கோலியின் அணிக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் டிராவிட் அண்ட் கோ! #U19CWC | Indian senior team has few things to learn from the under 19 lads!

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (01/02/2018)

கடைசி தொடர்பு:10:50 (01/02/2018)

கோலியின் அணிக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் டிராவிட் அண்ட் கோ! #U19CWC

வெளிநாட்டு ஆடுகளங்களில் இந்திய அணியின் பேட்டிங் கேள்விக்குள்ளானது. இந்திய அணியின் தேர்வு கேள்விக்குள்ளானது. கேப்டன் விராட் கோலியின் அணுகுமுறையும் கேள்விக்குள்ளானது. தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்ததற்கு இவையெல்லாம்தான் முக்கிய காரணங்களாகச் சொல்லப்பட்டன. போட்டியைத் தோற்றதுக்கு அவையெல்லாம் முக்கியக் காரணம்தான். ஆனால்...! ஒரு டெஸ்ட் போட்டியின் வெற்றி இன்னிங்ஸ்களைச் சார்ந்தது மட்டுமல்ல. ஒரு நாளின் ஒவ்வொரு செஷனையும் சார்ந்தது. ஒவ்வொரு செஷனிலும் ஆதிக்கம் செலுத்துவது அவசியம். முடிந்தவரை எத்தனை செஷன்களை வெல்கிறோமோ, அதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிர்ணயமாகும். பேட்டிங்கில் சில செஷன்களை இழந்த இந்தியா, பௌலிங்கின்போதும் பல செஷன்களை இழந்தது. தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்தும் சில செஷன்களை இழக்க நேரிட்டது. இத்தனைக்கும் பௌலிங் நன்றாகவே இருந்தது. ஆனாலும், செஷன்களை இழக்கக் காரணம் - ஃபீல்டிங்...ஸ்லிப்பில் தவறவிட்ட கேட்ச்கள். இதற்குப் பாடம் சொல்லித் தருகிறது இந்தியாவின் அண்டர் - 19 அணி.

under 19 world cup

பேட்டிங், பௌலிங் இரண்டைப் பற்றி மட்டுமே பலரும் பேசிக்கொண்டிருக்க, வெகுசிலர் மட்டுமே, இந்திய அணியின் ஸ்லிப் ஃபீல்டிங்கில் இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டினர். 2013-14 தென்னாப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு, இந்த 4 ஆண்டுகளில் ஸ்லிப்பில் மட்டும் சுமார் 50 கேட்ச்களைத் தவறவிட்டுள்ளது இந்தியா. தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, பந்து நின்று மெதுவாக வரும் துணைக்கண்ட ஆடுகளங்களிலும் தொடர்ச்சியாக சொதப்பினார்கள் இந்திய ஃபீல்டர்கள். 'Catches win matches' என்பார்கள். இந்த ஃபீல்டிங் சொதப்பலும் இந்தியா வெற்றி பெற முடியாததற்கு முக்கியக் காரணம்.

‘இந்திய ஃபீல்டர்கள் சுமார்தான்' என்று சொல்லப்பட்ட காலத்திலேயே ஸ்லிப் ஃபீல்டிங்கில் இந்தியர்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டார்கள். டிராவிட், அசார், லட்சுமண் என்று தரமான ஸ்லிப் ஃபீல்டர்களைக் கொண்டிருந்தது இந்திய அணி. இன்றோ, கோலி, ராகுல், ரஹானே, தவான், ஜடேஜா என டாப் கிளாஸ் ஃபீல்டர்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஸ்லிப்பில் கோட்டைவிட்டுக்கொண்டிருக்கிறோம். ஜூலை 2014-ல் இருந்து ஆர்.ஸ்ரீதர்-தான் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். சிறப்பான முடிவுகள் கிடைத்தும்கூட, இந்தக் காலகட்டத்தில் 4 முறை தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், ஃபீல்டிங் சிக்கல்களைச் சரிசெய்ய மாற்றம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. 

டிராவிட்

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்படும்போதெல்லாம் 'இவர்தான் சரியான சாய்ஸ்' என்று ராகுல் டிராவிட் பெயரை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வழிமொழிந்துகொண்டிருப்பார்கள். ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த காலத்திலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டார் டிராவிட். இளம் வீரர்களின் திறனைக் கண்டறிந்தது, அவர்களை ஊக்குவித்து மிகப்பெரிய அரங்குகளில் ஜொலிக்கவைத்தது என அண்டர் 19 அணியின் பயிற்சியாளராகவும் டிஸ்டிங்ஷன் அடித்தார். ஆனால், சீனியர் அணிக்குப் பயிற்சியளிக்க அவர் சரியான ஆள் என்பதை நிரூபிக்கவேண்டுமே? கோலி தலைமையிலான அணியை டிராவிட் எந்த வகையில்  மாற்றக்கூடும் என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனால், சமீபத்தில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி அந்த சந்தேகத்தை நொறுக்கிவிட்டது.

