பரம ஏழை, பரம்பரை பணக்காரர்... ஐ.பி.எல் ஏலத்தில் கவனம் ஈர்த்த இரு வீரர்கள்! | Two different stories of ipl stars in ipl auction

வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (31/01/2018)

கடைசி தொடர்பு:20:14 (31/01/2018)

பரம ஏழை, பரம்பரை பணக்காரர்... ஐ.பி.எல் ஏலத்தில் கவனம் ஈர்த்த இரு வீரர்கள்!

வ்வொரு வெற்றிக் கதைக்குப் பின்னாலும் போராட்டம் நிறைந்திருக்கும். மன்சூர் தர்ருக்கோ, வாழ்க்கையே போராட்டம்தான். காஷ்மீரில் பந்திப்பூர் மாவட்டத்தில் சோனாவரி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இவர், ஒரு கிரிக்கெட் வீரர். குண்டுவெடிப்புக்கும் துப்பாக்கிச் சத்தத்துக்கும் இடையே காலை முதல் மாலை வரை கிரிக்கெட் மைதானத்திலேயே கிடப்பார். `கிரிக்கெட், நம்மை என்றாவது ஒருநாள் உயர்த்தும்' என்பது மட்டும்தான் மன்சூரின் ஒரே நம்பிக்கை. வீட்டுக்கு, மன்சூர்தான் மூத்த பிள்ளை. நான்கு தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பு அவருக்கு இருந்தது.

கிரிக்கெட் வீரர் மன்சூர்மன்சூர் தர்

பெற்றோரின் பாரத்தைக் குறைக்க முடிவுசெய்த மன்சூர், முதலில் படிப்புக்கு முழுக்குப்போட்டார். தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேரத்தில் காவலாளி பணி கிடைத்தது. தினமும் 60 ரூபாய் சம்பளம். அதை அப்படியே தாயாரிடம் கொடுத்துவிடுவார். மன்சூரின் வீட்டிலிருந்து அவர் பணிபுரிந்த நிறுவனம், 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. தினமும் சைக்கிளில் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பும் மன்சூர், மைதானத்தில் மாலை வரை கிரிக்கெட் பயிற்சியை மேற்கொள்வார். இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் உறக்கம். இதுதான் மன்சூரின் தினசரி ஷெட்யூல். 

ஸ்ரீநகர் கிரிக்கெட் மைதானங்களில் மன்சூர் அடித்த சிக்ஸர்கள் வெகுபிரபலம். மன்சூர் அடிக்கும் சிக்ஸர்கள் சர்வசாதாரணமாக 100 மீட்டரைத் தாண்டி போய் விழும். காஷ்மீரைச் சேர்ந்த லோக்கல் க்ளப்களுக்கும் மன்சூர் விளையாடிவந்தார். அந்த வகையிலும் அவருக்கு வருமானம் கிடைத்தது. தற்போது, ஐ.பி.எல் தொடரால் மன்சூரின் கஷ்டம் தீர வழி பிறந்துள்ளது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 24 வயதுடைய மன்சூர் தர்ரை 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் விளையாட உள்ள காஷ்மீரைச் சேர்ந்த முதல் வீரர் இவர்.

மன்சூர் தர்ரின் குடும்பம் மட்டுமன்றி, சோனாவாரி கிராமமே மகிழ்ச்சியில் திளைக்கிறது. காஷ்மீர் முழுவதும் பாப்புலராகிவிட்ட மன்சூர் தர்ருக்கு, கடந்த சில நாள்களில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். 

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...

சிக்ஸர் மன்னர்கள் யுவராஜ், தோனி போன்றோர் மன்சூருக்கு மிகவும் பிடித்த  வீரர்கள். ஐ.பி.எல் தொடரில் இவர்களைப்போலவே மாரத்தான் சிக்ஸர்களை விளாச வேண்டும் என்பது மன்சூரின் லட்சியம். மன்சூர் தர்ரின் செல்லப்பெயர் `பாண்டவ்'. ஒருமுறை கபடி விளையாடியபோது, எதிர் அணியைச் சேர்ந்த மூன்று பேரை தோளில் தூக்கிக்கொண்டு வந்தார். சுமார் 6.2 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருக்கிறார். கடந்த சீஸன் முஸ்டாக் அகமது டி-20 தொடரில் மன்சூர் விளாசிய சிக்ஸர்கள், மைதானத்துக்கு வெளியே போய் விழுந்தன. மன்சூரின் சிக்ஸர்கள்தான் அவரை ஐ.பி.எல் வரை கொண்டுவந்திருக்கின்றன. 

