படித்தான் இருந்தது. சென்னை அணியின் 8 ஆண்டுகால ஐ.பி.எல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் கூட இந்த அளவுக்கு 'டஃப்' கொடுத்திருக்காது. அந்த அளவுக்கு சென்னைக்கு டஃப் கொடுத்தார் ப்ரீத்தி ஜிந்தா. முதல் நாள் டுப்ளெஸ்ஸி, பிராவோ இருவரையும்,  RTM மூலம் சென்னை அணியிடம் இழந்தவர், இரண்டாம் நாள் சி.எஸ்.கே-வின் திட்டங்களுக்கு பெரும் தொல்லையாக விளங்கினார். வேகப்பந்துவீச்சாளர்களே இல்லாத நிலையில், 'யாராக இருந்தாலும் வாங்கிவிடுவது' என்ற மூடில் இருந்தார் ஃப்ளெமிங். 'என்னைத் தாண்டி வாங்கு பாப்போம் என்று சொல்லாமல் சொல்லி சவால் அளித்தார் ப்ரீத்தி. பரிந்தர் ஸ்ரன், ஆண்ட்ரே டை, ஜெய்தேவ் உனத்கட், தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர் என சென்னை வாங்க நினைத்தவர்களுக்கெல்லாம் அவரும் போட்டி போட்டார். அவர்களுள் சென்னை அணிக்கு மிஞ்சியது ஷர்துல் தாக்கூரும், தீபக் சஹாரும்தான். அனுபவ பௌலர் இல்லாத குறையை மோஹித் ஷர்மாவை வாங்கி சென்னை தீர்த்த வேலையில், RTM மூலம் பாதிக்கப்பட்டிருந்த ப்ரீத்தி, அதைக்கொண்டே சென்னையின் ஆசைக்கு ஆப்பு வைத்தார். முதல் நாளிலும் சும்மா இருந்தாரா...? பென் ஸ்டோக்ஸுக்கு ஆரம்பத்தில் சென்னை போட்டி போட்டபோது, இவர்தான் விடாமல் மல்லுக்கட்டினார். போதாக்குறைக்கு ரவிச்சந்திரன் அஷ்வினையும் நாடு கடத்திவிட்டார். இப்படி ஏலம் முழுவதுமே சூப்பர் கிங்ஸ்-கு தலைவலியாகவே விளங்கினார் ப்ரீத்தி!

மேட்லியை மெர்சலாக்கிய டேர்டெவில்ஸ்

11 ஆண்டுகளாக ஐ.பி.எல் ஏலத்தை நடத்திவரும் ரிச்சர்ட் மேட்லி ரொம்பவுமே 'புரொஃபஷனல்'. ஏலத்தின்போது, தன் கருத்துகளை தப்பித்தவறிக்கூட சொல்லிவிட மாட்டார். கெய்ல் ஏலம்போகாதபோது, "கெய்லை வாங்க ஆளில்லையா" என்று அதிர்ச்சியாக் கேள்விகளை முன்வைத்திட மாட்டார். ரெக்கார்ட் தொகைக்கு ஒரு வீரர் ஏலம் போனால், அந்த ஆச்சர்யத்தையும் வெளிக்காட்ட மாட்டார். "Ben Stokes sold for 12.5 crores  to Rajastan Royals " என 'ஷார்ட் அண்ட் ஸ்வீட்'டாக முடித்துக்கொள்வார். மிஞ்சிப் போனால், இளம் வீரர்கள் அதிக தொகைக்குப் போனால், '19 year old Rashid khan sold for 9 crores' என அவர்களின் வயதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வார். அப்படிப்பட்ட மேட்லி, இன்று ஓரிடத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார்.

ndeep Lamichhane

Uncapped ஸ்பின்னர்களுக்கான ஏலம் நடந்துகொண்டிருந்தது. சந்தீப் லாமிச்சான்...இந்தப் பெயரை கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் கூறினார் மேட்லி. அவர், நேபாள வீரர் என்பதைப் பார்த்ததும், அவருக்குக் கொஞ்சம் ஆச்சர்யம். கடந்த 10 ஆண்டுகளில் அந்நாட்டின் பெயரை, ஏலத்தின்போது அவர் படித்தது இல்லை. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர். அதில் அந்நாட்டு வீரர் ஒருவரின் பெயர். அதுவும் அவனது வயது 17! அதுதான் அவரை ரொம்பவும் உற்சாகப்படுத்தியது. 20 லட்சம்தான் அடிப்படை விலை. யாரும் அவரை வாங்கத் தயாராக இல்லை. டெல்லி முன்வந்தது. வாங்கியது.  gavel-யைக் கீழே தட்டி, அதை உறுதிப்படுத்திய மேட்லி, "Wow, you bought a Nepalese player....excellent" என்று டெல்லி அணியைப் பாராட்டினார். இருபதுக்கும் குறைவான நாடுகளே விளையாடும் இந்த விளையாட்டில், மிகச்சிறிய நாட்டுக்காரன் ஒருவனுக்கு, மிகப்பெரிய மேடையில் இடம் கொடுத்தவர்களுக்கு மேட்லி கொடுத்த அந்தப் பாராட்டு....கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் பாராட்டு!