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக எதில் திணறி வருகிறதோ... எதனால் வெளிநாடுகளில் தடுமாறுகிறதோ... அதில் கில்லியாகச் செயல்பட்டார்கள் டிராவிட்டின் இளம் படையினர். ஸ்லிப் ஃபீல்டிங்கில் அவ்வளவு துல்லியம். இஷான் போரெல் பந்துவீச்சில், இம்ரான் ஷா எட்ஜாக, கல்லியில் நின்றிருந்த கேப்டன் ப்ரித்வா ஷா-வை நோக்கிப் பந்து பறந்தது. அவரது இடதுபுறம்  மார்பளவு உயரத்தில் வந்த அந்தக் கேட்ச்சை அவர் பிடித்த அழகு...! கொஞ்சம் விலகிவரும் கேட்ச்சை, நின்றுகொண்டு  'English style'-ல் பிடிக்கத்தான் 95 சதவிகித வீரர்கள் முயற்சிப்பர். ஆனால், Prithvi had other idea! பந்தை நோக்கிப் பாய்ந்து, 'Australian style'-ல் பிடித்தார். அவ்வளவு பிரமாதமான கேட்ச் இல்லைதான். ஆனால், தவான், கோலி, ரஹானே என ஆகச்சிறந்த ஃபீல்டர்களெல்லாம் ஸ்லிப்பில் கேட்ச் தவறவிடுவதையே பார்த்திருந்த நிலையில், 18 வயது ப்ரித்வி ஷா பிடித்த இந்த கேட்ச் கொஞ்சம் ஆச்சர்யம்.

prithvi shaw

அந்தக் காட்சி கண்ணை விட்டு அகல்வதற்குள் இன்னொன்று. அதே பௌலர்... அதே ஷாட்... அதே கல்லி... அதே ப்ரித்வி... ஆனால், இது முற்றிலும் வேறு மாதிரியான கேட்ச். இம்முறை, வலதுபுறம் மிகவும் தாழ்ந்து வந்தது. ப்ரித்வி ரொம்பவே ஷார்ப். சட்டென்று குனிந்து பதற்றமின்றி பிடித்தார். கொஞ்சமும் தடுமாற்றமில்லை. பௌண்டரி எல்லையில் ஷிவம் மாவி பிடித்தது, மிட் ஆன் திசையில் சுப்மான் கில் பாய்ந்து பிடித்தது என இந்திய அணியின் ஃபீல்டிங் வேற லெவல்!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின்போது, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஸ்லிப் ஃபீல்டர் டேரில் கல்லினன், `இந்திய ஃபீல்டர்கள் ஸ்லிப்பில் ஏன் சொதப்புகிறார்கள்’ என்பதை விளக்கிக் கூறியிருந்தார். ஃபீல்டர்கள் கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு நிற்கும் பொசிஷன், ஸ்லிப்பில் நிற்கும்போது ஃபீல்டர்களின் ரியாக்ஷன் டைமை குறைக்கும் என்றிருந்தார். முதலிரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஃபீல்டர்கள் அவ்வாறு நின்றிருந்திருந்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், இந்த அண்டர் 19 வீரர்கள்... ஸ்லிப் ஃபீல்டர்கள் எப்படி நிற்கவேண்டுமோ அப்படி நின்றிருந்தனர். கைகளை சரியான பொசிஷனில் வைத்திருந்தனர். ஸ்லிப் ஃபீல்டிங்கின் இலக்கணத்தை சரியாக கடைப்பிடித்தனர். அவ்வளவு பெர்ஃபெக்ட். டிராவிட் சீனியர் அணிக்குள் நிகழ்த்தப்போகும் மாற்றம் இதுதான்... இந்த பெர்ஃபெக்ஷன்தான்! இந்திய சீனியர் அணி, டிராவிட்டின் இளம் படையிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியதும் இதைத்தான். 

shubman ghill

இந்த பெர்ஃபெக்ஷன் ஃபீல்டிங்கில் மட்டுமல்ல, இந்திய அணியின் பேட்டிங்கின்போதும் வெளிப்பட்டது. சுப்மான் கில் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தாலே அது புரிந்துவிடும். இந்தத் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். நான்குமே 50+ ஸ்கோர்கள். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் சதம். இந்த 4 இன்னிங்ஸ்களில் 113.29 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 341 ரன்கள் குவித்துள்ளார். அதில் 36 பௌண்டரிகள். ஆனால், இரண்டே இரண்டு சிக்ஸர்கள்தான். ரன்கள் தேவை, ஆனால், அதற்காக விக்கெட்டை பணயம் வைக்கக் கூடாது என்பதுதான் டிராவிட் சொன்னது. அவரது இலக்கு ரன்கள்தான். பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்தபோது அவர் அடித்தது வெறும் 7 பௌண்டரிகள்தான். மற்ற 74 ரன்களும் ஓடியே எடுக்கப்பட்டவை. ஆட்டத்தில் அவ்வளவு நேர்த்தி... அவ்வளவு முதிர்ச்சி! காரணம், டிராவிட். 