இத்தனை நாள்களாகப் பட்ட கஷ்டங்கள் இப்போது தீர்ந்திருப்பதாக நம்பும் மன்சூர், சொந்த கிராமத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வீடு  கட்டத் தொடங்கினார். பணக்கஷ்டம் காரணமாக வீட்டை முழுமையாகக் கட்ட முடியவில்லை. வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் பொருத்த முடியாத நிலை. ஐ.பி.எல் தொடரில் கிடைத்த பணத்தைக்கொண்டு முதலில் வீட்டுக்குக் கதவுகளும் ஜன்னல்களும் பொருத்த முடிவுசெய்திருக்கிறார். சகோதரிகளை நல்ல இடத்தில் திருமணம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதும் மன்சூர் தர்ரின் ஆசை.

அர்யமான் 

மன்சூருக்கு போராட்டம்தான் வாழ்க்கை என்றால், அர்யமானுக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை. செல்வம் கொழிக்கும் வீட்டிலிருந்து கிரிக்கெட் களத்துக்கு வந்தவர் இவர். தந்தையின் பெயர் குமாரமங்கலம் பிர்லா. ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதி. அர்யமான் நினைத்தால், ஐ.பி.எல் அணியையே வாங்கிவிடலாம். தந்தை வழியில் பயணிக்காமல் தனியாகப் பயணித்த அர்யமானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. ஏலத்தின்போது, முதல் சுற்றில் அர்யமானை வாங்க யாரும் முன்வரவில்லை. மதிய உணவுக்குப் பிறகு ஏலம் போகாதவர்கள் பட்டியலில் அர்யமான் பெயரும் இடம்பிடித்திருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் மடக்கிப்போட்டது. 

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்து சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸ், அஜிங்கிய ரகானே போன்ற நட்சத்திரங்களுடன் இணைந்து விளையாடப்போவது, 20 வயது அர்யமானுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அர்யமான், இடதுகைகிரிக்கெட் வீரர் பிர்லா ஸ்பின்னர்; இடது கை பேட்ஸ்மேன். இந்திய முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரேதான், அர்யமானை பட்டை தீட்டியவர். ஒருமுறை மும்பை சிவாஜி பார்க் மைதானத்துக்குத் தாயாருடன் வந்த அர்யமான், பிரவின் ஆம்ரேவைச் சந்தித்து அவரிடம் பயிற்சிபெற விரும்புவதாகக் கூறியிருக்கிறார்.

தந்தை குமாரமங்கலம் பிர்லா என்றவுடன், `உங்களுக்கு பயிற்சி அளிக்க நான் விரும்பவில்லை' என்று ஆம்ரே முகத்திலடித்தார்போல் சட்டெனக் கூறியிருக்கிறார். வருத்தமடைந்த அர்யமான், காரணத்தைக் கேட்டிருக்கிறார். `உங்கள் தந்தை பெரும் பணக்காரர். நீங்கள் கிரிக்கெட்டை ஜாலிக்காக விளையாடக்கூடியவர்கள்' என ஆம்ரே பதில் அளித்திருக்கிறார்.

`என் கிரிக்கெட் திறமையைச் சோதித்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்' என்று அர்யமான் அடக்கமாகக்  கூறியிருக்கிறார். அர்யமானின் கிரிக்கெட் அறிவும் பணிவான அப்ரோச்சும் பிரவின் ஆம்ரேவைக் கவர, அகாடமியில் சேர்த்துக்கொண்டு பயிற்சி அளிக்கத் தொடங்கியிருக்கிறார். தற்போது, மத்தியப்பிரதேச மாநில 23 வயதுக்குட்பட்ட அணியில் அர்யமான்தான் சூப்பர் ஸ்டார். கடந்த சீஸனில் மட்டும் 602 ரன்களை விளாசியிருக்கிறார். 

``அர்யமானுக்கு ஐ.பி.எல் அணியில் இடம் கிடைத்தது ஒன்றும் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. விரைவில் இந்திய அணியில் அர்யமான் இடம்பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை'' என்கிறார் பிரவின் ஆம்ரே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்