அரங்கை குஷிப்படுத்திய சில தருணங்கள்...

ஜெய்தேவ் உனத்கட்-ன் பெயர் அறிவிக்கப்பட்டதும் அரங்கம் பரபரப்பானது. கடந்த ஆண்டு பூனே அணிக்காக அசத்திய உனத்கட்டை, தன்னோடு சென்னைக்கு அழைத்துவர விரும்பினார் ஃப்ளெமிங். வேகப்பந்துவீச்சாளர்களே யாரும் இல்லாததால், எவ்வளவு தொகை போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருந்தார். ஒன்றரைக் கோடி என அடிப்படை விலை அறிவிக்கப்பட்டதும் paddle-யை உயர்த்தினார். நொடிப்பொழுதும் யோசிக்காமல் கோதாவில் குதித்தார் ப்ரீத்தி. இருவரும் புயல் வேகத்தில் உனத்கட்டின் மதிப்பைக் உயர்த்தினர். 160, 170 லட்சம் என உயர்ந்த அவரது தொகை அடுத்து இருபது இருபது லட்சங்களாக உயர்ந்தது. 460, 480, 500 லட்சம்....இருவரும் ஓயவில்லை. வேகம் கூடிக்கொண்டே போகிறது. இரு அணிகள் போட்டி போடும்போது, ஒரு அணி பின்வாங்கிய பிறகுதான் புதிதாக ஒரு அணி களத்தில் குதிக்கும். இவர்கள் விடாது போட்டிபோட்டு விலையை உயர்த்தியதால், மற்ற அணிகள் பார்வையாளர்களாக மட்டுமே அமர்ந்திருந்தனர். 

#IPLAuction

780, 800, 820 லட்சம்...ஊஹும், இருவரும் விடுவதாயில்லை. போகப்போக கொஞ்சம் வேகம் மட்டும் குறைந்தது. 960...980...10 கோடியை அடைந்திருந்தது உனத்கட்டின் மதிப்பு. பத்தரைக் கோடிக்கு உயர்த்தினார் ஃப்ளெமிங். பதினொன்று...யோசித்து  paddle-யைத் தூக்கினார் ஜிந்தா. அப்போது சென்னையின் கைவசம் 17 கோடி ரூபாய் இருந்தது. இன்னும் சில வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்க வேண்டும். ஓப்பனர் வேறு இல்லை. வேறு வழியில்லாமல் பின்வாங்கினார் ஃப்ளெமிங். உனத்கட் பஞ்சாப்புக்குத்தான் என நினைத்திருந்த வேளையில், சட்டென்று paddle-யை உயர்த்தினார் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர். அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், க்ளைமேக்ஸில் வந்து குட்டையைக் குழப்பியதும், அனைவரும் கைதட்டிச் சிரிக்கத் தொடங்கினர். 18.5 கோடி மட்டுமே மீதம் இருந்ததால், ப்ரீத்தியும் பின்வாங்க, ராயல்ஸ் வீரரானார் உனத்கட். பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி கொடுத்து வாங்கியவர்கள், 11 கோடிக்கு உனத்கட்டை எடுத்து மிரளவைத்தனர்.

இதேபோல், கடைசி கட்டத்தில் கெய்ல்-ன் ஏலமும் கொஞ்சம் கலகலப்பாக இருந்தது. மார்க்கீ வீரர்கள் பட்டியலில் 2 கோடி அடிப்படை விலையோடு இருந்தது கிறிஸ் கெய்ல்-ன் பெயர். முதல் நாளில் 4-வது வீரராக ஏலம் விடப்பட்டார். ஆனால், அவரை எடுக்க யாரும் முன்வரவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் ஏரியாவும் சைலன்ட் மோடிலேயே இருந்தது. இருபது ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் 20 சதங்கள் அடித்துள்ள ஒரு வீரர்...unsold! ஒரு சுற்று அனைத்து வீரர்களும் ஏலம் போய்விட்டனர். ஏலம் போகாத வீரர்களுக்கான மறு ஏலம்...கிறிஸ் கெய்ல்...மீண்டும் அமைதி...மீண்டும் unsold! 3-வது முறையாக அவரது பெயர் படிக்கப்படுகிறது. ஏதோ இம்முறை அவரை வாங்க, பஞ்சாப் முன்வந்தது. கெய்லுக்கான மாரத்தான் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வர, அவரை வாங்கிய பஞ்சாப் அணியை கைத்தட்டலும், புன்னகையும் கலந்து பாராட்டின மற்ற அணிகள். 

Kings XI Punjab

இப்படி ஏலம் கலகலப்பாக இருந்த தருணங்களிலெல்லாம் ப்ரீத்தி இருந்துள்ளார். இந்த உற்சாகம் கிரிக்கெட் ரசிகர்களுக்குப் புதிதல்ல. மொஹாலியில், தரம்சாலாவில், மற்ற கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகளின்போது பார்த்த அதே உற்சாகம்தான். என்ன, வழக்கமாக லீக் சுற்று முடியும்போதே அந்த உற்சாகம் அடங்கிவிடும். இந்த முறையேனும் இந்த உற்சாகம் பைனல் முடியும்வரை நீடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு............!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!