அண்டர் 19 மற்றும் இந்தியா - ஏ அணிகளின் பயிற்சியாளராக டிராவிட்டின் செயல்பாடுகளைச் சொல்லி மாளாது. அவ்வளவு செய்திருக்கிறார். ஒரு சீனியர் அணியின் பயிற்சியாளர் செய்யாத வேலைகளை, ஜூனியர் வீரர்களுக்காக அவர் செய்துள்ளார். 'உலகக்கோப்பைக்குப் பயிற்சி செய்ய போர்டு பிரிஸிடென்ட் அணி வேண்டும். அதில் சீனியர் வீரர்கள் சிலர் வேண்டும்' எனக்கேட்டு அணியைத் தயார் செய்தார். 2016-ம் ஆண்டு, ஜூனியர் அணிகளுக்கான திட்டங்களை வகுக்க, அன்றைய பயிற்சியாளர் கும்ப்ளே, ஒருநாள் கேப்டன் தோனி, டெஸ்ட் கேப்டன் கோலி உள்ளிட்டவர்களை அழைத்து ஆலோசனைகள் நடத்தினார். களத்துக்குள் கற்றுக்கொடுத்ததைவிட, அதற்கு வெளியே வீரர்களின் சின்னச் சின்ன குணாதிசயங்களை சரிசெய்வதிலும் சிறப்பாகச் செயல்பட்டார். 

டிராவிட்

ஐ.பி.எல் தருணத்தில், “இந்தப் பையன் கேரக்டருக்கு கொஞ்ச நாள் கூட தாங்கமாட்டான்" என்றுதான் ஹர்டிக் பாண்டியாவைப் பற்றிப் பலரும் நினைத்திருந்தனர். அந்தப் பையனை. இன்று அனுபவ, சர்வதேசக் கிரிக்கெட்டராக மாற்றியது - டிராவிட்! ரிசப் பன்ட், உனத்கட், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர் என பல வீரர்களை பட்டைத் தீட்டி தேசிய அணிக்கு அனுப்பிவைத்துள்ளார் டிராவிட்! இப்படிப்பட்டவர் தேசிய அணிக்குத் தேவைதானே...? 2016 அண்டர் 19 உலகக்கோப்பையில் ஃபைனல்வரை அணியை வழிநடத்தியவர், இம்முறையும் ஃபைனலுக்கு அழைத்துச் சென்றதும் ட்விட்டர் புகழ்ந்து தள்ளிவிட்டது. "பாகிஸ்தான் அண்டர் - 19 அணிக்கு டிராவிட் போன்ற பயிற்சியாளரை நியமிக்கவேண்டும்" என்று ரமீஸ் ராஸா அறிக்கை விடுகிறார். கிரிக்கெட் உலகம் முழுதும் அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஜாஹிர் கான், வெளிநாட்டுத் தொடர்களுக்கான ஆலோசகராக டிராவிட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இதற்கு எதிராக சாஸ்திரி குரல் எழுப்ப, கோலி - சாஸ்திரி கூட்டணிக்கு சாதகமான முடிவு எடுக்க முன்வந்தது பி.சி.சி.ஐ. பரத் அருண் பந்துவீச்சுப் பயிற்சியாளரானார். டிராவிட் நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை அந்த முடிவு ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால்... ஃபீல்டிங், பேட்டிங் இரண்டிலும் இந்திய வீரர்களிடம் இன்னும் முதிர்ச்சி வெளிப்பட்டிருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவும் கூட மாறியிருக்கும். பி.சி.சி.ஐ-யின் முடிவுகள் அனைத்தையும் மாற்றிவிட்டன. இனி முடிவுகள் மாறப்போவதில்லை. அதனால், ஒருநாள் தொடருக்கான பயிற்சியின்போது வீடியோ அனாலசிஸ் செஷனில், இந்திய அண்டர் - 19 அணியின் போட்டியைப் பார்த்தால், இந்திய அணிக்கு நல்ல பாடம் கிடைக்கும்!

 

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...


டிரெண்டிங் @ விகடன்