முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் இருந்து டிவில்லியர்ஸ் விலகல்!

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முடித்த கையோடு ஒரு நாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. 6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிகளைப் போன்றே இதுவும் இந்திய அணிக்குச் சவால் வாய்ந்ததாக இருக்கப் போகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

டிவில்லியர்ஸ்

ஜோஹன்னஸ்பெர்கில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி அடித்த பந்தை கேட்ச்சாக மாற்றியபோது டிவில்லியர்ஸிற்கு விரலில் அடிபட்டது. இருப்பினும் வலியுடனே பேட்டிங் செய்தார். ஃபீல்டிங் மட்டும் நிறைய நேரம் செய்ய முடியாது போனது. தற்போது டிவில்லியர்ஸ் விலகிய நிலையில், அவருக்கு என்று மாற்று வீரர் யாரையும் தென் ஆப்பிரிக்கா அறிவிக்கவில்லை.

இந்தத் தொடரில், பிப்ரவரி 10-ம் தேதி நடக்கவிருக்கும் ஒரு நாள் போட்டி, பிங்க் போட்டியாக விளையாடப்படவிருக்கிறது. அதாவது, மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் தங்கள் பச்சை நிற ஜெர்ஸியை அணியாமல் பிங்க் நிற ஜெர்ஸியில் வலம் வருவார்கள். இந்தப் போட்டிக்கு முன் நிச்சயம் ஏபிடி வில்லியர்ஸ் அணிக்குத் திரும்பி விடுவார் என்று தென் ஆப்பிரிக்க தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!